அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் ஆண்டு வருமானம் 1.80 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அவர், வரி செலுத்த வேண்டும். அமெரிக்காவில் பெரும் தொழிலதிபர்கள் பெறும் சம்பளத்தை ஒப்பிட்டால், இது மிகவும் குறைவாகும்.
இதைத் தவிர, அவருக்கு வரிகளற்ற வகையில் 22 லட்சம் ரூபாய் கூடுதல் சலுகையும் கிடைக்கிறது. இந்த தொகையை அவர், அலுவலக ரீதியான பயன்பாட்டிற்கே பயன்படுத்த வேண்டும். அதிபர் ஒபாமாவின் தற்போதைய சம்பள வீதப்படி, அவர் ஆண்டுக்கு 95 லட்சம் ரூபாய் ஓய்வூதியம் பெறுவார்.
அமெரிக்க அரசியலமைப்பு சட்டப்படி, அமெரிக்க அதிபரின் சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது. அதில், 'அமெரிக்க அதிபராக ஒருவர் பதவி வகிக்கும் போது, அவரின் சேவைக்காக சம்பளம் வழங்கப்படும். அந்த சம்பளத் தொகை, அவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஆட்சிக் காலத்தில் அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ முடியாது. மேலும், அவர் அதிபராக பதவி வகிக்கும் காலத்தில், அமெரிக்காவில் மற்ற பணிகளில் ஈடுபட்டு சம்பளம் பெறக் கூடாது.
அமெரிக்க அரசியலமைப்பு சட்டத்தின் பொது விதிமுறைகள் படி, அதிபராக பதவி வகிக்கும் ஒருவர், மீண்டும் அதிபராக இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்படும் போது, அவரது சம்பளத்தை அதிகரிக்கலாம்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1999ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29ம் தேதி, அப்போதைய அதிபர் பில் கிளின்டன் ஆட்சிக் காலத்தில், அதிபரின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான சட்டம், அமெரிக்க பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் ஆகிய இரண்டிலும் நிறைவேற்றப்பட்டு, அதில் அவர் கையெழுத்திட்டார். அமெரிக்க சட்டப்படி, அதிபர் ஒபாமாவின் தற்போதைய ஆட்சிக் காலத்தில், அவரது சம்பளத்தை அதிகரிக்க முடியாது. அமெரிக்க அதிபருக்கான சம்பள முறை, கடந்த 1789ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அப்போது, அதிபரின் சம்பளம் 12 லட்சம் ரூபாயாக இருந்தது. அது முதல், 1873, 1909, 1949,1969 மற்றும் 1999 என, ஐந்து முறை மட்டுமே அதிபரின் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment