கடற்கரை கிராமங்கள் கண்ணீரில் மூழ்கின

கடந்த 2004 டிசம்பர் 26 அன்று ஏற்பட்ட சுனாமிப் பேரலையால் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்தனர். நாகை மாவட்டத்தில் மட்டும் 6,065 பேர் இறந்தனர்.

கடற்கரை கிராமங்களில் சுனாமி 5ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. நாகை பழைய பஸ் நிலையத்தில் உள்ள மறைமலை அடிகள் சிலையில் இருந்து துறைமுகம் வரை திமுக சார்பில் அமைதி பேரணி நடந்தது. கனிமொழி எம்.பி. தலைமை வகித்தார்.

அக்கரைப்பேட்டை சிந்தனை சிற்பி மழலையர் தொடக்கப்பள்ளியை சேர்ந்த 29 குழந்தைகள், மற்றும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை சேர்ந்த 53 குழந்தைகள் சுனாமியில் இறந்தனர். இவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இறந்த குழந்தைகளின் புகைப்படங்கள் அடங்கிய போர்டு பள்ளிகளில் வைக்கப்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள், மாணவ, மாணவிகள் மலர்களை ஏந்தியபடி வரிசையாக சென்று அஞ்சலி செலுத்தினர்.

அதிமுக சார்பில் பழைய பஸ் நிலையத்தில் இருந்து கீச்சாம்குப்பம் சுனாமி நினைவு ஸ்தூபி வரை ஓ.எஸ்.மணியன் எம்பி தலைமையில் அமைதி ஊர்வலம் நடந்தது. சுனாமியில் இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டி வேளாங்கண்ணி பேராலய பிரார்த்தனை மண்டபத்தில் நேற்று காலை 7 மணிக்கு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. நாகை மாவட்டத்தில் 50,000 மீனவர்கள் நேற்று கடலுக்கு செல்லவில்லை.

இருநூறு பேர் ஒரே இடத்தில் புதைக்கப்பட்ட காரைக்கால் எல்லையான நண்டலாற்றில் உள்ள நினைவிடத்தில் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.குமரி மாவட்டம்: சுனாமி தாக்குதலில் குமரி மாவட்டத்தில் குழந்தைகள் உட்பட 800 பேர் இறந்தனர். கல்லறைகளில் அஞ்சலி நிகழ்ச்சிகளும், தேவாலயங்களில் நினைவு திருப்பலிகளும் நடத்தப்பட் டன. இதில் பங்கேற்ற பெண்கள் தங்களது குழந்தைகளையும், உறவினர்களையும் நினைத்து கதறி அழுதனர். மீனவர்கள் யாரும் நேற்று கடலுக்கு செல்லவில்லை. கன்னியாகுமரி கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவு ஸ்தூபியில் கலெக்டர் ராஜேந்திர ரத்னூ மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

தூத்துக்குடி: தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியில் மீனவர்கள் கடலில் மலர் அஞ்சலி செலுத்தினர். மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வில்லை.புதுச்சேரி மற்றும் கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு கடலில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. புதுவை கடற் கரையில் முதல்வர் வைத்திலிங்கம் அஞ்சலி செலுத்தினார். கடற்கரை கிராமங்கள் தோறும் அஞ்சலி நிகழ்ச்சிகள் நடந்ததால் மக்கள் கண்ணீரில் மூழ்கி இருந்தனர்.

0 comments: