தலை மகன் !


கொல்கத்தா பாரதி தமிழ்ச் சங்கம் சார்பில், முதல்வர் கருணாநிதிக்கு தமிழ்த் தலைமகன்' விருது சென்னையில் 20ந் தேதி வழங்கப்படுகிறது.

தமிழ்நாட்டுக்கு வெளியே முதன் முதலில் அமைக்கப்பட்ட மூத்த தமிழ்ச் சங்கமாகிய கொல்கத்தா பாரதி தமிழ்ச்சங்கம் 70 ஆண்டுகளாக கொல்கத்தாவில் இயங்கி வருகிறது.

இந்த சங்கம், இந்த ஆண்டு முதல்வர் கருணாநிதிக்கு தமிழ்த்தலைமகன்' என்ற சிறப்பு விருதளிக்க தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,


தமிழுக்கு செம்மொழி சீர் பெற்றுத்தந்த பெருந்தகையும் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு காணும் வரலாற்று பெருமை வாய்ந்தவரும் தமிழ் இன மொழி மேம்பாட்டுக்காக தம் வயதில் எழுபது ஆண்டுகளை அள்ளித்தந்தவரும் தமிழகத்தின் முதலமைச்சராய் ஐந்து முறை அரசாள்பவரும் தமிழில் தலைசிறந்த உலக படைப்பாளியுமான முத்தமிழறிஞர் முதல்வர் கலைஞர் அவர்களுக்கு மூத்த தமிழ் சங்கமாகிய கொல்கத்தா பாரதி தமிழ்ச்சங்கம் தமிழ்த் தலைமகன் என்ற சிறப்பு விருதளித்து மகிழ்கிறது'' என்று, கொல்கத்தா பாரதி தமிழ்ச்சங்கம் குறிப்பிட்டு உள்ளது.

விருது வழங்கும் விழா, 20 ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறுகிறது. விழாவுக்கு தொழில் அதிபர் பொள்ளாச்சி நா.மகாலிங்கம் தலைமை வகிக்கிறார். தமிழ் சங்கத்தின் அமைப்பாளர்களும், செயற்குழு உறுப்பினர்களும் ஒன்று கூடி முதலமைச்சருக்கு விருது வழங்குகிறார்கள். ஆலோசகர் ஞானசேகரன் வாழ்த்து மடல் வாசித்து அளிக்கிறார்.

இலக்கியச் செல்வர் குமரிஅனந்தன், முனைவர் அவ்வை நடராசன், நடிகர் சிவகுமார், கவிப்பேரரசு வைரமுத்து ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள். கொல்கத்தா தமிழ்ச் சங்கத்தின் ஆலோசகர் மகாலிங்கம் வரவேற்புரை ஆற்றுகிறார், செயலாளர் ஸ்ரீதரன் நன்றியுரை ஆற்றுகிறார். பேராசிரியை பர்வீன் சுல்தானா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார். நிறைவாக முதலமைச்சர் கலைஞர் ஏற்புரை வழங்குகிறார்.

0 comments: