படகு விபத்தில் பலியான 12 பேரும் இலங்கைத் தமிழர்கள்

ஆஸ்திரேலியாவின் வட மேற்குக் கடலில் மூழ்கிய படகில் பயணித்த 12 இலங்கைத் தமிழர்கள் உயிரிழந்துள்ளது உறுதியாகியுள்ளது. இதில் ஒருவரின் உடல் மட்டும் மீட்கப்பட்டுள்ளது. ஏனைய 11 பேரின் உடல்கள் இதுவரை கிடைக்கவில்லை.

படகு விபத்திலிருந்து மீட்கப்பட்ட 27 பேர் கிறிஸ்துமஸ் தீவுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

ஓஷன் வைகிங் என்ற இந்தப் படகில் வந்தவர்கள் இந்தோனேஷியாவில் தங்கியிருந்த இலங்கை தமிழர்கள் உள்ளிட்ட அகதிகள் ஆவர்.

கடலில் மூழ்கிப் போனவர்களைத் தேடும் பணியில் ஆஸ்திரேலிய விமானப்படையும், மீட்புப் படையினரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், அகதிகள் விவகாரம் குறித்து இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன், ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ரூட் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாகவும், அகதிகளை வர விடாமல் தடுப்பது தொடர்பாகவும், ஜான் மெக்கார்த்தி என்ற அதிகாரியை கொழும்புக்கு அனுப்பி வைக்கவும் ரூட் முடிவு செய்துள்ளார்.

கடலில் மூழ்கிய இலங்கைப் படகு, காக்கஸ் தீவுக்கு அருகே தொடர்ந்து செல்ல முடியாமல் சிக்கித் தவித்தது. இதையடுத்து அவசர கால செய்தியை படகின் ஓட்டுநர் அனுப்பினார். இதைத் தொடர்ந்த ஆஸ்திரேலிய விமானக் கண்காணிப்புப் பிரிவினர் கடற்படைக்குத் தெரிவித்து மீட்புக் கப்பலை விரைந்து போகச் செய்தனர். மீட்புக் கப்பல் வந்த பின்னரே கடலில் மூழ்கியவர்களை மீட்கும் பணி நடந்தது.

மீட்கப்பட்டவர்கள் பெரும் குரலில் கதறி அழுததாகவும், அது மனதை இளகச் செய்வதாக இருப்பதாகவும் மீட்புப் படையினர் தெரிவித்தாக செய்திகள் கூறுகின்றன.

இந்தப் படகில் 39 பேர் இருந்ததாக தெரிகிறது.

இதுவரை ஒரு தமிழரின் மரணம் மட்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. 11 பேரைக் காணவில்லை என்று ஆஸ்திரேலிய உளதுறை அமைச்சர் பிரன்டன் ஓ கானர் தெரிவித்துள்ளார்.

இதுவரை 27 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் கிட்டத்தட்ட 16 மணி நேரம் படகின் உடைந்த பாகங்களைப் பிடித்தபடி கடல் நீரில் தத்தளித்துள்ளனர்.

படகு விபத்தில் சிக்கிய தமிழர்கள் குறித்து அகதிகளுக்கான வழக்கறிஞர் பமீலா கர் கூறுகையில், இவர்கள் அனைவரும் நேரடியாக இலங்கையிலிருந்து வந்ததவர்கள் என்றும், மலேசியா அல்லது இந்தோனேசியாவின் பிடியில் சிக்கி விடாமல் இருப்பதற்காக நேரடியாக வந்ததாகவும் தமிழ் அமைப்புகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர் என்றார்.

சிலோன் தமிழர்களுக்கான நீதி மற்றும் சுதந்திரம் என்ற அமைப்பின் தலைவர் ராமலிங்கம் விக்கிரமசிங்கம் கூறுகையில், படகு மூழ்கிய தகவல் பரவியதும் கொழும்பில் உள்ள தமிழர்கள் படகில் இருந்தவர்கள் குறித்து ஆஸ்திரேலியாவில் உள்ள தங்களது உறவினர்கள், நண்பர்களுக்கு தொலைபேசி மூலம் கேட்டறிந்த வண்ணம் உள்ளனர்.

படகு விபத்தில் சிக்கியவர்கள் இலங்கைத் தமிழர்கள் என்பதால் நாங்கள் அச்சத்துடன் உள்ளோம் என்றார்.

அகதிகளை காப்பது நமது பொறுப்பு- ஆஸி. முதல்வர்:

இந் நிலையில் இந்தோனேசியாவில் சிக்கித் தவிக்கும் 78 இலங்கைத் தமிழர்களையும் காக்க வேண்டியது ஆஸ்திரேலியாவின் பொறுப்பாகும். இந்த விவகாரத்தில் பிரதமர் கெவின் ரூட் மேற்கொண்டு வரும் நிலை சரியல்ல என்று மேற்கு ஆஸ்திரேலியா மாகாண முதல்வர் காலின் பர்னெட் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், இந்தோனேசிய துறைமுகத்தில் தவித்துக் கொண்டிருக்கும் 78 இலங்கைத் தமிழர்களையும் உடனடியாக கிறிஸ்துமஸ் தீவுக்கு அனுப்பி அவர்களின் புகலிட கோரிக்கையை ஆஸ்திரேலிய அரசு பரிசீலிக்க வேண்டும்.

ஆனால் இந்த விவகாரத்தில் ஆஸ்திரேலிய அரசு எடுத்து வரும் நிலை சரியானதாக எனக்குத் தோன்றவில்லை. இப்படிப்பட்ட ஒரு நிலை நீடிப்பதை யாரும் விரும்ப மாட்டார்கள்.

ஆஸ்திரேலிய நாட்டு கப்பலில் அந்த 78 உயிர்களும் இன்று தவித்துக் கொண்டுள்ளன. எனவே அவர்களின் உயிரைக் காப்பதும் நமது பொறுப்பேயாகும்.

எனவே அவர்களை கிறிஸ்துமஸ் தீவுக்குக் கொண்டு வந்து பரிசீலிப்பதே சரியானதாக இருக்கும் என்று கூறியுள்ளார் பர்னெட்.

0 comments: