பஞ்சாபில் கலவரம் போலீஸ் துப்பாக்கி சூடு

பஞ்சாபில் லூதியானா நகரில் மத சொற்பொழிவு கூட்டம் நடத்த எதிர்ப்பு தெரிவித்து சீக்கியர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியானார்.

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் கடந்த சில நாட்களாக வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. வெளி மாநிலங்களில் இருந்து பஞ்சாப் வந்திருந்த கூலித் தொழிலாளர்கள் வன்முறையில் ஈடுபட்டதால் கடந்த வியாழக்கிழமை ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டது. நேற்று காலையில்தான் ஊரடங்கு தளர்த்தப்பட்டது. இந்த நிலையில், அங்கு மீண்டும் வன்முறை வெடித்தது.லூதியானாவில் சீக்கியர் வழிபாட்டுதலமான குருத்வாரா ஒன்றில் அசுதோஷ் மகராஜ் என்ற சீக்கிய மதத் தலைவரின் சொற்பொழிவு நிகழ்ச்சி நேற்று தொடங்குவதாக இருந்தது.

இதற்கு சீக்கியர்களில் ஒரு பிரிவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சொற்பொழிவு நடந்த குருத்வாராவை முற்றுகையிட 600க்கும் மேற்பட்ட சீக்கியர்கள் ஊர்வலமாக வந்தனர். கையில், கத்தி, இரும்பு கம்பி, லத்திகளுடன் ஆவேசமாக வந்த அவர்களை தடுக்க நகரின் பல இடங்களில் போலீசார் இரும்பு தடுப்பு வேலிகளை அமைத்திருந்தனர். ஆனால், போலீசார் மீது சரமாரியாக கற்கள் வீசி தாக்குதல் நடத்திய சீக்கியர், தடுப்புகளை தூக்கிவீசிவிட்டு முன்னேறினர்.

ஒரு கட்டத்தில் நிலைமையை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தி, கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். ஆனாலும் தொடர்ந்து கற்கள் வீசப்பட்டதால் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் குண்டு பாய்ந்து ஒருவர் பலியானார். 11 பேர் காயம் அடைந்தனர்.

இதை தொடர்ந்து, குருத்வாரா அருகே சீக்கியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். வன்முறையை கட்டுப்படுத்த 3 போலீஸ் நிலையங்களின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு மீண்டும் பிறப்பிக்கப்பட்டது.

0 comments: