முதல்வரை யாரும் சந்திக்கலாம்

''அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தை விட, தி.மு.க., ஆட்சிக் காலத்தில் தொழில் வளர்ச்சி அதிகரித்துள்ளது,'' என தி.மு.க., உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசினார். சட்டசபையில் அவர் பேசியதாவது: அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில் தொழில் வளர்ச்சி ஏற்பட்டதாக இங்கே பறைசாற்றிக் கொண்டனர். தி.மு.க., ஆட்சியில் தான், அதிக தொழில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகள் மட்டுமில்லாமல், மாநிலம் முழுவதும் பரவலாக தொழில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. 45 ஆயிரம் கோடி ரூபாய் தொழில் துறையில் மூலதனம் செய்யப்பட்டுள்ளது. மூன்று லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.

இதற்கு முன் முதல்வராக இருந்தவரை, அவ்வளவு எளிதில் யாரும் பார்க்க முடியாது. இப்போதைய முதல்வரையும், துணை முதல்வரையும், அதிகாரிகளையும் தொழிலதிபர்கள் எளிதில், எப்போது வேண்டுமானாலும் சந்திக்கின்ற நிலை இருக்கிறது. அவர்களது குறைகளை தெரிவிக்கின்றனர். அதனால், தொழில்துறை வளர்ச்சி பெறுகிறது.

கடந்த ஆட்சியில் பட்ஜெட் வருகிறது என்றால், என்ன அறிவிப்பு வருமோ என்ற நிலை இருந்தது. ஆனால், இந்த ஆட்சியில் பட்ஜெட்டுக்கு முன்னதாக அனைத்து தரப்பினரையும் அழைத்துப்பேசி, நல்ல பட்ஜெட்டை அன்பழகன் தாக்கல் செய்திருக்கிறார். மூவலூர் ராமாமிர்தம் திருமண உதவி திட்டத்தை, முந்தைய ஆட்சி முடக்கி வைத்திருந்தது. ஆனால், இந்த ஆட்சி வந்ததும் அத்திட்டத்தின் கீழ் ஏராளமான பெண்களுக்கு திருமண நிதி உதவி வழங்கப்படுகிறது. இவ்வாறு அனிதா ராதாகிருஷ்ணன் பேசினார்.

0 comments: