இந்திய மாணவர்களுக்கு பாதுகாப்பு

ஆஸ்திரேலியாவில் படிக்கும் இந்திய மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்து, இந்திய மனிதவளத்துறை அமைச்சர் கபில் சிபல், ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஸ்டீபன் ஸ்மித்துடன் ஆலோசனை நடத்தினார்.

ஆஸ்திரேலியாவுக்கு வந்துள்ள இந்திய அரசின் மனிதவளத்துறை அமைச்சர் கபில் சிபல் நேற்று 'பெர்த்' என்ற இடத்தில் ஆஸி., வெளியுறவுத்துறை அமைச்சர் ஸ்டீபன் ஸ்மித்தை சந்தித்துப் பேசினார். அதுகுறித்து, ஸ்மித், பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், 'ஆஸி.,யில் தங்கி படிக்கும் இந்திய மாணவர்களின் பாதுகாப்பு, கல்வி ஆகியவற்றுக்கு ஆஸி., அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்துப் பேசப்பட்டது. மேலும், இருதரப்பிலான கல்வி தொடர்பான உறவுகள் பற்றியும் விவாதிக்கப் பட்டது. இருதரப்பு அரசியல் ரீதியான உறவுகளில் கபில் சிபல் உறுதியான ஆதரவோடு உள்ளார்' என்று தெரிவித்தார்.


ஆஸ்திரேலிய துணைப் பிரதமரும், கல்வித் துறை அமைச்சருமான ஜூலியா கில்லார்ட்டையும் கபில் சிபல் சந்திக்க உள்ளார். அதையடுத்து, ஆண்டுதோறும் நடக்கும் இருதரப்பு கல்விக் கூட்டுறவு தொடர்பான அமைச்சக கூட்டத்திலும் அவர் கலந்து கொள்வார். ஆஸ்திரேலிய பல்கலைகளின் பிரதிநிதிகள், மாநில அரசுகளின் பிரதிநிதிகள், இந்தியப் பிரதிநிதிகள் மற்றும் தொழிலதிபர்களையும் அவர் சந்தித்துப் பேச இருக்கிறார்.

0 comments: