துபையில் நடந்த குடும்ப சங்கமம் !

கடந்த வெள்ளிகிழமை பரபரப்பான் துபாயின் இயந்திர வாழ்க்கைக்கு நடுவில் வழக்கமான வெள்ளிக்கிழமை விடுமுறையை கேளிக்கைகள் நிறைந்த குடும்ப சங்கமமாக அமீரகத் தமிழ் மன்றம் கொண்டாடி மகிழ்ந்தது. சார்ஜா தேசியப் பூங்காவில் வைத்து நடைபெற்ற இந்த குடும்பங்களின் சங்கம விழாவில் நூற்றுக்கும் அதிகமானோர் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். சார்ஜா செல்வதற்காக மன்றத்தின் சார்பில் பேருந்து வசதி செய்யப்பட்டிருந்தது.

காலை உணவுக்குப் பின் துவங்கிய விழாவில் உறுப்பினர்களுக்கான அறிமுகம் முதலில் நிகழ்ச்சியாக அரங்கேறியது. தொடர்ந்து மழலைகளுக்கான விளையாட்டுக்கள், சிறார்களுக்கான விளையாட்டுக்கள், மகளிருக்கான விளையாட்டுக்கள், ஆண்களுக்கான விளையாட்டுக்கள் என தனித்தனிப் பிரிவுகளில் நடந்த போட்டிகளில் மிகுந்த ஆர்வத்துடன் வயது வித்தியாசமின்றி பலரும் கலந்து கொண்டனர். கண்களைக் கட்டிக் கொண்டு தனது பங்காளியைக் கண்டுபிடிக்கும் விளையாட்டைக் குழந்தைகள் செய்தபோது பார்வையாளர்கள் களிப்படைந்து ஆரவாரம் செய்து மகிழ்ந்தனர்.

மதிய உணவுக்குப் பின் ஆண்கள் ஒரு அணியாகவும் பெண்கள் மற்றொரு அணியாகவும் பிரிந்து பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சியில் உற்சாகமாகக் கலந்து கொண்டனர். சார்ஜா தேசியப் பூங்கா முழுமைக்கும் தமிழ் திரை இசைப்பாடல்களே நிறைந்தது போன்ற உற்சாகத்துடன் இந்த நிகழ்வு அரங்கேறியது. வெறும் விளையாட்டுப் போட்டிகள் மட்டும் இல்லாமல் பிரமுகரைக் கண்டுபிடிக்கும் விளையாட்டும் பெரிதும் விரும்பி ரசிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து அன்றாட வாழ்வில் உபயோகிக்கும் ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொல்லைக் கண்டுபிடிக்கும் போட்டி நிகழ்ந்தது. வெறும் போட்டியாக மட்டுமேயில்லாமல் தமிழ் கலைச்சொற்களை அறிமுகப்படுத்தும் தகவலைச் சொல்லும் பயன்பாடுள்ள நிகழ்ச்சியாகவும் இது அமைந்திருந்ததாகக் கலந்து கொண்டவர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

மாலைத் தேநீருக்குப் பின் நடந்த பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினாரகக் கலந்து கொண்டு பேசிய இலங்கையைச் சேர்ந்த கவிஞர் ஜின்னா ஷெர்புதீன், `தமிழால் ஒருங்கிணைந்து ஒரே குடும்பமாக இத்தககைய குடும்ப சங்கமங்கள் நிகழ்வது மகிழ்ச்சியளிப்பதாகவும் இதைப் போன்ற நிகழ்வுகள் தொடர வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். பரிசளித்துப் பேசிய அமைப்பின் ஆலோசகர் ஜெகபர் தனது உரையில் உறுப்பினர்கள் ஆர்வமாகக் கலந்து கொள்ளும் எந்த விழாக்களும் சிறப்பாக அமையுமென்பதற்கு இந்த விழா ஒரு எடுத்துக் காட்டு என்று குறிப்பிட்டார்.

விழாவிற்கான ஏற்பாடுகளை அமைப்பின் துணைத்தலைவர் சிவகுமார், பொருளாளர் நஜிமுதீன் ஆகியோர் செய்திருந்தனர். ஆண்களுக்கான விளையாட்டுப் போட்டிகளை அமைப்பின் செயலர் ஃபாரூக் அலியாரும், மகளிருக்கான போட்டிகளை இணைச் செயலாளர் ஜெஸிலா ரியாஸ் மற்றும் வஹிதா தீன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். அமைப்பின் தலைவர் ஆசிப் மீரான் அனைவருக்கும் நன்றி கூறினார். `ஒரு வித்தியாசமான வெள்ளிக்கிழமை` என்ற கருவோடு உருவாக்கப்பட்ட இந்தக் குடும்ப சங்கம விழா வித்தியாசமான அனுபவமாக இருந்ததாக நிகழ்ச்சியில் கலந்தவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

நன்றி : திண்ணை .காம்

0 comments: