செப். 15ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வருகிற 15ம் தேதி வெளியிடப்படவுள்ளது.


தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1-ம் தேதியை அடிப்படையாக கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யப்படும். 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் பெயர்கள் இந்த பட்டியலில் சேர்க்கப்படும்.


இந்த ஆண்டு வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி வீடு வீடாக நடத்தப்பட்டதால் ஜனவரியில் வெளியிடப்பட வேண்டிய வரைவு வாக்காளர் பட்டியல் ஜூலை 1-ம் தேதி தான் வெளியிடப்பட்டது.


மாநகராட்சி மண்டல அலுவலகங்கள், ஆர்.டி.ஓ., தாலுகா அலுவலகங்களில் வரைவு வாக்காளர் பட்டியல் வைக்கப்பட்டது.இதை தொடர்ந்து விடுபட்ட வாக்காளர்களின் பெயர்களை சேர்க்கவும் நீக்கவும் அவகாசம் தரப்பட்டது. ஜூலை 1-ந்தேதி முதல் 16-ந்தேதிவரை இந்த பணிகள் நடந்தன.


வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அதிகம் பேர் மனு செய்ததால் இறுதி பட்டியல் தயாரிக்க கால அவகாசம் தேவைப்பட்டது.


தற்போது புதிதாக சேர்க்க வந்த வாக்காளர் மனுக்கள் மீது வீடு வீடாக சென்று விசாரணை நடத்தி முடிக்கப்பட்டு விட்டது. இதையொட்டி இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது.


இதுபற்றி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறுகையில், வருகிற 15-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் தமிழ்நாடு முழுவதும் ஒரே நேரத்தில் வெளியிடப்படுகிறது. கலெக்டர் அலுவலகம், சப்-கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம், மாநகராட்சி மண்டல அலுவலங்களில் பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்படும்.


இந்த பட்டியலில் இடம் பெற்ற வாக்காளர்கள்தான் தேர்தலில் ஓட்டு போட முடியும். இனி 2011 ஜனவரியில்தான் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்கும் பணி நடைபெறும் என்றார்.

என் படங்கள் தமிழர்களைப் பெருமைப்படுத்தும் விதமாகவே அமையும்


நான் எந்தப் படம் நடித்தாலும் அது தமிழர்களைப் பெருமைப்படுத்தும் விதமாகவே இருக்கும் என்றார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் .
ரஜினி இரு வேடங்களில் நடித்துள்ள எந்திரன் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை
சத்யம் தியேட்டரில் சனிக்கிழமை காலை நடந்தது.
தயாரிப்பாளர் கலாநிதிமாறன் முன்னிலையில் படத்தின் ட்ரெய்லரை ரஜினி வெளியிட்டார். படத்தின்
இயக்குனர் ஷங்கர் மற்றும் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர் நடிகைகள் மற்றும் தயாரிபாளர்கள், இயக்குனர்கள் உள்பட ஏராளமான திரையுலக பிரமுகர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
ட்ரைலரை வெளியிட்ட பிறகு ரஜினி பேசியது:

"எந்திரன்' சம்பந்தமாக இன்னும் நிறைய விழாக்கள் நடக்கப் போகிறது. அவற்றில் நான் பேச வேண்டும். அதனால் இங்கே கொஞ்சமாக பேசுகிறேன்.

எல்லா புகழும் இறைவனுக்கே. இந்த டிரெய்லரை மலேசியாவில் நடந்த பாடல் வெளியீட்டு விழாவிலேயே திரையிடுவதாக இருந்தோம். 'ரிலீசுக்கு இன்னும் நாள் இருக்கிறது பின்னர் வெளியிடலாமே' என்று ஷங்கர் கேட்டார். கலாநிதி மாறனும் அதற்கு சம்மதித்தார். அவர் ஒவ்வொரு விஷயத்தையும் திட்டமிட்டு திறம்பட செய்து வருகிறார்.

ஷங்கரின் பெரிய கனவை நனவாக்கிஇருக்கிறார் கலாநிதி மாறன். அவர் இல்லாவிட்டால் படம் இந்த அளவுக்கு வந்திருக்காது. 'படத்துக்கு 3 செட் போட வேண்டும். அதற்கு சென்னையில் வசதி இல்லை. ஐதராபாதில் உள்ள ராமோஜிராவ் பிலிம்சிட்டிக்குதான் போக வேண்டும்' என்று சொன்னோம்.

'அப்படியா… உங்களுக்கு எவ்வளவு பெரிய ஃப்ளோர் வேண்டும்' என கலாநிதி கேட்டார். சொன்னோம். ஆறே மாதத்தில் பெருங்குடியில் சிறப்பாக மூன்று ஏசி ஃப்ளோர்களை உருவாக்கிக் கொடுத்தார்.
இரண்டு வருஷம் முன்பு இந்த படம் பற்றி நாங்கள் பேசிக் கொண்டிருந்தபோது, 'தென்னிந்தியாவில் பட புரமோஷனை நான் பார்த்துக் கொள்கிறேன். வட இந்தியாவில் மட்டும் மீடியாவுக்கு நீங்க பேட்டி கொடுத்தால் உதவியாக இருக்கும்', என்று கலாநிதி மாறன் சொன்னார்.
'என் மேல் நம்பிக்கை வைத்து நீங்கள் இவ்வளவு பெரிய படத்தை தயாரிக்கிறீர்கள். கண்டிப்பாக அதை செய்வேன்' என்று சொன்னேன்.

இப்போது படம் முடிந்துவிட்டது. எந்திரன் சம்பந்தமாக பேட்டி வேண்டும் என்று எல்லா மீடியாவில் இருந்தும் கேட்கிறார்கள்.

'ஒரே படத்தை பற்றி திரும்பத் திரும்ப நான் என்ன பேட்டி கொடுப்பது' என்று கலாநிதி மாறனிடம் கேட்டேன்.

அதற்கு அவர் 'நீங்கள் எதுவும் செய்ய வேண்டாம். ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசுங்கள். மற்ற விழாக்களுக்கு சும்மா வந்தால் போதும். ரெட் கார்பெட் எப்போதும் உங்களுக்காக விரிக்கப்பட்டிருக்கும்' என்று பதில் சொன்னார்.

படம் பற்றி முதலில் பேச்சு வந்தபோது, 'நான் பஸ்சில் டிக்கெட் கொடுத்தவன். எனக்கு ஆட்டோ டிரைவர், ரவுடி கேரக்டர்தான் பொருத்தமாக இருக்கும். விஞ்ஞானி கேரக்டருக்கு நான் எப்படி பொருந்துவேன்?' என ஷங்கரிடம் கேட்டேன். நாலு நாள் செட்டுக்குப் போனேன். அதன்பின் அந்த கேரக்டருடன் ஒன்றிவிட்டேன்.

அடுத்தது ரோபோவாக நடிக்க வேண்டும் என்றார். ஒரு இயந்திரமாக எப்படி நடிப்பது என்றேன். அவரே ஹோம் வொர்க் செய்து என்னை நடிக்க வைத்தார். இதில் நான் நடிக்கவில்லை. எல்லாமே ஷங்கர்தான்.

எளிமை ஏன்?

இங்கே வைரமுத்து பேசும்போது, 'நூறடி தாண்டிவிட்டார் ரஜினி. அடுத்தது என்ன?’ என்று கேட்டார்.

அடுத்த படம் பற்றி நான் சிந்திப்பது என் வேலையில்லை. திறமையான இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் சிந்தித்து எனக்கு தரும் வேலையைச் செய்வேன்.

என் எளிமை பற்றி பெருமையாக பேசினார்கள். சிறு உயரத்திலிருந்து விழுந்தால் அடிபடாது. ஆனால் நீங்கள் என்னை பெரிய சிகரத்தில் அமர வைத்துவிட்டீர்கள். இங்கிருந்து விழுந்தால் அட்ரஸ் இல்லாமல் போய்விடுவேன். அதனால் எளிமையாக இருந்தாகணும்.

இளமையாக இருக்க…

ஸ்டைலாக இளமையாக இருக்கிறேன் என்றும் சொன்னார்கள். கொஞ்சம் உடல்பயிற்சி, கொஞ்சம் படிப்பு, கொஞ்சம் சாப்பாடு, கொஞ்சம் பணம் சம்பாதிப்பது என்று இருந்தால் இளமையாக இருக்கலாம்.

இந்த நேரத்தில் ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன். நான் எந்த படத்தில் நடித்தாலும் அது தமிழர்களை பெருமைப்படுத்தும் படமாகவே இருக்கும். ‘எந்திரன்’ அத்தகைய படம்தான்…" என்றார் ரஜினி.

விநாயகனை கைது செய்து சிறைவைத்த தமிழக காவல்துறையினர்!

மூலக்கடவுளாம், முழு முதற்கடவுளாம், எதையும் விக்னம் இல்லாமல் நிறைவேற்றுப வன் எனக் கூறப்படும். விநாயகன் கடவுள் - சிவ பெருமானின் மூத்த மகன் என்று ஆத்திகர் களால் அழைக்கப்படும் விநாயக கடவுளை கோவை செல்வபுரம் கல்லாமேடு பகுதி காவல்துறையினர் கைது செய்து சிறை வைத்தனர்.


விநாயகனை கூண் டோடு தூக்கும் பொழுது தடுத்த ஆண், பெண், குழந்தைகள் உள்பட 146 பேரையும் காவல் துறை யினர் கைது செய்தனர். இதுபற்றிய செய்தி வரு மாறு:


கோவை செல்வபுரம் கல்லாமேடு பண்ணாரி மாரியம்மன் கோவில் பகுதியில், இந்து முன் னணி சார்பில், விநாயகர் சதுர்த்தி விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட் டது. மூன்றரை அடி உயர விநாயகர் பொம்மையை நேற்று முன்தினம் வைத் தனர். சதுர்த்தி விழாவை யொட்டி, 20 ஆண்டு களாக அந்த இடத்தில் இந்து முன்னணியினர் விநாயகர் சிலை வைப் பது வழக்கமாம். கடந்த ஆண்டு இந்து முன்ன ணியைச் சேர்ந்த ஒருவர் இறந்ததால், சிலை வைக்கவில்லையாம்.


இந்த ஆண்டு வழக் கம் போல் சிலை வைப்பதற்கு காவல்துறை யினரிடம் இந்து முன்ன ணியினர் அனுமதி கோரினர். சிலை வைக்கக் கூடாது காவல்துறை எதிர்ப்பு


வேண்டுகோளை நிராகரித்த காவல்துறை யினர் , பிள்ளையார் பொம்மையை வைக்கக் கூடாது என தடை விதித்தனர். இதை ஏற்றுக் கொள்ளாத இந்து முன்னணியினர், பொறுப்பாளர் குணசே கரன் தலைமையில் மூன்றரை அடி விநாயகர் பொம்மையை நேற்று முன்தினம் இரவு அங்கே வைத்தனர். தகவலறிந்த காவல்துறை துணை ஆணையர் நாகராஜன், உதவி ஆணையாளர்கள் குமாரசாமி, பாலாஜி சரவணன் ஆகியோர், "சிலை வைக்கக்கூடாது' என எதிர்ப்பு தெரிவித் தனர். காவல்துறையினரிடம், முறையாக அனுமதி பெறாமல் விநாயகர் சிலையை வைக்கக் கூடாது எனக் கூறி, அப்புறப்படுத்த முயன்ற னர். இதை கவனித்த பெண்கள், விநாயகரை சுற்றிவளைத்து அப்புறப் படுத்தவிடாமல் தடுத் தனர்.


இதையடுத்து, காவல் துறையினரால் அங் கிருந்த இந்து முன்னணி தொண்டர்களை கைது செய்து வேனில் ஏற்றி னர். விநாயகரை சுற்றி வளைத்து நின்ற பெண் களை தவிர்த்து, விநாய கர் சிலையை காவல் துறையினரால் கைப் பற்ற முடியவில்லை. விநாயகன் கைது!


அதனால், கடவுள் விநாயகனையும், பெண் களையும் சேர்த்து கைது செய்து காவல்துறை யினர் வேனில் ஏற்றினர். ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என்று மொத்தம் 146 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்தவர்களை பாது காப்பாக வைக்க கோவை நகரிலுள்ள பல திருமண மண்டபங் களை காவல்துறையினர் தேடி அலைந்தனர். விசேச நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்த தால் காலியாக எதுவும் இல்லை. கோவை அண் ணாமலை ஓட்டல் பகுதியில் வாகனத்தை நிறுத்தி கைது செய்தவர் களை இறங்க அறிவுறுத் தினர். ஒருவரும் இறங்கா மல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், ஸ்டேட் பாங்க் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


காவல்துறையினர், கைது செய்தவர்களை காவல் பயிற்சி பள்ளி மைதானத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு கைது செய்யப்பட்டவர்களை இறக்கி விட்டனர். விநாயகனையும் இறக்கி வைத்தனர். இதை யடுத்து, கைது செய்யப் பட்டவர்களுக்கு மதிய உணவு காவல்துறையின ரால் வழங்கப்பட்டது. வாங்க மறுத்து அனை வரும் பட்டினிப் போராட் டத்தில் ஈடுபட்டனராம்.


நேற்று காலை நைட்டி அணிந்த நிலையில் கைது செய் யப்பட்ட பெண்கள் பலர் உணவருந்தாமல் காவல் பயிற்சி மைதானத் திலேயே வைக்கப்பட் டனர். இதனிடையே இந்து முன்னணி நிரு வாகிகள் மற்றும் காவல் துறையினருக்குமிடையே சிலை வைப்பது தொடர் பாக பேச்சு வார்த்தை நடந்ததாம். இதில் எந்த முன்னேற்றமும் நேற்று மாலை வரை ஏற்பட வில்லையாம்.

இனிய ரம்ஜான் நல்வாழ்த்துக்கள்


ஈத் முபாரக், உள்ளம்கனிந்த இனிய ஈகை பெருநாள் வாழ்த்துக்கள், அன்புடன் அதிரை தமீம் & அதிரை பதுருதீன்

பெருநாள் தொழுகை

மாதம் ஒரு பண்டிகை நாள். ஊருக்கொரு திருநாள். ஒவ்வொரு குடும்பத்திற்கும் அவரவர் நேசிக்கும் அவ்லியாக்களுக்கொரு பெருநாள் என எந்த நன்மையும் இல்லாத பற்பல பெருநாட்களை கொண்டாடி வரும் இன்றைய முஸ்லிம்களுக்கு இறைத்தூதர் நபி அவர்கள் காட்டிச் சென்ற பெருநாட்களை தெளிவாக அறிந்து கொள்வோம்.


நபி அவர்கள் மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து மதீனா குடியேறியபோது மதீனத்து மக்கள் இரு பண்டிகைகளை கொண்டாடி வந்தனர். அதிலொன்று வருடாந்திர விளையாட்டு (sports day) ஆக்கிக்கொண்டனர். இதனை செவியுற்ற நபி நீங்கள் ஆக்கிக்கொண்ட இந்நாட்களை மாற்றி அதைவிடச் சிறந்த இரு நாட்களை அல்லாஹ் உங்களுக்கு தேர்வு செய்துள்ளான், அதில் ஒன்று ஈகைத் திருநாள், மற்றொன்று தியாகத் திருநாள் என்றார்கள். இந்த நபி மொழியை மாலிக்(ரலி) அறிவிக்க அபூதாவூத், பைஹகீ, நஸயீ என்ற நூல்களிலும் இடம்பெற்றுள்ளது.


கடமையான ஃபித்ரா

பசி தாகத்துடன் நோன்பு வைத்த நாம் பெருநாளுக்கு முன் தான தர்மத்தைக் கொண்டு ஆரம்பிக்க வேண்டும். அன்று எவரும் பசி பட்டினியுடன் இருக்கக்கூடாது. அன்று நோன்பு வைப்பதும் தடுக்கப்பட்டது என நபி அவர்கள் அறிவுறுத்தினார்கள்.

நபி அவர்கள் அழைப்பாளர்களை மக்காவின் தெருக்களுக்கு அனுப்பி "தெரிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக ஸதத்துல் ஃபித்ர் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்" என்ற வாசகத்தை கூறச் சொன்னார்கள். ஆதாரம்: திர்மிதி

நோன்பில் நகழ்ந்த தவறிலிருந்து தூய்மைப்படுத்துவதற்காகவும் ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும் என்பதற்காகவும் நபி அவர்கள் ஸதகாத்துல் ஃபித்ரைக் கடமையாக்கினார்கள். ஆதாரம்: அபூதாவூத்

நோன்பாளியிடமிருந்து ஏற்பட்ட வீணான தவறுகள் ஆகியவற்றிலிருந்து தூய்மைப்படுத்துவதற்காகவும், ஏழைகளுக்கு உணவாக இருக்கும் பொருட்டும் நபி அவர்கள் நோன்புப் பெருநாள் தர்மத்தைக் கடமையாக்கினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) அபூதாவுத், இப்னுமாஜா

நபி காலத்தில் உணவுப் பொருட்களில் ஒரு "சாவு" ஃபித்ரா கொடுத்துக்கொண்டிருந்தோம் என நபித்தோழர் அபூசயீத் அல்-குத்ரி(ரலி) கூறும் ஹதீஸ் புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ, நஸயீ, அஹ்மது, இப்னு மாஜ்ஜா போன்ற ஹதீஸ் நூற்களில் காணப்படுகிறது.

முஸ்லிமான ஆண், பெண், பெரியவர், சிறியவர், அடிமை சுதந்திரமாணவர் அனைவர் மீதும் நோன்புப் பெருநாள் தார்மமாக ஒரு ஸாவு கோதுமை அல்லது ஒரு ஸாவு பேரித்தம் பழம் ஆகியவற்றை ''தர்மமாக" கொடுக்கும்படி நபி அவர்கள் கடமையாக்கினார்கள். மேலும் இத்தர்மத்தை, பெருநாள் தொழுகைக்காக மக்கள் வெளியேறுவதற்கு முன்னர் கொடுத்துவிட வேண்டும் என்றும் கட்டளையிட்டார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்

ரமளானின் இறுதியில் உங்கள் நோன்புத் தர்மத்தைக் கொடுத்து விடுங்கள் என்று கூறி இத்தருமத்தை நபி அவர்கள் கடமையாக்கியதாக இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஆதாரம்: அபூதாவூத், நஸயீ

நீங்கள் நேசிக்கும் பொருள்களிலிருந்து தானம் செய்யாதவரை நீங்கள் நன்மை அடைய மாட்டீர்கள்;. எந்தப் பொருளை நீங்கள் செலவு செய்தாலும், நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறிந்தவனாக இருக்கின்றான். அல்குர்ஆன் 3:93

நாம் விரும்பி உண்ணும் உனவுப் பொருட்களையே பெருநாள் ஃபித்ரா தர்மமாக கொடுக்க வேண்டுமேயன்றி நாம் பிரியப்படாததை, விரும்பாததை அளவுக்கதிகமாக கொடுத்தாலும் நாடிய நன்மை கிடைக்காது என்பதை திருக்குர்ஆன் 3:92 நமக்கு தெளிவுபடுத்துகிறது. ஃபித்ரா தர்மத்தை தனது பொறுப்பில் உட்பட்டவர்களான தாய், தந்தை, பாட்டன் பாட்டி, மகன், பேரன் மனைவி ஆகியோருக்கு கொடுக்க முடியாது. இவர் சொந்த பொறுப்பிலிருப்பதால் அவர்களுக்காகவும் நாம் ஃபித்ரா தரவேண்டும். மற்ற உறவினர்களில் ஏழை எளியவர்கள் இருந்தால் அவர்களுக்கு முதலிடமளித்து ஃபித்ரா கொடுக்கவேண்டும்.

வெளியூர்களில் இருக்கும் ஏழை எளியவர்களுக்கு ஓரிரு நாட்கள் முன்பாகவே அனுப்புவதை இஸ்லாம் அனுமதிக்கிறது. நபித்தோழர் இப்னு உமர்(ரலி) தனது ஃபித்ரா தர்மத்தை பெருநாளைக்கு முன்பே அனுப்பி வைத்த நிகழ்ச்சி அபூதாவூதில் இடம்பெற்றுள்ளது. இவ்விதம் ஃபித்ரா தர்மத்தைக் கொண்டு இப்பெருநாள் தொடங்குவதால் இதற்கு ஈதுல் ஃபித்ர் ஈகைப்பெருநாள் என பெயரானது.

பெருநாள் தொழுகையின் நேரங்கள்
ஈத் பெருநாட்களில் குளிர்ந்த காலை நேரங்களில் அவரவர் வீடுகளிலிருந்து வெளிப்பட்டு (தொழ) செல்பவர்களுக்கு அல்லாஹ் அளப்பரிய அருளைப் பொழிகிறான். அறிவிப்பவர்: அனஸ்பின் மாலிக்(ரலி) நூல்: இப்னு அஸாகிர்

இரண்டு ஈட்டிகளின் உயரத்திற்கு சூரியன் உயரும்போது நோன்புப் பெருநாள் தொழுகையை நபி தொழுவார்கள். (ஒரு ஈட்டியின் உயரம் என்பது ஏறத்தாள மூன்று மீட்டர்களாக ஆகும். அறிவிப்பாளர்: ஜுன்துப்(ரலி) நூல்: அஹ்மது இப்னுஹஸன்

நோன்புப் பெருநாளில் தொழச் செல்வதற்கு முன்பே சாப்பிடுவது.

நபி அவர்கள் உண்ணாமல் நோன்புப் பெருநாள் தொழுகைக்கு புறப்பட மாட்டார்கள். ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையைத் தொழுவதற்கு முன் உண்ண மாட்டார்கள் என புரைதா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஆதாரம்: திர்மிதீ

சில பேரிச்சம் பழங்களை உண்ணாமல் நோன்புப் பெருநாளில் (தொழுகைக்கு) நபி அவர்கள் புறப்பட மாட்டார்கள். அறிவிப்பவர்: அனஸ்(ரலி) புகாரி மற்றோர் அறிவிப்பில் அவற்றை ஒற்றைப்படை எண்ணிக்கையில் உண்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

நபி அவர்கள் ஈதுல் பித்ர் (நோன்பு) பெருநாளன்று காலையில் ஏழு பேரித்தம் பழங்களை சாப்பிடாமல் வெளியேற மாட்டார்கள் அறிவிப்பாளர்: ஜாபிர்பின் சம்ரா(ரலி) நூல்: தப்ரானி


மற்றோர் அறிவிப்பில் அவற்றை ஒற்றைப்படை எண்ணிக்கையில் உண்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது. அறிவிப்பாளர்: அனஸ்(ரலி) புகாரி

தக்பீர்

ஈத் பெருநாட்களை அல்லாஹ்வைப் புகழ்வது கொண்டும் தக்பீரைக் கொண்டும் அழகு படுத்துங்கள். அறிவிப்பாளர்: அனஸ்பின் மாலிக்(ரலி) ஆதாரம்: நயீம்

ஈதுல் ஃபித்ர் பெருநாள் தொழுகைக்கு வீட்டிலிருந்து புறப்படும்போது தக்பீர் சொன்னவர்களாகப் புறப்படுவார்கள். தொழும் இடம் (முஸல்லா) வரும் வரை தக்பீர் சொல்வார்கள். அறிவிப்பாளர்: இப்னு உமர்(ரலி) நூல்கள்: ஹாகிம் சுனன்பைஹகீ, இப்னு அஸாகீர்.

பெருநாள் வந்துவிட்டால் நபி அவர்கள் (போவதற்கும் வருவதற்கும்) பாதைகளை மாற்றிக் கொள்வார்கள். புகாரி


நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் (திடலில் தொழுவதால் தடுப்பாக) நபி அவர்களுக்கு முன்னால் ஓர் ஈட்டி நாட்டப்படும். நபி அவர்கள் (அதை நோக்கித்) தொழுவார்கள்.
இப்னு உமர்(ரலி), புகாரி

நபி அவர்கள் (பெருநாள் தொழுகைக்காகத்) தொழும் திடலுக்குப் புறப்படுவார்கள். அவர்களுக்கு முன்பே கைத்தடி எடுத்துச் செல்லப்பட்டுத் தொழும் இடத்தில் அவர்களுக்கு முன்னால் நாட்டப்படும். அதை நோக்கி நபி தொழுவார்கள்.
இப்னு உமர்(ரலி), புகாரி

திடலில் பெருநாள் தொழுகை

பெரும்பாலும் நபி அவர்கள் பெருநாள் தொழுகைகளை திறந்த பொது மைதானத்தில் தொழுதுள்ளார்கள். மழை காலத்தில் பெருநாள் தொழுகையை பள்ளியில் நடத்தினார்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி) அபூதாவூத், இப்னுமாஜ்ஜா


நபி அவர்கள் நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளியில் தொழாமல்) திடலுக்குச் செல்பவர்களாக இருந்தனர். அவர்கள் முதன் முதலில் தொழுகையையே துவக்குவார்கள். தொழுது முடித்து எழுந்து மக்களை முன்னோக்குவார்கள். மக்களெல்லாம் தங்கள் வரிசைகளில் அப்படியே அமர்ந்திருப்பார்கள். அவர்களுக்குப் போதனைகள் செய்வார்கள். (வலியுறுத்த வேண்டியதை) வலியுறுத்துவார்கள்; (கட்டளையிட வேண்டியதை) கட்டளையிடுவார்கள். ஏதேனும் ஒரு பகுதிக்குப் படைகளை அனுப்ப வேண்டியிருந்தால் அனுப்புவார்கள். எதைப் பற்றியேனும் உத்தரவிட வேண்டியருந்தால் உத்தரவிடுவார்கள். பின்னர் (இல்லம்) திரும்புவார்கள். அபூ ஸயீத்(ரலி), புகாரி

பெருநாள்களில் பாங்கு இகாமத் சொல்லப்பட்டதில்லை

ஜாபிர்(ரலி), இப்னு அப்பாஸ்(ரலி) ஆகியோர் கூறினார்கள்: நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் பாங்கு சொல்லப்பட்டதில்லை. புகாரி

நபி அவர்கள் (பெருநாள் தொழுகைக்குத்) தயாராகித் தொழுகையைத் துவக்கினார்கள். பிறகு மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். நபி அவர்கள் (உரை நிகழ்த்தி) முடித்து இறங்கிப் பெண்கள் பகுதிக்குச் சென்று பிலால்(ரலி) உடைய கை மீது சாய்ந்து கொண்டு பெண்களுக்குப் போதனை செய்தார்கள். அறிவிப்பாளர்: ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி), புகாரி

பிலால்(ரலி) தம் ஆடையை ஏந்திக்கொள்ள, பெண்கள் தங்கள் தர்மத்தை அதில் போடலானார்கள். நான், நபி அவர்கள், அபூ பக்ர்(ரலி), உமர்(ரலி), உஸ்மான்(ரலி) ஆகியோருடன் பெருநாள் தொழுகையில் பங்கெடுத்துள்ளேன். அவர்கள் அனைவரும் உரை நிகழ்த்துவதற்கு முன்பே தொழுபவர்களாக இருந்தனர். புகாரி

நபி அவர்கள், அபூ பக்ர்(ரலி), உமர்(ரலி) ஆகியோர் இரண்டு பெருநாள்களிலும் உரை நிகழ்த்துவதற்கு முன் தொழுபவர்களாக இருந்தனர். இப்னு உமர்(ரலி), புகாரி

பெருநாள் தொழுகைக்கு முன்பும் பின்பும் எந்தத் தொழுகையும் இல்லை

நபி அவர்கள் நோன்புப் பெருநாள் தினத்தில் புறப்பட்டு இரண்டு ரக்அத்கள் தொழுதனர். அதற்கு முன்பும் பின்பும் எதையும் அவர்கள் தொழவில்லை. அவர்களுடன் பிலால்(ரலி) அவர்களும் சென்றனர் என இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஆதாரம்: புகாரி

நபி அவர்கள் நோன்புப் பெருநாளில் இரண்டு ரக்அத்கள் தொழதனர். அதற்கு முன்னம் பின்னும் எதையேனும் தொழவில்லை. பிறகு பெண்கள் பகுதிக்கு வந்தனர். அவர்களுடன் பிலால்(ரலி) இருந்தார். தர்மம் செய்வதன் அவசியம் குறித்து அவர்களுக்கு நபி விளக்கினார்கள். பெண்கள் (தங்கள் பொருட்களைப்) போடலானார்கள். சில பெண்கள் தங்கள் கழுத்து மாலையையும் வளையல்களையும் போடலானார்கள். அறிவிப்பவர்:இப்னு அப்பாஸ்(ரலி), புகாரி

முதல் ரக்அத்தில் 7 தக்பீர்களும் இரண்டாவது ரக்அத்தில் 5 தக்பீர்களும்

நபி அவர்கள் பெருநாள் தொழுகையில் முதல் ரக்அத்தில் ஏழு தக்பீர்களும் இரண்டாவது ரக்அத்தில் ஐந்து தக்பீர்களும் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு அம்ரு(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஆதாரம்: அஹ்மத், இப்னுமாஜா

''நோன்புப் பெருநாள் தொழுகையில் முதல் ரக்அத்தில் ஏழு தக்பீரும் இரண்டாவது ரக்அத்தில் ஐந்து தக்பீரும் உள்ளது. அவை இரண்டிற்கும் பின்னரும் கிராஅத் (குர்ஆனை ஓதுதல்) உண்டு'' என நபி அவர்கள் கூறினார்கள் என அம்ரு இப்னு ஷுஐப் தம் தந்தை மற்றும் பாட்டனார் வாயிலாக அறிவிக்கிறார். புகாரி, திர்மிதீ

பெருநாள் தொழுகைக்கு பெண்களை அனுமதிக்க வேண்டும்

நபி அவர்கள் நோன்புப் பெருநாளில் இரண்டு ரக்அத்கள் தொழதனர். அதற்கு முன்னம் பின்னும் எதையேனும் தொழவில்லை. பிறகு பெண்கள் பகுதிக்கு வந்தனர். அவர்களுடன் பிலால்(ரலி) இருந்தார். தர்மம் செய்வதன் அவசியம் குறித்து அவர்களுக்கு நபி விளக்கினார்கள். பெண்கள் (தங்கள் பொருட்களைப்) போடலானார்கள். சில பெண்கள் தங்கள் கழுத்து மாலையையும் வளையல்களையும் போடலானார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி), புகாரி

வீட்டில் தனித்து இருக்கும் நாங்கள் மாதவிடாய் பெண்கள் முதற்கொண்டு இரு பெருநாள் தொழுகைக்கு வெளியே வர ஆணையிடப்பட்டோம். தொழுகையில் கலந்து கொள்ளவும், பிரார்த்தனைகளில் பங்கேற்கவும் அனுமதிக்கப்பட்டோம். ஆனால் மாதவிடாய் பெண்கள் தொழுமிடத்திலிருந்து ஒதுங்கி இருக்க பணிக்கப்பட்டோம். அப்போது ஒரு பெண் அல்லாஹ்வின் தூதரே! எங்களில் எவருக்காவது உடை இல்லையெனில் என்ன செய்வது என வினவினார். அதற்கு நபி அவர்கள் உங்களது தோழிகளிடமிருந்து ஓர் உடையை கடனாக வாங்கி உடுத்தி வாருங்கள் என பதில் கூறினர். அறிவிப்பவர் உம்மு அதிய்யா(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், நஸயி, இப்னுமாஜ்ஜா

நபி அவர்கள் (பெருநாள் தொழுகைக்குத்) தயாராகித் தொழுகையைத் துவக்கினார்கள். பிறகு மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். நபி அவர்கள் (உரை நிகழ்த்தி) முடித்து இறங்கிப் பெண்கள் பகுதிக்குச் சென்று பிலால்(ரலி) உடைய கைமீது சாய்ந்து கொண்டு பெண்களுக்குப் போதனை செய்தார்கள். பிலால்(ரலி) தம் ஆடையை ஏந்திக் கொள்ள, பெண்கள் தங்கள் தர்மத்தை அதில் போடலானார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி), புகாரி

நபி அவர்கள் நோன்புப் பெருநாளில் இரண்டு ரக்அத்கள் தொழதனர். அதற்கு முன்னம் பின்னும் எதையேனும் தொழவில்லை. பிறகு பெண்கள் பகுதிக்கு வந்தனர். அவர்களுடன் பிலால்(ரலி) இருந்தார். தர்மம் செய்வதன் அவசியம் குறித்து அவர்களுக்கு நபி விளக்கினார்கள். பெண்கள் (தங்கள் பொருட்களைப்) போடலானார்கள். சில பெண்கள் தங்கள் கழுத்து மாலையையும் வளையல்களையும் போடலானார்கள். அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ்(ரலி), புகாரி

ஓதிய வசனங்கள்

நபி அவர்கள் இரு பெருநாள் தொழுகையிலும் ஜுமுஆத் தொழுகையிலும் ஸப்பிஹிஸ்ம ரப்பிக்கல் அஃலா (87வது அத்தியாயத்தையும்) ஹல் அதாக்க ஹதீஸுல் காஷியா (88வது அத்தியாயத்தையும்) ஓதி வந்தனர். பெருநாளும், ஜுமுஆவும் ஓரே நாளில் வரும்பொழுது இந்த இரண்டு அத்தியாயங்களை இரண்டு தொழுகையிலும் ஓதுவார்கள். அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர்(ரலி) நூமான் இப்னு பஷீர், நூல்கள்: முஸ்லிம், முஅத்தா, அபூதாவூத், திர்மிதீ, நஸயீ

50வது அத்தியாயத்தையும் 54வது அத்தியாயத்தையும் ஓதியதாக ஓர் அறிவிப்பு முஸ்லிம், முஅத்தா, அபூதாவூத், திர்மிதீ, நஸயீ ஆகிய நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.


பிரார்த்தனை

பருவமடைந்த மற்றும் மாதவிடாய் பெண்களையும் பெருநாள் தொழுகைக்கு வெளியே அனுப்புமாறு நபி அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். நற்பணிகளில் மற்றும் முஸ்லிம்களுடைய துஆவில் அவர்கள் பங்கு பெறுவதற்காக. ஆனால், மாத விலக்கான பெண்கள், தொழும் இடத்தின் ஓரப்பகுதியில் இருக்க வேண்டும். என உம்மு அதிய்யா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

பெருநாளில் நாங்கள் (தொழும் திடலுக்கு) புறப்பட வேண்டுமெனவும் கூடாரத்திலுள்ள கன்னிப் பெண்களையும் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களையும் புறப்படச் செய்ய வேண்டும் எனவும் கட்டளையிடப்பட்டிருந்தோம். பெண்கள் ஆண்களுக்குப் பின்னால் இருப்பார்கள். ஆண்களின் தக்பீருடன் அவர்களும் தக்பீர் கூறுவார்கள். ஆண்களின் துஆவுடன் அவர்களும் துஆச் செய்வார்கள். அந்த நாளின் பரக்கத்தையும் புனிதத்தையும் அவர்கள் எதிர்பார்ப்பார்கள். அறிவிப்பவர்: உம்மு அத்திய்யா (ரலி) நூல்கள்: புகாரீ, முஸ்லிம்

கட்டாயம் பெண்கள் பெருநாள் தொழுகைக்கு வர நபி அவர்கள் ஆனையிட்டிருக்க மாதவிடாய் கண்ணிப்பெண்கள் முதற்கொண்டு அனைவரும் பெருநாளின் பொது தொழுகையின் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதித்து இருக்க நாம் தமிழகத்தில் அவர்களை அனுமதிக்காமலிருப்பது நபி அவர்களின் ஆணைக்கு கட்டுப்படாமையைக் குறிக்கும் என்பதை உணரலாம்.

நாம் பெண்களை தொழுமிடத்திற்கு வராமல் தடுப்பதால்தான் தங்களது போக்கிடமாக அவர்கள் சினிமாக்களையும், தர்ஹாக்களையும் தேடி ஓடுகிறார்கள். அல்லாஹ் நம்மனைவரின் அமல்களை அவனுக்கு உகப்பானதாக ஆக்கி வைப்பானாக! நபி அவர்கள் காட்டிய வழியில் செயல்பட தவ்பீக் தந்தருள்வானாக! ஆமீன்.


உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த

ஜகாத் பெறத் தகுதியுள்ளவர்கள் யார் யார்?

உலகில் தேவையுள்ளவர்கள் என்று ஏராளமானோர் இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் ஒரே தரத்திலிருப்பவர்களல்ல. இவர்களில் நிரந்தர தேவைக்குட்பட்டவர்கள், தற்காலிக தேவையுள்ளவர்கள் என்று வேறுபடுவார்கள். பொருள் வசதியற்றவர்கள் மட்டும் தான் தேவையுடையவர்கள் அந்த வசதியைப் பெற்றவர்களுக்கு எந்த தேவையும் இருக்காது என்றெல்லாம் இஸ்லாம் முடிவு செய்யவில்லை. என்னதான் பொருளாதார வசதி வாய்ப்பைப் பெற்றிருந்தாலும் சூழ்நிலையால் சில நேரம் அவர்கள் கூட தேவையுள்ளவர்களாகி விடலாம் என்பதால் ஜகாத் பெற தகுதியானவர்களை இஸ்லாம் மிக விரிவாக பட்டியலிட்டுள்ளது.


அவர்கள் எட்டு வகையினர்:

(ஜகாத் என்னும்) தானங்கள் தரித்திரர்களுக்கும், ஏழைகளுக்கும், தானத்தை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும், இஸ்லாத்தின் பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்காகவும், அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும், கடன் பட்டிருப்பவர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவோருக்கும்) வழிப்போக்கர்களுக்குமே உரியவை. (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும் - அல்லாஹ் (யாவும்) அறிபவன், மிக்க ஞானமுடையோன். (அல் குர்ஆன் 9:60)

1) பரம ஏழைகள்,

2) ஏழைகள்,

3) இந்தப் பணியில் ஈடுபடும் உழைப்பாளர்கள்,

4) இஸ்லாத்தை மனதார விரும்புபவர்கள்,

5) அடிமைகளாக சிறைப்பட்டவர்கள்,

6) கடன்பட்டுள்ளவர்கள்,

7) ராணுவ வீரர்கள்,

8) பயணிகள் (வழிப்போக்கர்கள்)


இந்த எட்டுத் தேவைகளுக்குத் தான் ஜகாத் என்ற பொருளாதார பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. பொதுவாக எல்லா நற்பணிகளுக்கும் ஜகாத் தொகையை பயன்படுத்தலாம் என்ற போக்கு பரவலாக முஸ்லிம்கள் (குறிப்பாக நற்பணியில் ஈடுபடுபவர்களின்) மனங்களில் விரிந்துள்ளன. அதனால் தான் பள்ளிவாசல்கள், மரதஸாக்கள், திருமணங்கள், இன்னப் பிற நற்பணிகளுக்காக விளம்பரங்கள் - பயான்கள் (பயான்கள் ஜகாத் ஸ்பெஷலாகவே நடக்கும்) வழியாக ஜகாத் திரட்டும் நிலையைப் பார்க்கிறோம். பொதுவாக அனைத்து நற்காரியங்களுக்கும் ஜகாத்தை பயன்படுத்தலாம் என்றால் எட்டு என்ற எண்ணிக்கையையும், அந்த எட்டில் இன்னாரெல்லாம் அடங்குவார்கள் என்ற விளக்கத்தையும் இறைவன் சொல்ல வேண்டும் என்கிற அவசியமில்லை.

ஐந்து நேரத் தொழுகை என்று இறைவன் வரையறுத்து அந்த நேரங்களும் குறிப்பிடப்பட்டு விட்டப் பிறகு எல்லாவித தொழுகைகளும் இதில் அடங்கும் என்று சுன்னத் - உபரி போன்ற தொழுகைகளை எப்படி பர்ளுடன் இணைத்துப் பேச முடியாதோ அது போன்றுதான் இதுவும்.

அனைத்து நற்பணிகளுக்கும் ஜகாத்தை பயன்படுத்தலாம் என்ற சிலரது முடிவால் - பிரச்சாரத்தால் - ஜகாத்துடைய தீர்க்கமான நோக்கம் அடிப்பட்டுப் போய்விடுவதை நாம் மறந்து விடக் கூடாது.

இறைவன் சொன்ன எட்டுப் பேர்களில் நம்மோடு இரண்டற கலந்து வாழ்பவர்கள் மூன்று வகையினர். 1) பரம ஏழைகள் 2) ஏழைகள் 3) கடன்காரர்கள். இவர்கள் சமூகத்தில் மிகைத்து நிற்கும் போது புதிய மதரஸாக்கள் உருவாகின்றன. புதிய பள்ளிவாசல்கள் உருவாவதற்கும், இருக்கும் பள்ளிகளை விஸ்தீரனப்படுத்துவதற்கும் இந்தப் பணம் பயன்படுத்தப்படுகின்றது.

தெளிவாக சொல்ல வேண்டுமானால் எந்த நோக்கத்திற்காக ஜகாத் உருவாக்கப்பட்டதோ அந்த நோக்கம் பின்னுக்குத் தள்ளப்பட்டு எந்த நோக்கத்திற்காக ஜகாத் உருவாக்கப்படவில்லையோ அந்த நோக்கத்திற்காக ஜகாத் தொகை பெருவாரியாகப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த நிலை கட்டாயம் மாற வேண்டும். மாற்றப்பட வேண்டும்.

யாருக்கு எது தேவையோ அதை நன்கறிந்தவன் இறைவன் மட்டும் தான். அவன் 'இன்னாருக்குத் தான் இந்த தொகை செலவழிக்கப்பட வேண்டும்' என்று பட்டியலிட்டு சொல்லி இருக்கும் போது அதை மாற்றிக் கொள்ளும் உரிமை எவருக்கும் இல்லை என்பதை சம்பந்தப்பட்வர்கள் விளங்க வேண்டும்.

இறைவன் யாரைக் குறிப்பிட்டுள்ளானோ அவர்களை செல்வந்தர்கள் கூடுதலாக நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

1) பரம ஏழைகள். (ஃபக்கீர்கள்)

இவர்கள் யார்? விளக்கமே தேவையில்லாத அளவிற்கு பொருளாதாரத்தில் அடிமட்டத்தில் இருப்பவர்கள். அவமானமாக இருந்தாலும் கையேந்துவதைத் தவிர வழி தெரியாதவர்கள். பிச்சைக்காரர்கள் என்று தமிழ் குறியீட்டுடன் அறியப்படும் இவர்கள் இந்தியாப் போன்ற நாடுகளில் கணிசமாக வாழ்கிறார்கள். வீடு வாசல் அற்ற நிலையில் பிளாட்ஃபாரங்களில், ஆங்காங்கே தெருவோரங்களில், சத்திரசாவடிகளில், பிறர் வீட்டுவாசல்; திண்ணைகளில், தர்காக்களில் என்று சுருண்டு படுத்துக் கொள்ளும் இடம் தேடி அலைபவர்கள். முதிய ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் என்று அனைவரும் இதில் அடங்குவர்.

உலகில் நடக்கும் குற்றங்களுக்கு கணிசமாக இந்த பரம ஏழைகளும் துணை நிற்கிறார்கள் என்பதை இந்த இடத்தில் நாம் புரிந்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக சிறுவர்கள் பண்பாடு அற்றுப் போய் பல்வேறு குற்றச் செயல்கள் சில நேரம் கடுங்குற்றச் செயல்கள் என்று பயிற்சிப் பெறுவது இது போன்ற வறுமையில் தான். சமூக துரோகக் கும்பலுக்கு இரையாகிப் போவதும் இத்தகையப் பொழுதுகளில் தான்.

பஸ் பயணங்களில்இ ரயில் பயணங்களின் போது சமூகத்தால் கை விடப்பட்ட இத்தகைய பரம ஏழைகளை இங்கொண்றும் அங்கொண்றுமாக பல இடங்களில் காண முடியும்.

ஒவ்வொரு ஜூம்ஆ பள்ளியிலும் ஜூம்ஆத் தொழுகைக்கு பிறகு இவர்களைக் காண முடியும்.

ஜகாத் திட்டத்தின் முதல் பங்குதாரர்கள் இவர்கள் தான். இவர்களுக்கான மறுவாழ்வு திட்டங்கள் தீட்டப்பட வேண்டும் என்பதற்காகவே ஜகாத் பெற தகுதியுள்ள குழுவில் முதலாவதாக இவர்களை இறைவன் இடம் பெற செய்துள்ளான்.

இத்தகைய ஏழைகள் இருக்கும் வரை 'இஸ்லாம் பொருளாதார திட்டத்தை சரியாக வகுக்கவில்லை' என்ற கருத்தே உலகில் நிலைப்பெறும்.

ஜகாத் நடைமுறைக்கு வந்த ஆரம்ப கால வரலாற்றிலிருந்து இன்றைக்கு முஸ்லிம் ஆட்சியாளர்கள் இருக்கும் நாடுகள் வரை இத்தகைய அடிமட்ட ஏழைகளை பார்ப்பது மிக அறிதாகும். ஏனெனில் அங்கெல்லாம் ஜகாத் தொகையை வைத்து தீட்டப்படும் மறு வாழ்வு திட்டத்தில் இவர்கள் பலன் பெற்று தங்கள் வாழ்க்கைத் தரங்களை உயர்த்திக் கொள்கிறார்கள். இஸ்லாமிய நாடுகளில் ஏழைகள் இல்லையா..? என்ற சந்தேகம் எழுந்தால் 'இருக்கத்தான் செய்கிறார்கள்' என்ற பதிலை முன் வைப்போம். ஆனால் இந்தியா போன்ற நாடுகளில் வாழும் அடிமட்ட ஏழைகளின் தரத்தில் உள்ளவர்களை அங்கெல்லாம் காணமுடியாது.

2) ஏழைகள். (மிஸ்கீன்கள்)

பரம ஏழைகள் என்ற நிலைக்கு அடுத்த இடத்தில் ஏழைகள் என்று இஸ்லாம் குறிப்பிடுகிறது. இந்த இரண்டு வர்கங்களுக்கு மத்தியில் என்ன வித்தியாசம்?

அறிஞர்கள் சில - பல கருத்தோட்டங்களை இங்கு முன் வைத்துள்ளார்கள்.

அவை அனைத்துமே ஒன்றோடொண்று நெறுக்கமான தொடர்புள்ளவையாகவே இருக்கின்றன.

''ஃபக்கீர் - மிஸ்கீன்'' என்ற பதங்கள் குர்ஆனில் பல இடங்களில் இடம்பெற்றுள்ளது. தமிழ் படுத்தும் போது இரண்டுப் பதங்களையுமே ஏழைகள் என்றுதான் குறிப்பிடுகிறார்கள். ஏழைகள் என்பதில் அந்த இரண்டு பிரிவினருமே அடங்கி விடுவார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. என்றாலும் குர்ஆன் அவர்களை இரண்டு பிரிவினராக சொல்லியுள்ளதால் அவர்களை நாம் தனித் தனியாக இனம் கண்டாக வேண்டும்.

முதலில் அந்த பதங்கள் இடம் பெற்றுள்ள வசனங்களைப் பார்ப்போம்.

வறுமையைக் கொண்டு உங்களை ஷைத்தான் பயமுறுத்துகிறான். ஒழுக்கமில்லாச் செயல்களைச் செய்யுமாறும் உங்களை ஏவுகிறான்;.(அல் குர்ஆன் 2:268).

தங்களுக்குரிய பன்களை அடைவதற்காகவும்; குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ் அவர்களுக்கு அளித்துள்ள (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) நாற்கால் பிராணிகள் மீது அவன் பெயரைச் சொல்(லி குர்பான் கொடுப்)பவர்களாகவும் (வருவார்கள்); எனவே அதிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்; கஷ்டப்படும் ஏழைகளுக்கும் உண்ணக் கொடுங்கள்.(அல் குர்ஆன் 22:28).

எவர்கள் தம் வீடுகளையும், தம் சொத்துகளையும் விட்டு அல்லாஹ்வின் அருளையும், அவன் திருப் பொருத்தத்தையும் தேடியவர்களாக வெளியேற்றப்பட்டனரோ அந்த ஏழை முஹாஜிர்களுக்கும் (ஹிஜ்ரத் செய்தவர்களுக்கும் அப்பொருளில் பங்குண்டு); அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் உதவி செய்து கொண்டிருக்கின்றனர் அவர்கள் தாம் உண்மையாளர்கள் ( அல் குர்ஆன் 59:8).

இந்தப் வசனங்களில் ஃபக்கீர் என்ற பதம் இடம் பெற்றுள்ளது. இவற்றில் முதலாவது வசனத்தில் ஷைத்தான் வறுமையைக் கொண்டு ஒழுக்கமில்லா காரியங்களை செய்ய தூண்டுகிறான் என்று இறைவன் குறிப்பிடுகிறான். ஃபக்கீர்தன்மை பகிரங்கமாக சில ஒழுக்கமில்லா செயல்களை செய்ய தூண்டிவிடும் என்று விளங்க முடிகிறது.

இனி மிஸ்கீன் என்ற பதங்கள் இடம் பெறும் சில வசனங்களைப் பார்ப்போம்.

உறவினருக்கு அவருடைய உரிமை (பாத்தியதை)களைக் கொடுப்பீராக! மேலும், ஏழைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும், (அவரவர்களுக்கு உரியதைக் கொடுத்து விடுவீராக!) வீணாகப் (பொருளை) விரயஞ் செய்யாதீர் (அல் குர்ஆன் 17:26).

உறவினர்களுக்கு அவர்கள் பாத்தியதையைக் கொடுத்து வருவீராக. அவ்வாறே ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும் (அவரவர்க்குரியதை கொடுத்து வருவீராக); எவர்கள் அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தை நாடுகிறார்களோ அவர்களுக்கு இது மிக்க நன்மையுடையதாகும்; அவர்கள்தாம் (அவ்வாறு கொடுத்து வருபவர் தாம்) வெற்றியாளர்களாவார்கள். (அல் குர்ஆன் 30:38).

(அடிமையை விடுதலை செய்ய வசதி) எவர் பெறவில்லையோ, அவர், அவ்விருவரும் ஒருவரை ஒருவர் தீண்டுவதற்கு முன் இரண்டு மாதங்கள் தொடர்ச்சியாக நோன்பு நோற்க வேண்டும்; எவர் இதற்கும் சக்தி பெறவில்லையோ, அவர் அறுபது ஏழைகளுக்கு உணவு அளித்தல் - வேண்டும். நீங்கள் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர் மீதும் விசுவாசம் கொள்வதற்காக (இவ்வாறு கட்டளையிடப்பட்டுள்ளது). மேலும் இவை அல்லாஹ் விதிக்கும் வரம்புகளாகும், அன்றியும், காஃபிர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு. (அல் குர்ஆன் 58:4).


இந்த வசனங்களில் 'மிஸ்கீன்' என்ற பதம் இடம்பெறுகிறது. இவர்களை இறைவன் உறவினர்களுடன் ஒப்பிட்டுக்காட்டுகிறான்.

இப்போது இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்று சிந்திப்போம்.

ஃபக்கீர்தன்மை ஒழுக்கமில்லா காரியத்தை செய்ய தூண்டும் என்பதில் பிறரிடம் கையேந்துவதும் அடங்கும். யாசகம் கேட்பதை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கின்றது.

இருப்பினும் கையேந்துபவர்களுக்கு கொடுங்கள் என்ற அறிவுரையையும் வழங்கியுள்ளது. கையேந்தக் கூடாது என்பது கையேந்த வேண்டும் என்ற எண்ணமுள்ளவர்களுக்கு சொல்லப்பட்ட அறிவுரையாகும். அதே சமயம் யாசகம் கேட்டு விட்டால் 'யாசகம் கேட்கக் கூடாது' என்பதை காரணம் காட்டி கொடுக்காமல் இருந்து விடாதீர்கள் கொடுங்கள் என்பது பொருளிருப்பவர்களுக்கு சொல்லப்பட்ட வழிகாட்டல்.

கையேந்தி யாசகம் கேட்கும் நிலையில் உள்ளவர்கள் வெகு சீக்கிரம் குற்றச் செயல்களில் ஈடுபட துவங்கி விடும் வாய்ப்புள்ளது. கையேந்த வேண்டும் என்ற நிலைக்கு வந்து விட்டவர்கள் இடம் நேரம் காலம் பார்க்காமல் கையேந்துவார்கள். சமூக துரோகிகளிடம் சென்று கையேந்தும் நிலை வரும் போது அந்தக் கயவர்கள் தங்களின் சட்ட விரோத காரியங்களுக்கு இவர்களை பயன்படுத்திக் கொள்ளும் நிலை சர்வ தாராளமாக துவங்கி விடும். சமூக துரோகிகளிடமிருந்து கிடைக்கும் பணம் வயிற்றுப் பசியைப் போக்கி சற்று செழிப்பு நிலையை இவர்களின் வாழ்வில் ஏற்படுத்துவதால் தாம் செய்யக் கூடிய காரியங்களின் விளைவைப் பற்றி இந்த பரம ஏழைகள் கண்டுக் கொள்ளவே மாட்டார்கள். தங்கள் செயல்களால் பிற எவர் பாதிக்கப்பட்டாலும் அது பற்றி இவர்களுக்கு எந்தக் குற்றவுணர்வும் இருக்காது.

விபச்சாரம் என்ற மாபாத செயல்களில் பெண்களை ஈடுபடுத்தும் கொடியவர்கள் இத்தகைய வறுமையில் வாடும் பெண்களை இலகுவாக தங்கள் வலையில் விழவைத்து விடுகிறார்கள். கொடிய வறுமை ஒழுக்கமுள்ள பல பெண்களைக் கூட விபச்சாரத்தின் பக்கம் தள்ளி விடுகின்றது.

பெண்குழந்தைகள் சில ஆயிரங்களுக்கு பேசி விற்கப்படுகின்றன. இந்தக் குழந்தைகள் அந்நிய மாநிலங்கள், நாடுகளுக்கு கடத்தப்பட்டு ஈனத் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டு பாழ்படுத்தப்படுகின்றன. தெரிந்த நிலையிலேயே பெற்றோர்களே இந்தக் காரியத்த செய்கிறார்கள் என்றால் வறுமையின் கோரம் எத்தகைய கொடியது?

சற்று நிதானமாக சிந்தித்தால் இந்த பெறு வறுமையால் சிதையும் மனித இனம், இந்த ஃபக்கீர்களால் ஏற்படும் ஒழுங்கீனங்கள் புலப்படும்.

எனவே இவர்களின் புணர்வாழ்விற்கு இஸ்லாம் பெரிய அளவில் அக்கறை எடுத்துக் கொள்கின்றது.

தான தருமங்களை ஊக்குவிப்பதோடு அல்லாமல் இஸ்லாத்தின் பொருளாதார கடமையிலும் இவர்களை கூட்டாளியாக்கி பொருளாதார பங்கீடலில் இவர்களுக்குத் தான் முதலுரிமை என்ற நிலை ஏற்படுத்தியுள்ளது.

எனவே ஜகாத் நிதி முதலாவதாக இத்தகைய பரம ஏழைகளுக்கு அவர்களின் வாழ்வு புணரமைப்பிற்கு ஒதுக்கப்பட வேண்டும்.

இவர்களும் இவர்களுக்கு அடுத்த நிலையில் உள்ளவர்களும் எல்லா ஊர்களிலும் கனிசமாக இருக்கும் போது செல்வந்தர்கள் பிற நற்பணிகளுக்கு தங்கள் ஜகாத்தை ஒதுக்குவது அதன் நோக்கத்தை பாழ்படுத்துவதாகும். எனவே ஜக்காத் பணத்தை பள்ளிவாசல்கள் - மதரஸாக்கள் போன்றவற்றிர்க்கு ஒதுக்குவதை புரந்தள்ளி இத்தகைய ஏழைகளின் நல்வாழ்விற்கு அதை பயன்படுத்த வேண்டும்.

ஜகாத் பெற தகுதியானவர்களில் அடுத்து இடம் பெறும் *மிஸ்கின்* ஏழைகள் என்றால் யார், குர்ஆன் சுன்னா யாரை ஏழை என்று குறிப்பிடுகின்றது என்பதைப் பார்ப்போம் இறைவன் நாடட்டும்.

பெருநாள் தர்மமும் - அதன் நோக்கமும்.

பித்ரு ஸகாத் நோன்பாளி வீணான காரியங்களில் ஈடுபட்டதனால் ஏற்படும் பாவத்தைத் தூய்மைப் படுத்துவதாகவும், ஏழைகளுக்கு உணவுக்கு வாய்ப்பாகவும் அமைந்துள்ளது, யார் அதனை தொழுகைக்கு முன்பே கொடுத்து விடுகிறாரோ அதுதான் ஒப்புக் கொள்ளப்பட்டப் பெருநாள் தர்மமாகும் யார் பெருநாள் தொழுகைக்குப்பின் அதனை வழங்குகிறாரோ அது (பெருநாள் தர்மமாகாது மாறாக அது சாதாரண) தர்மமேயாகும், என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள்- அபூதாவூத், இப்னுமாஜா, தாரகுத்னீ. ஹாகீம்.


பித்ரு ஸகாத் என்பது நோன்பு வைத்திருக்கும்போது நோன்பாளி வீணான காரியங்களில் ஈடுபட்டதற்குப் பரிகாரமாகவும், ஏழைகளின் (அன்றைய) உணவுக்கு வழியாக இருப்பதற்காகவும் நபி (ஸல்) அவர்கள் விதியாக்கினார்கள். அறிவிப்பாளர், இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள்- அபூதாவூத், இப்னுமாஜா, தாரகுத்னீ, பைஹகீ.


நபி (ஸல்) அவர்கள் பெருநாள் தர்மத்தைக் கடமையாக்கி ''இன்றைய தினம் ஏழைகளைத் தேவையற்றவர்களாக்குங்கள்'' என்றும் கூறினார்கள். அறிவிப்பாளர், இப்னு உமர் (ரலி) நூல்கள்-பைஹகீ, தாரகுத்னீ.


பெருநாள் தர்மம் எப்போது வழங்க வேண்டும்...?


பித்ரு ஸகாத்தை பெருநாள் தொழுகைக்கு மக்கள் புறப்படுமுன்பே வழங்கிவிட வேண்டுமென நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். அறிவிப்பாளர், இப்னு உமர் (ரலி) நூல்கள்-புகாரி, முஸ்லிம், அஹ்மத், நஸயீ, அபூதாவுத், திர்மிதீ.


நபித்தோழர்கள் பெருநாளைக்கு ஒருநாள் முன்பாக அல்லது இரண்டு நாட்களுக்கு முன்பாக இத்தர்மத்தை வழங்குபவர்களாக இருந்தனர். அறிவிப்பாளர், இப்னு உமர் (ரலி) நூல்- புகாரி.


பெருநாள் தர்மத்தின் அளவு எவ்வளவு...?


முஸ்லிமான ஆண்கள் பெண்கள், பெரியவர் சிறியவர், அடிமை சுதந்திரமானவர் ஆகிய அனைவருக்கும் பேரீத்தம்பழம் அல்லது கோதுமை ஆகியவற்றிலிருந்து பெருநாள் தர்மம் தலா ஒரு 'ஸாவு' என்று நபி (ஸல்) அவர்கள் நிர்ணயம் செய்தனர். அறிவிப்பாளர், இப்னு உமர் (ரலி) நூல்கள்- புகாரி, முஸ்லிம், அஹ்மத், நஸயீ, அபூதாவுத், திர்மிதீ, இப்னுமாஜா.


நபி (ஸல்) அவர்களின் காலத்தில் நாங்கள் உணவுப் பொருட்களில் ஒரு ஸாவு பித்ருத் தர்மம் வழங்குவோம் அன்றையதினம் எங்களின் உணவாக கோதுமையும் உலர்ந்த திராட்சையும் இருந்தது. அறிவிப்பாளர், அபூஸயீத் (ரலி) நூல்- புகாரி.


அனஸ் (ரலி) என்ற நபித்தோழரிடம் ஒருவர் ஸாவு (அளவைப்) பற்றிக் கேட்டபோது இந்த அளவையே கூறினார்கள், கேள்வி கேட்டவர் நீங்கள் அபூ ஹனீஃபா எனும் பெரியாருக்கு மாற்றமாகச் சொல்கிறீர்களே, என்று கேட்டார் இதைக்கேட்ட அனஸ் (ரலி) அவர்கள் கடும் கோபம் கொண்டு பல நபித்தோழர்களிடம் இருந்த 'ஸாவு' என்னும் அளவைக் கொண்டுவரச் செய்து அதை மக்களிடம் காட்டி 'இதில்தான் நாங்கள் அளந்து பெருநாள் தர்மம் செய்வோம்' என்று கூறினார்கள் அவர்கள் காட்டிய ஸாவு என்பது அவர்கள் கூறிய அளவைக் கொண்டதாகவே இருந்தது. நூல்கள்- தாரகுத்னீ, பைஹகீ.


(இருகைகளையும் சேர்த்து ஒரு பொருளிலிருந்து நான்குமுறை அள்ளி அளந்து போடுவதே ஒரு 'ஸாவு' என்பதன் அளவாகும்)


நபி(ஸல்) காலத்தில் கோதுமை - பேரீத்தப்பழங்கள் பெருநாள் தர்மமாக கொடுக்கப்பட்டதால் நாமும் அதையே கொடுக்க வேண்டும் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது. இன்றைக்கு நம்முடைய உணவு முறை எதுவாக இருக்கிறதோ அதைதான் உணவாக கொடுக்க வேண்டும்.


நபி(ஸல்) காலத்தில் அவர்களின் உணவுப் பொருள்கள் எதுவோ அதுவே பெருநாள் தர்மமாக வழங்கப்பட்டது நாம் மேலே எடுத்துக்காட்டியுள்ள அபூ ஸயீத் (ரலி) அவர்களின் செய்தியிலிருந்து இதை விளங்கலாம்.


இன்றைக்கு நமது உணவு முறையில் அரிசியே பெரும்பங்கு வகிப்பதால் நாம் அரிசியை ஒரு ஸாவு தர்மமாக வழங்கலாம். இதர உணவுப் பொருள்களுக்கும் இதுதான் பொருந்தும்.


உணவுப் பொருளாக இல்லாமல் பணமாக கொடுக்கலாமா.. என்றால் அவ்வாறு கொடுப்பதில் எந்த தவறும் இல்லை என்றேத் தோன்றுகிறது.


'அன்றைய தினம் ஏழைகளைத் தேவையற்றவர்களாக்குங்கள்' என்பது நபிமொழி. வெறும் அரிசியைப் பெற்றுக் கொள்பவர்களின் தேவைப் பூர்த்தியாகி விட்டது என்று நம்மால் சொல்ல முடியாது. ஏனெனில் அரிசி சோறு சாப்பிட வேண்டுமானால் அதற்கு 'குழம்பு' உடனிருக்க வேண்டும். அப்போதுதான் உணவு என்ற அந்தத் தேவைப் பூர்த்தியாகும்.


அரிசியைப் பெற்றிருக்கக் கூடிய ஒரு ஏழை குழம்பிற்கு தேவையுள்ளவராக இருக்கிறார் என்றால் அவருக்கு பெருநாள் தர்மத்தை பணமாக கொடுத்து அவரது 'குழம்புத் தேவை'யை பூர்த்தியாக்கலாம்.


எல்லோரும் அரிசியை தர்மமாக வழங்கும் போது அன்றைய தினம் ஏழைகள் வீட்டில் அரிசிக்குத் தட்டுப்பாடில்லாமலிருக்கும். அன்றைக்கு துணைத் தேவையே அதிகரித்து நிற்கும் என்பதால் பணமாக கொடுப்பது ஹதீஸூக்கு மாற்றமானதல்ல என்பதை நாம் புரிந்துக் கொள்ளலாம்.


அலட்சியமின்றி அனைவரும் பெருநாள் தர்மத்ததை செய்பவர்களாக ஆக வேண்டும்.

போலீஸ் பற்றாக்குறை எதிரொலி : செயல்பட முடியாத போலீஸ் ஸ்டேஷன்

பட்டுக்கோட்டையில் போலீஸார் பற்றாக்குறையால் போக்குவரத்து நெரிசல் மற்றும் அதிகரிக்கும் குற்றங்களை தடுக்க முடியாமல் போலீஸார் அவதிக்குள்ளாகின்றனர்.


பட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள இடங்களான பஸ் ஸ்டாண்ட், மணிக்கூண்டு, அறந்தாங்கி முக்கம், வண்டிப்பேட்டை, வடசேரி ரோடு, மண்டகப்படி, சுப்பையாபிள்ளை சாலை, தலைமை தபால் நிலையம், மைனர் பில்டிங், கைக்காட்டி உட்பட்ட பெரும்பாலான பகுதிகள் நான்குபுற போக்குவரத்து சாலையாக உள்ளது. ஒவ்வொரு இடத்துக்கும் இரண்டுக்கும் மேற்பட்ட போலீஸார் பணியில் நியமித்தால்கூட போக்குவரத்து நெரிசலை சீர் செய்வது சிரமம்.


குறிப்பாக, மணிகூண்டு பகுதியில் நகரின் முக்கிய கடைகள் அனைத்தும் உள்ளதால் வாகனம் வைத்திருப்பவர்கள் சாலையோரங்களில் வாகனத்தை நிறுத்திவிட்டு பொருட்கள் வாங்க செல்வது தவிர்க்க முடியாதது. அதேபோல் மணிக்கூண்டில் இருந்து அறந்தாங்கி முக்கம் செல்லும் சாலை ஒருவழிப்பாதையாக அறிவித்தாலும் அரசு பஸ்கள், கார் வைத்திருப்போர் அதனை பின்பற்றாமல் அவ்வழியை பயன்படுத்துவதாலும், அந்த வழியில் இரண்டு பெரிய வங்கிகள் இருப்பதால் வங்கிக்கு வருபவர்கள் தங்கள் வாகனங்களை சாலையோரங்களில் நிறுத்துவதாலும் எந்நேரமும் அந்த வழியில் 100 மீட்டர் சாலையை கடக்க 30 நிமிடம் ஆகிறது.


அதேபோல் சுப்பையா பிள்ளை சாலையில் இருந்து தலைமை தபால் நிலையம் வரும் வழியில் பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ., ரங்கராஜனுக்கு சொந்தமான மார்க்கெட் உள்ளது. மார்க்கெட் நிர்வாகம், சாலையோர வியாபாரிகளிடம் பணம் வசூலித்தலை எம்.எல்.ஏ., தரப்பினர் செய்வதால், சாலையின் இருபுறத்தையும் ஆக்கிரமித்து சாலையில் நடமாடக்கூட இடம் இல்லாத சூழ்நிலையில், அவர்களை அப்புறப்படுத்த போலீஸார், நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க தயங்குகின்றனர்.


பத்துக்கும் மேற்பட்ட போக்குவரத்து நெரிசல் மிக்க சாலையை ஒழுங்குப்படுத்த பட்டுக்கோட்டை போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷனில் எட்டுக்கும் குறைவான போலீஸாரே உள்ளனர். அதில், ஒருவர் நீதிமன்றப்பணி, ஒருவர் எழுத்தராகவும், மற்றவர்களில் பெரும்பாலானோர் விடுமுறையில் அடிக்கடி செல்வதால் பட்டுக்கோட்டை போக்குவரத்து போலீஸில் பணிக்கு வரும் அதிகாரிகள் படும் சிரமம் மிக அதிகம்.


அதேபோல் பட்டுக்கோட்டை பகுதியில் சமீபகாலமாக திருட்டு மிக அதிகளவில் நடக்க குற்றப்பிரிவில் போலீஸார் இருக்கிறார்களா? என்பதே தெரியவில்லை. சட்டம் ஒழுங்கிலும் சில போலீஸார் பணிக்கு வராமல் உயர்அதிகாரிகளின் கூடுதல் தேவைகளை கவனித்து சுற்றி வருவதால் பட்டுக்கோட்டை போலீஸ் ஸ்டேஷனில் எந்த பிரச்னை என்றாலும் வழக்கு பதிவு செய்யக்கூட மணிக்கணக்கில் காத்துக்கிடக்க வேண்டியுள்ளது என்பதால் பொதுமக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகின்றனர். உயர்அதிகாரிகள் போதிய போலீஸாரை நியமித்து பட்டுக்கோட்டை போலீஸ் ஸ்டேஷன் சிறப்பாக செயல்பட நடவடிக் கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விரைவில் வருகிறது கோயம்பேடு மொத்த மளிகை மார்க்கெட்

கோயம்பேட்டில் பழம், காய்கறி, பூக்களின் மொத்த வியாபாரத்திற்கு மார்க்கெட் உள்ளது போன்று, அனைத்து மளிகை பொருட்களின் மொத்த வியாபாரத்திற்கான மார்க்கெட் விரைவில் அமைகிறது.பொதுமக்கள் மற்றும் சில்லறை வியாபாரிகளின் வசதிக்காக கோயம்பேடு பகுதியில் காய்கறி, பழங்கள் மற்றும் பூக்களுக்கான மொத்த வியாபாரம் செய்யும் நோக்கில் மார்க்கெட் கட்டப்பட்டது.இதே போன்று மிளகாய், மஞ்சள், சர்க்கரை, உளுந்து, கோதுமை, பருப்பு வகைகள் உள்ளிட்ட அனைத்து மளிகை பொருட்களின் மொத்த வியாபாரத்திற்கும் கடைகள் கட்டப்பட வேண்டுமென்ற கோரிக்கையை வியாபாரிகள் எழுப்பி வந்தனர்.

அதனையொட்டி, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் (சி.எம்.டி.ஏ.,) சார்பில் அதற்கான திட்டம் தீட்டப்பட்டது. 8 ஆண்டுகளுக்கு முன்னரே உருவாக்கப்பட்ட, இத்திட்டத்தை கொண்டு மொத்த வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பிடம் சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். கோயம்பேடு பகுதியில் ஒரே வளாகத்தில் 500 மொத்த மளிகை கடைகள் கட்டுவது என தீர்மானிக்கப்பட்டு, வியாபாரிகள் ஒவ்வொருவரிடம் 10 சதவீதம் முன்பணம் பெறப்பட்டது.இத்திட்டத்தை செயல்படுத்துவதில் பல சிக்கல்கள் இருந்தது. இதே பகுதியில் மெட்ரோ ரயில் பணி தொடங்கிய நிலையில்,


இத்திட்டத்தை செயல்படுத்துவதில் குழப்பம் நீடித்தது. இந்நிலையில் தற்போது கோயம்பேடு மார்க்கெட் நிர்வாக அங்காடி குழு (எம்.எம்.சி.,) கட்டடத்தின் அருகாமையில், 14 ஏக்கர் பரப்பளவில் கட்டடப் பணி துவங்கவுள்ளது.குறிப்பாக 18 முதல் 20 பிளாக்குகளாக கட்டப்படும் இந்த மார்க்கெட்டில், ஒவ்வொரு பிளாக்கிற்கும் 22 கடைகள் என கட்டப்படும். சில பிளாக்களில் பெரியளவிலான 12 கடைகள் எனவும் கடைகள் கட்டப்படும். கடைகளை பொறுத்தவரை தரை தளமாகவும், ஒரு சில கடைகள் தரை தளம் மற்றும் முதல் தளம் கொண்டதாகவும் அமையவுள்ளது.


பராமரிப்பதற்கு ஏற்ற வகையில் ஒவ்வொரு பிளாக்கிற்கும் இடையே 10 மீட்டர் இடைவெளி கொண்ட சாலைகள் அமைக்கப்படும். மொத்தத்தில் ஒரே வளாகத்தில் 500 மொத்த வியாபார மளிகைக் கடைகள் அமைப்பதற்கான கட்டடப் பணி, வரும் டிசம்பர் இறுதியில் துவங்கவுள்ளது.கட்டடப் பணியை ஒன்றரை வருடத்திற்கும் முடிக்கும் திட்டம் உள்ளதாகவும், பின் மார்க்கெட்டின் நிர்வாகத்தினை சென்னை மாநகராட்சி துறையினரிடம் ஒப்படைப்பது பற்றியும் ஆலோசித்து வருவதாக சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரம்ஜான் சிந்தனைகள்

முக்கியமான பத்து இரவுகள்: ரம்ஜான் மாதத்தின் கடைசி பத்து இரவுகள் மிகவும் முக்கியமானவை. "லைலத்துல் கத்ர்' எனப்படும் இரவும், இந்த பத்து நாட்களிலேயே உள்ளது. இந்த பத்து இரவுகளில் குறிப்பிட்ட ஒரு இரவை, நாம் லைலத்துல் கத்ர் இரவாகக் கொண்டாலும், நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் கூற்றுப்படி, ""எனக்கு லைலத்துல் கத்ர் இரவு காண்பிக்கப்பட்டது. பின்னர் அது மறக்கடிக்கப்பட்டு விட்டது. எனவே, நீங்கள் கடைசி பத்து இரவுகளில் ஒற்றைப்படையான இரவுகளில் அதனைத் தேடுங்கள்,'' என்றார்கள். "


"ரமலான் கடைசி பத்து நாட்களில் உள்ள ஒற்றை இரவுகளில் லைலத்துல் கத்ர் இரவைத் தேடுங்கள்,'' என்று நாயகத்தின் துணைவியார் ஆயிஷா (ரலி) அம்மையார் அறிவித்திருக்கிறார். கடைசி பத்து நாட்களின் ஒற்றைப்படையான இரவுகளில் இந்த இரவை அடைந்து கொள்ளுமாறு கூறினாலும், அதை அடைந்து கொள்வதற்கு, அண்ணலார் அவர்கள், செயலில் வழிகாட்டும் போது, கடைசி பத்து நாட்கள் முழுவதிலும் முயற்சி செய்து காட்டியுள்ளதைக் காணலாம். "


"ரமலான் கடைசி பத்து நாட்கள் வந்துவிட்டால் நபிகள் நாயகம் அவர்கள் தங்கள் வேட்டியை இறுகக் கட்டிக் கொள்வார்கள். அல்லாஹ்வைத் தொழுது இரவை உயிர்ப்பிப்பார்கள். அல்லாஹ்வை வணங்குவதற்காக தன் குடும்பத்தாரையும் எழுப்பி விடுவார்கள்,'' என்கிறார் ஆயிஷா அம்மையார். ரமலான் மாதத்தில் அதிக அளவு தொழுகை நடத்த வேண்டும். அதிலும் கடைசி பத்து இரவுகளில் மேலும் மேலும் தொழுகையை அதிகப்படுத்த வேண்டும் என்பது இதன் மூலம் புலனாகிறது. நோன்பின் கடைசி பத்துநாட்களில் நாம் இருக்கிறோம். எனவே, தொழுகைகளை அதிகப்படுத்தி, பாவங்களைப் போக்கி, இறைவனின் நற்கருணையைப் பெற வேண்டும் என்பதே இன்றைய ரமலான் சிந்தனை.


சாந்தமுள்ளவராய் மாறுவோம்: நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் இஸ்லாமை, மக்கள் மத்தியில் வளர்த்த காலத்தில், அனுபவித்த தொல்லைகள் கொஞ்ச நஞ்சமல்ல! மெக்காவில் வசித்த, இஸ்லாம் எதிர்ப்பாளரான அபூஜஹல் என்பவன், ""நாயகத்தின் தலையை யார் கொண்டு வருகிறார்களோ, அவர்களுக்கு நூறு ஒட்டகங்களை பரிசாகத் தருவேன்,'' என அறிவித்தான். இதையடுத்து, உமர் என்ற இளைஞர் இந்தப் பொறுப்பை ஏற்றார். அப்போது நாயகம்(ஸல்) அவர்கள், அர்க்கம் மாளிகையில் இருந்தார். உமர் அவரைக் கொல்ல வாளுடன் செல்லும் வழியில், அப்துல்லாஹ் என்பவர் உமரைச் சந்தித்தார்."


"இளைஞனே! நீர் முகம்மதுவைக் கொல்லச் செல்கிறீர். ஆனால், உம் தங்கையும், அவரது கணவரும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுள்ளனர் என்பது உமக்கு தெரியுமா? உம் குடும்பத்தினரைத் திருத்திய பிறகல்லவா, நீர் முகம்மதுவைக் கொல்லச் செல்ல வேண்டும்!'' என்றார். உமருக்கு அது நியாயமாகப்பட்டது. அவரது கோபம் தங்கையை நோக்கித் திரும்பியது. தங்கை வீட்டுக்குச் சென்றார். கதவு தாழிடப்பட்டிருந்தது. உள்ளே குர்ஆன் ஓதும் சப்தம் கேட்டது.


அவர் கதவைத் தள்ளிக்கொண்டு வாளுடன் வீட்டுக்குள் பாய்ந்தார். தங்கை உம்மு ஜலீல் பாத்திமாவும், கணவர் ஸயீதுப்னு ஜைதும் அங்கிருந்தனர். மைத்துனர் மீது அவர் வாளுடன் பாயவே, கணவரைக் காப்பாற்ற பாத்திமா குறுக்கே பாய்ந்தார். அவரது முகத்தில் வாள் கீறி ரத்தம் கொப்பளித்தது. இதைப் பார்த்ததும் உமரின் வெறி அடங்கியது. அவளை இரக்கத்துடன் பார்த்தார். பாத்திமா மிகுந்த தைரியத்துடன்,""அண்ணா! நாங்கள் அண்ணல் நபிகளின் மார்க்கத்தை தழுவியுள்ளோம். உம் வாளுக்குப் பயந்து தடம் மாறமாட்டோம்,'' என்றார்.
தங்கையின் தைரியம் அவரது மனதை மாற்றி விட்டது. ""பாத்திமா! சற்றுமுன் நீர் ஓதியதை எனக்கும் சற்று காட்டுங்களேன்,'' என்றார். பாத்திமா தான் ஓதிய பகுதியைக் கொடுத்தார். அதைப் படித்ததும் அவர் கண்ணீர் வடித்தார்.


மனம் மாறினார். மறுநாள் நபிகளாரைச் சந்தித்து, இஸ்லாத்தில் இணைந்தார். கோபக்காரர்களையும் சாந்த சொரூபிகளாக்கும் வல்லமை கொண்டது குர்ஆன். ரமலான் காலத்தில் மிக அதிகமாக குர்ஆனை ஓத வேண்டும்.


ஊருக்கு மட்டும் உபதேசமா?சிலர் கவர்ச்சியாகப் பேசுவார்கள். ""என் புத்திமதியைக் கேட்டு நடந்து, இந்த ஊரில் நல்லபடியாக வாழ்பவர்கள் எத்தனை பேர் தெரியுமா?'' என்று பெருமையடித்துக் கொள்வார்கள்.உதாரணத்துக்கு ஒரு நண்பர், ""உன் மனைவியோட ஒழுங்கா குடித்தனம் நடத்து! அவள் கேட்டதை வாங்கிக் கொடு. குடிச்சிட்டு வீட்டுக்குப் போகாதே. புகை பிடிக்காதே. அது உடலுக்கு கேடுன்னு தெரிஞ்சும் ஏண்டா செய்றே' என தன் இன்னொரு நண்பரை எச்சரிப்பார். ஆனால், உபதேசம் செய்தவரின் வீட்டில் போய் பார்த்தால், கதை வேறு மாதிரியாக இருக்கும். காரணம்இல்லாமல், மனைவியை உதைப்பது, குடிப்பது...இப்படி நேர்மாறாக நடப்பார்.ஊருக்கு உபதேசம் செய்யும் இந்தப் பாவிகளுக்கு கொடிய நரகம் காத்திருக்கிறது என எச்சரிக்கிறார்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள்.""இப்படி அறிவுரை சொன்னவன் நரக நெருப்பில் தூக்கி எறியப்படுவான். அவனது குடல் வெளிப்பட்டு நெருப்பில் விழும். பிறகு, அக்குடலை எடுத்துக் கொண்டு அவன், கழுதை தன் செக்கில் சுற்றுவதைப் போல நரகத்தில் சுற்றுவான். இதைப் பார்த்து இவனிடம் அறிவுரை பெற்றவர்கள் "நீ நல்லவனாகத்தானே இருந்தாய்.


நல்லதைத் தானே எங்களுக்குப் போதித்தாய். பிறகு ஏன் உனக்கு இந்தக் கதி ஏற்பட்டது?' எனக் கேட்பார்கள்.அதற்கு அவன் "நான் உங்களுக்கு நல்லதைத்தான் போதித்தேன். ஆனால், நல்லதின் அருகில் கூட நான் சென்றதில்லை. தீமைகளை விட்டும் உங்களைத் தடுத்தேன். ஆனால், நான் தீமை புரிந்து கொண்டிருந்தேன்' என்று பதிலளிப்பான்,'' என்று நாயகம்(ஸல்) அவர்கள் சொல்கிறார்கள்.ஊருக்கு உபதேசம் செய்வது எளிது. அந்த உபதேசத்தை சொல்பவரும் கடைபிடித்தால் தான், ரமலான் நோன்பு நோற்றதின் பயனை அல்லாஹ்விடம் பெற முடியும்.


கேள்விக்கு பதில் சொல்ல முடியுமா! கெட்ட பழக்கங்கள் குறித்து குர்ஆன் ஹதீஸ்2:195ல், ""உங்களை நீங்களே அழிவில் ஆழ்த்திக் கொள்ளாதீர்கள்,'' என்றும், ஹதீஸ் 4:29, ""உங்களை நீங்களே கொலை செய்ய வேண்டாம்,'' என்றும் தற்கொலைக்குச் சமமாகச் சுட்டிக்காட்டுகின்றன.இன்றைய உலகச் சூழலில் கெட்ட பழக்கங்களுக்கு இளைஞர்கள் மிக எளிதாக அடிபணிந்து விடுகிறார்கள். சிலர் நோன்பு காலத்தில் கூடஇப்படிப்பட்ட பழக்கங்களை மேற்கொள்வது மிகுந்த மனக்கஷ்டத்தைத் தருகிறது.


மார்க்கத்துக்கு கட்டுப்பட்டு வாழும் நிஜமான முஸ்லிம்இத்தகைய கெட்ட பழக்கங்களை அனுமதிக்கமாட்டார். கெட்ட பழக்கங்கள் உடலுக்கு மட்டுமல்ல, பணத்துக்கும் கேடு என்கிறது குர்ஆன்.ஹதீஸ் 6:141, ""நீங்கள் வீண் விரயம்செய்யாதீர்கள். நிச்சயமாக வீண் விரயம் செய்வோரை அல்லாஹ் நேசிப்பதில்லை,'' என்றும், ஹதீஸ் 17:26, ""நிச்சயமாக வீண்விரயம் செய்வோர் ஷைத்தானின் சகோதரர்களாவர்,'' என்றும் சொல்கிறது.கெட்ட வழிக்கு செலவிடும் காசை நீங்கள் தர்மம் செய்யுங்கள். இல்லாவிட்டால், அல்லாஹ் மரணத்திற்குப் பின் உங்களை மூன்று கேள்விகள் கேட்பான்.""பணத்தை எவ்வாறு சம்பாதித்தாய்? எவ்வழியில் அதனைச் செலவு செய்தாய்? உனது உடம்பை எதில் அழித்தாய்?'' என்பதே அவை.


இதற்கு நாம் பதில் சொல்லியே ஆக வேண்டும். அப்போது, நமது தவறுகளெல்லாம் வெளிப் பட்டு, இறைவனின் முன்னிலையில் தலைகுனிந்து நிற்க வேண்டியிருக்கும்.எனவே, நோன்பு காலத்தில் கெட்ட பழக்கங்களை கைவிட உறுதியெடுங்கள். நோன்பு முடிந்த பிறகு, மீண்டும் அதைப் பிடித்துக் கொள்ளாதீர்கள். உடலைக் கெடுக்கும் பழக்கங்களுக்கு ஆகும் செலவை, ஏழைகளின் கல்வி, மருத்துவச்செலவுக்கு உதவுங்கள். அது நம்மை அல்லாஹ்வின் அருகில் கொண்டு சேர்க்கும்.கெட்ட பழக்கங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே இன்றைய ரமலான் சிந்தனை.


உடையில் கவனம் வேண்டும்: ழுக்கத்தின் அடிப்படை ஆண், பெண் உறவில் தான் இருக்கிறது. குறிப்பாக, ஆண்களுடன் பழகும் விஷயத்தில் பெண்கள் மிகக் கவனமாக இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறது இஸ்லாம். ""நபியே! உம்முடைய மனைவிகள், உம்முடைய புதல்விகள் மற்றும் நம்பிக்கை யாளரின் மனைவிகள் ஆகியோரிடம் கூறும்: அவர்கள் தங்களுடைய துப்பட்டிகளின் முந்தானையை தங்களின் மீது தொங்க விட்டுக் கொள்ளட்டும்.


அவர்களை அறிந்து கொள்வதற்கும், அவர்கள் தொல்லைக்கு ஆளாகாமல் இருப்பதற்கும் இதுவே ஏற்ற முறையாகும். அல்லாஹ் பெரும் மன்னிப்பாளனாகவும், கிருபை மிக்கவனாகவும் இருக்கிறான்,'' என ஒரு வசனத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஒரு பெண் நல்ல அலங்காரம் செய்து கொண்டால் தன் கணவர், திருமண உறவு அல்லாத உறவினர்கள் (சகோதர வகையினர்), வேலையாட்கள், சிறுவர்கள், பிற பெண்கள் மத்தியில் நடமாடலாம். மற்ற ஆண்கள் யாராக இருந்தாலும் அவர்கள் முன்பு பர்தா அணிந்தே வரவேண்டும்.


இப்படி சொல்வது ஒரு பெண்ணின் உரிமையை பறிப்பதற்கான சட்டம் அல்ல. ஆண்களிடமிருந்து அவளது மானத்தைக் காப்பாற்றவே இந்த ஏற்பாடு! பெண்ணின் உடலமைப்பை ஒட்டியும், ஒழுக்கக் கேடில்லாத சமுதாயத்தை உருவாக்கவுமே குர்ஆன் இந்த சட்டத்தை வகுத்துள்ளது. இதை விட்டுவிட்டு சம உரிமை என்ற பெயரில் ஆடம்பர அலங்காரத்துடன் பெண்கள் நடமாடுவது அவர்களுக்கு ஆபத்தையே தரும் என்பது இன்றைய ரமலான் சிந்தனையாக அமையட்டும்.


வாழ்வுக்கு பிரதானமான படிப்பு: ல்லாஹ் இறக்கிய முதல் குர்ஆன் வசனமே... "ஓதுவீராக, உம்மைப் படைத்த இறைவனின் பெயரால். அவன் எழுதுகோல் கொண்டு உமக்கு எழுதக் கற்றுக் கொடுத்தான்..' என்பதுதான். ஆம்... படிப்பே பிரதானம் என்று துவங்குகிறது குர்ஆன். அரபு நாட்டில் கல்வியறிவு குறைந்திருந்த காலத்தில் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களும் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தினார். "


"கல்வி ஒரு காணாமல் போன ஒட்டகம். அதைத் தேடி கண்டறிந்து கொள்ளுங்கள். சீன தேசம் சென்றாவது சீர்கல்வியைத் தேடிக் கொள்ளுங்கள்,'' என்றார்கள் அவர்கள். இஸ்லாமைக் காப்பாற்றும் பத்ரு போர்க்களத்தில் பிடிபட்ட சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டுமானால், ஒவ்வொரு கைதியும், அரபு மக்களில் பத்து பேருக்காவது கல்வி கற்றுத்தர வேண்டும் என்ற நிபந்தனையே விதிக்கப்பட்டது. "


"கல்வியைத் தேடி ஒருவன் புறப்படுகிறான் என்றால், இறைவனின் பாதையில் அவன் பயணம் செய்கிறான்,'' என்கிறார்கள் நாயகம். ஒருமுறை, முஆது என்ற தோழரை, நாயகம் (ஸல்) அவர்கள், ஏமன் நாட்டுக்கு தன் பிரதிநிதியாக அனுப்பினார். அவரிடம், ""அங்கே ஏதேனும் பிரச்னைகள் வந்தால் எப்படி சமாளிப்பீர்கள்?'' என்று கேட்டார்கள். அதற்கு முஆது, "குர்ஆன் விளக்கங்களை அறிந்து தீர்வு காண்பேன்' என்றார்.


"அதற்கும் முடியாமல் போனால்' என்று அண்ணலார் கேட்க, ""உங்கள் சொல் செயல்களில் இருந்து விளக்கம் அறிந்து தீர்ப்பேன்,'' என்றார். ""அதனாலும் முடியாமல் போனால்,'' என அவர்கள் கேட்டதும், ""இந்த இரண்டின் அடிப்படையில் சொந்த அறிவைப் பயன்படுத்தி தீர்வு காண முடியும்,'' என்றார். இதைக் கேட்ட நாயகம்(ஸல்) அவர்கள், ""நீர் சத்தியத்தின் பக்கம் இருக்கிறீர்,'' என்றார்கள். சொந்த அறிவு என்பது கல்வியினால் வருவதாகும். படிப்பு மிகவும் அவசியம் என்பதை உணர்ந்து, மாணவர்கள் அனைவரும் மிக நன்றாகப் படித்து நாட்டுக்கும் வீட்டுக்கும் பெருமை தேடி தர வேண்டும் என்பதும், படிக்காதவர்கள் கல்விக் கூடத்துக்குள் நுழைய வேண்டும் என்பதே இன்றைய ரமலான் சிந்தனையாகட்டும்.


சிரித்து வாழ வேண்டும்: டென்ஷன் என்னும் மனஇறுக்கம், மனித முகங்களில் இருந்து புன்னகையை அப்புறப்படுத்தி பல காலமாகி விட்டது. "என் பணியில் டென்ஷன்' என்று சொல்லிக்கொள்வதை சிலர் பெருமையாகவும், நாகரீகமாகவும் கூட கருதுகின்றனர். "லாபோதெரபி' என்ற வைத்திய முறை கூட மனிதர்களைச் சிரிக்க வைக்க வந்திருக்கிறதாம்! இது சரியான போக்கல்ல! நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் "இன்முகம் காட்டுவது ஒரு தர்மம்' என்று போதித்திருக்கிறார்கள். ஒருநாள் ஒரு மூதாட்டி நபிகளாரைத் தேடி வந்தார். அவரை வரவேற்ற நாயகம்(ஸல்) அவர்கள், "அம்மா! தங்கள் தேவை என்ன?'' என்றார்கள். "


"இறைத்தூதரே! என்னிடம் ஒட்டகமோ, கோவேறு கழுதையோ இல்லை. நெடுந்தூர பயணம் செய்யும் சமயங்களில் மிகவும் சிரமப் படுகிறேன்,''என்றார். அந்த மூதாட்டியின் வேண்டுகோளைக் கேட்டு புன்னகைத்த நாயகம், ""சரி...ஒரு ஒட்டகக்குட்டியை வரவழைத்துத் தருகிறேன்,'' என்றார்கள். அந்தப் பெண்மணி, ""ஒட்டகக்குட்டி என்னுடைய தேவையை நிறைவு செய்யாதே! என்னுடைய சுமைகளைச் சுமந்து செல்ல அதனால் இயலாதே. அதை வைத்துக்கொண்டு என்ன செய்வேன்?'' என்றார். "


"இல்லை, இல்லை...ஒரு ஒட்டகக்குட்டியைத் தான் உங்களுக்கு என்னால் தர முடியும். அதில் தான் நீங்கள் பயணிக்க வேண்டும்,'' என்ற நாயகம்(ஸல்) அவர்கள், ஒரு பணியாளரிடம் கண்ஜாடை காட்டினார்கள். சற்றுநேரத்தில், பணியாளர் ஒரு பெரிய ஒட்டகத்துடன் வந்து நின்றார். ""அண்ணலாரே! தாங்கள் ஒட்டகக்குட்டியைத் தருவதாகத் தானே சொன்னீர்கள்.


இப்போது பெரிய ஒட்டகத்தை வரவழைத்திருக்கிறீர்களே,'' என்றதும், நாயகம் புன்னகைத்தபடியே, ""அம்மையாரே! ஒவ்வொரு ஒட்டகமும் அதன் தாய்க்கு குட்டியாகத்தானே இருந்திருக்கும்,'' என்றார்கள்.இதைக்கேட்டு அந்த அம்மையார் வாய்விட்டு சிரித்தார். நாமும் சிரிக்க வேண்டும், நம்மால் பிறரும் சிரிக்க வேண்டும் என்பதே இன்றைய ரமலான் சிந்தனை.


சொந்தமாகும் சொர்க்கம்: நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சொல்கிறார்கள். ""நீங்கள் இறைவன் ஒருவனையே வணங்க வேண்டும். அவன் விதித்துள்ள ஐங்காலத் தொழுகையையும் ரமலானின் நோன்பையும், ஏழை வரியான ஜக்காத்தையும் நிறைவேற்றி வாருங்கள். அதோடு, இறைவனின் இல்லமான கஃபாவையும் தரிசித்து ஹஜ்ஜை நிறைவேற்றிக் கொள்ளுங்கள். அப்போது சுவனபதி (சொர்க்கம்) உங்களுடையதாகி விடும்,'' என்று. அவர்கள் மேலும் சொன்னார்கள். ""நான் உங்களிடம் பலமான இரண்டு வஸ்துக்களை விட்டுச் செல்கிறேன். அவற்றை நீங்கள் பலமாகப் பற்றிப் பிடித்துக் கொண்டால், ஒருபோதும் வழிதவறி விட மாட்டீர்கள்.


ஒன்று இறைவேதமாகிய திருக்குர்ஆன். மற்றொன்று எனது வாழ்க்கையும், வாய்மொழியுமான "சுன்னத்' ஆகும். இன்று உங்களின் இந்நாட்டிலே, தனது ஆட்சி தகர்ந்து தவிடு பொடியாகி விட்டதைக் கண்டு ஷைத்தான் மனம் உடைந்து ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கிறான். அற்ப விஷயத்திலேனும் நீங்கள் அவனுக்கு வழிபட்டு (உடன்பட்டு) விடுவீர்களாயின், அவன் பெருமகிழ்ச்சி அடைவான். ஆதலின், இறைவனின் ஏகத்துவத்தில் நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கையில் உறுதியுடன் இருந்து கொள்ள வேண்டுமென எச்சரிக்கிறேன்,'' என்றார்கள். ரமலான் நோன்பிருக்கும் ஒவ்வொருவர் மனதிலும் ஓட வேண்டிய சிந்தனை இது. ஏனெனில், இறைவனே எல்லாம்.


இறைவனின் கட்டளைகளுக்கு நாம் பயந்து நடக்க வேண்டும். மாறாக, மனதில் பல மோசமான எண்ணங்களுக்கு ஷைத்தான் வித்திடுவான். அவனது பிடியில் அகப்பட்டு விட்டால், நம்மால் மீளவே முடியாது. குடிக்கக்கூடாது, பிறரைத் துன்புறுத்தக்கூடாது என்றெல்லாம் நமக்கு கட்டளை இறங்கியிருக்கிறது. ஷைத்தானோ, "இதையெல்லாம் செய்' எனத் தூண்டிக்கொண்டே இருப்பான். ஆனால், இறைவனை நினைத்தபடியே, நிஜமான நோன்பிருப்பவர்களைக் கண்டு அவன் ஓடியே போய் விடுவான்.


ரமலான் மாதத்தின் சிறப்பு: ரமலான் மாதத்தில் நோன்புக்குரிய மாதம். சிறப்பாக நோன்பிருந்தபடியே, மாதத்தின் மையப்பகுதியை எட்டிவிட்டோம். சரி! இந்த மாதத்தின் சிறப்புகள் அறிய வேண்டாமா? நபிகள் நாயகம்(ஸல்) அவர்களே அதுபற்றி சொல்கிறார்கள். ""ரமலான் மாதம் வந்துவிட்டால் வானங்களின் கதவுகளும், சொர்க்கத்தின் கதவுகளும் திறக்கப்படுகின்றன. நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்களுக்கெல்லாம் விலங்கிடப்படுகின்றன. சொர்க்கத்தில் எட்டு வாசல்கள் உள்ளன. அதில் ஒன்று ரய்யான்.


அந்த வாசல் வழியாக நோன்பாளிகளைத் தவிர வேறு யாரும் நுழைய மாட்டார்கள். யார் ரமலான் மாதத்தில் ஈமானுடனும், நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ, இன்னும் "லைலத்துல் கத்ர்' இரவிலும் நின்று வணங்குகிறாரோ அவருடைய முன் செய்த சிறிய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. ஆதமுடைய மக்களில் ஒவ்வொரு நல் அமலுக்கும் நோன்பைத் தவிர, பத்திலிருந்து எழுநூறு நன்மைகள் வரை கொடுக்கப்படுகிறது. நோன்புப் பெருநாள், ஹஜ்ஜூப் பெருநாள் ஆகிய இரண்டு இரவுகளில், எவர் விழித்திருந்து தொழுகை புரிகின்றாரோ, அவருடைய உள்ளம் கியாம நாளிலே விழிப்புடன் இருக்கும்,'' என்கிறார்கள் அண்ணலார். ""நோன்பு எனக்குரியது. அதற்கு நானே கூலி கொடுப்பேன். ஏனென்றால், எனக்காகவும், என் திருப்திக்காகவும் பசித்திருந்தான். தன் இச்சைகளை அடக்கியிருந்தான். மேலும், நோன்பு திறக்கும் போதும், தன் இறைவனை சந்திக்கும் போதும் நோன்பாளிக்கு இருவகை சந்தோஷம் உள்ளது,'' என்கிறான் அல்லாஹ். எனவே இந்த மாதத்தின் சிறப்பை உணர்ந்து, இன்னும் வரும் நாட்களிலும் மிகச்சிறப்பாக நோன்பிருந்து, அல்லாஹ்வின் அருள் பெறுவோம்.


இறைவன் நினைப்பதே நடக்கும்: நாயகம்(ஸல்) அவர்களின் போதனைகளைப் பிடிக்காத அவரது எதிரிகள், அவரைக் கொன்றுவிட திட்டமிட்டனர். ஒருநாள் இரவில், கொலை முயற்சி நடந்த போது, இருளைப் பயன்படுத்தி தப்பி, தம் நண்பர் அபூபக்கர் அவர்களின் இல்லத்திற்குச் சென்றார்கள். அவரையும் அழைத்துக்கொண்டு மெக்காவை விட்டு வெளியேறி, தௌர் என்ற மலைக்குகைக்கு சென்று ஒளிந்து கொண்டனர். எதிரிகள் அந்த இடத்தையும் மோப்பம் பிடித்து வந்துவிட்டனர். குகைக்குள் புகுந்து நாயகம்(ஸல்) அவர்களைத் தேடிப்பிடிக்க, எதிரிகள் முடிவெடுத்தனர். அப்போது அபூபக்கர் அவர்கள், ""நாம் இங்கிருப்பதை எதிரிகள் எப்படியோ கண்டுபிடித்து வந்துவிட்டனர். அவர்களிடம் சிக்கி, நாம் இறப்பது உறுதி,'' என்றார்கள். நாயகம்(ஸல்) அவர்கள் அபூபக்கரிடம், ""தோழரே! பயப்பட வேண்டாம். நாம் இருவராக இருந்தால் அல்லவா அவர்களால் நம்மைக் கொல்ல முடியும். இங்கே, நம்மைத் தவிர மூன்றாவதாகவும் ஒருவர் இருக்கிறார்,'' என்றார்கள். அபூபக்கர் அவர்கள் ஆச்சரியத்துடன் நாயகம்(ஸல்) அவர்களைக் கேள்விக்குறியுடன் நோக்கவும், அவர்களது எண்ணத்தைப் புரிந்து கொண்ட நாயகம், ""எல்லாம் வல்ல இறைவன் நம்மோடு இங்கிருக்கிறான். எனவே, அச்சம் என்ற சொல்லுக்கே அவசியமில்லை,'' என்றார்கள். இதற்குள் எதிரிகள் உள்ளே புகுந்தனர். நாயகம் (ஸல்) அவர்கள் உள்ளே சென்ற பிறகு, எதிரிகள் உள்ளே நுழைவதற்குள், நுழைவு வாயிலில் ஒரு சிலந்தி வலை பின்னிவிட்டது. அப்போது ஒரு எதிரி தன் நண்பர்களிடம், ""இங்கே சிலந்தி வலை பின்னியிருக்கிறது. நாம் தேடி வந்தவர்கள் உள்ளே புகுந்திருந்தால், குகைக்குள் நுழையும் போது இது அறுபட்டிருக்க வேண்டும். எனவே, அவர்கள் குகைக்குள் இருக்க வாய்ப்பே இல்லை,'' என்றான். இதை ஏற்ற மற்றவர்கள் திரும்பிச் சென்றனர். இறைவன் நினைப்பது மட்டுமே நடக்கும் என்பதே இன்றைய ரமலான் சிந்தனை.


தர்மம் செய்யும் குணம் வேண்டும்: ரமலான் நோன்பு நோற்கும் போது, காலை முதல் மாலை வரை பிரச்னையில்லை. ஏதும் சாப்பிடாமல் இருந்து விடலாம். ஆனால், மாலையில் நோன்பு திறக்கும் (முடியும்) நேரத்தில், ஏதேனும் சாப்பிட வேண்டுமல்லவா! சாப்பிட வழியில்லாத ஏழை ஜனங்களுக்கு நோன்புக் கஞ்சியோ, ரொட்டியோ ஏதோ ஒன்று கொடுக்க வேண்டுமல்லவா! இந்த தர்ம சிந்தனையை, நாம் யாரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டுமென்றால், நாயகம்(ஸல்) அவர்களின் அருமைத் துணைவியார், ஆயிஷா அம்மையாரிடம் இருந்து தான். அரபு நாட்டில், ஹஸ்ரத் மு ஆவியா என்பவர் கலீபாவாக (மன்னர்) இருந்தார். அவர் ஒரு ரமலான் மாதத்தில், இரண்டு லட்சம் வெள்ளிக்காசுகளை ஆயிஷா அம்மையாருக்கு அன்பளிப்பாக அனுப்பி வைத்தார். அம்மையார் அதை ஒரே நாளில் ஏழைகளுக்கு தானம் செய்து விட்டார். அப்போது பணிப்பெண் வந்தாள்.""அம்மா! இன்று மாலை நோன்பு திறக்கும் நேரத்தில் சாப்பிட ஏதுமில்லை,'' என்றாள். அம்மையார் அவளிடம், ""அதுபற்றி நீ கவலைப்படாதே,'' எனச் சொல்லி விட்டார். ஒருநாள், நோன்பு திறந்த பிறகு, தனக்காக சாப்பிட வைத்திருந்த இரண்டு ரொட்டிகளை, ஒரு பிச்சைக்காரர் வந்து கேட்க அவரிடம் கொடுத்து விட்டார். இப்படியெல்லாம் தானம் செய்யும் போது, அவர் ஆடம்பர உடை அணிந்திருக்கவில்லை. நகைகளைப் பூட்டிக் கொண்டிருக்கவில்லை. ஒட்டுத்துணி போட்டு தைத்திருந்த கிழிந்த அங்கியை அணிந்திருந்தார். எவ்வளவு பெரிய தயாள உள்ளம் பாருங்கள்! ஒருமுறை ஒரு பெண்மணி, தன் இரண்டு குழந்தைகளுடன் பசி தாளாமல் ஆயிஷா அம்மையாரிடம் வந்தாள். அப்போது அம்மையாரிடம் இரண்டே இரண்டு பேரீச்சம் பழங்கள் தான் இருந்தன. அதை அவளிடம் கொடுத்தார். அந்தப் பெண் அவற்றை பசியுடன் நின்ற தன் குழந்தைகளுக்கு கொடுத்து, அவர்கள் சாப்பிடுவதைப் பார்த்து மகிழ்ச்சியடைந்தாள். தனக்கே இல்லாத நிலையிலும், தர்மம் செய்யும் தயாள குணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதே இன்றைய ரமலான் சிந்தனை.


நன்மை செய்ய விரும்புங்கள்:""நீங்கள் நோன்பிருக்கும் காலங்களில் வீணாக குரலுயர்த்திப் பேசிக் கொண்டிருக்க வேண்டாம். யாராவது திட்டினால் அல்லது சண்டைக்கு வந்தால், "நான் நோன்பாளி, நான் நோன்பாளி' என்று கூறிவிடுங்கள்,'' என்கிறார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். ரம்ஜான் காலத்தில் நோன்பிருக்கும் சமயத்தில் பிரச்னைகளில் இருந்து ஒதுங்கிக் கொள்ள வேண்டியதன் அவசியம் என்ன தெரியுமா? இந்த பயிற்சியானது எதிர்காலத்திலும் நம்மை பொறுமையோடு இருக்கச் செய்யும். நோன்பு என்றால் வெறுமனே பட்டினி கிடப்பது மட்டுமல்ல! நல்ல பண்புகளையும் வளர்த்துக் கொள்வதாகும். அதன் காரணமாக ரம்ஜானில் எடுக்கப்படும், இந்த பயிற்சியானது, வாழ்க்கை முழுமைக்கும் நமக்கு பயன்படுவதாக அமையும். அது மட்டுமல்ல! (ரமலான் மாதத்தில் செய்யப்படும்) ஒவ்வொரு நன்மைக்கும் பத்து முதல் எழுநூறு மடங்கு வரை கூலி கொடுக்கப்படுகிறது. "நோன்பு எனக்குரியது. அதற்கு நானே கூலி கொடுப்பேன்' என்று அல்லாஹ் கூறுகின்றான். நோன்பு நரகத்தில் இருந்து காக்கும் ஒரு கேடயமாகும். நோன்பாளியின் வாய்வாடை கஸ்தூரியின் நறுமணத்தை விட சிறந்ததாகும்,''.இப்படி நோன்பின் காரணமாக, எல்லையில்லா நன்மையை நமக்கு இறைவன் அருளி இருப்பதால், அந்த வாய்ப்பை ரம்ஜான் மாதத்தில் நழுவ விட்டுவிடக்கூடாது. உள்ளத்தூய்மையும், மனப்பக்குவமுமே இந்த நேரத்தில் நமக்கு அல்லாஹ்விடம் இருந்து அதிக கூலியைப் பெற்றுத்தரும். ""நன்மை செய்வதையே விரும்புபவனே! நீ வருக! அதிகமதிகம் நன்மை செய்வாயாக. பாவங்களை நாடுபவனே! நீ பாவங்கள் செய்வதைக் குறைத்துக் கொள்,'' என்கிறார்கள் நாயகம்(ஸல்) அவர்கள். பிறருக்கு நன்மை செய்வது பற்றி, இந்த ரம்ஜான் நோன்பு காலத்தில் சிந்திப்போம்.


உயர்ந்த குணம் வேண்டும் பெண்களே! ""ஒரு பெண்ணை அவளுடைய செல்வம், அழகு, குலம், மார்க்கப்பற்று ஆகிய நான்கில் ஒன்றுக்கு மணம் முடிக்கப்படுகிறது. நீங்கள் மார்க்கப்பற்றுடைய பெண்ணையே திருமணம் செய்து கொள்ளுங்கள்,'' என்கிறார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.திருமணத்திற்கு பிறகு, ஒருவர் நிம்மதியாக காலம் கழிக்க வேண்டுமென்றால், எவ்வகை குணமுள்ள பெண்களைத் தவிர்க்க வேண்டும் என அரபுக்கவிஞர் அப்துல்லா சுட்டிக்காட்டுகிறார். எந்த நேரமும் சண்டை போட்டுக் கொண்டும், பெருமூச்செறிந்து கொண்டும், இடைவிடாமல் கைவலி, கால் வலி, தலை வலி என புலம்புவதும், கணவர் எவ்வளவு தான் நல்ல முறையில் கவனித்தாலும் "என்ன சுகத்தைக் கண்டேன்' என குறை சொல்வதும், முன்னாள் கணவரை மறக்க முடியாமல் அவருக்கு பிறந்த குழந்தைகளை நினைத்து வருந்துவதும், கணவரின் பொருளாதார நிலையறியாமல் அது வேண்டும் இது வேண்டும் என கேட்பதும், வெளியில் உள்ளவர்கள் பாராட்ட வேண்டுமென்பதற்காக, எந்நேரமும் தன்னை அழகுபடுத்திக் கொள்வதிலேயே கவனம் செலுத்துவதும், அதிகமாகப் பேசுவதுமான குணங்கள் தவிர்க்கப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டுகிறார். நோன்பு காலத்தில், பட்டினி கிடப்பதும், அதிக நேரத்தை தொழுகையில் செலவிடுவதும் மட்டும் உயர்ந்த இடத்தை தந்து விடாது. நல்ல பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக, பெண்கள் மேற்கண்ட குறைகளைத் தவிர்ப்பதன் மூலம், குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். பெண்களை மரியாதையுடன் நடத்த ஆண்களும் கற்றுக் கொள்ள வேண்டும். ""பெண்களை நல்ல முறையில் நடத்துமாறு அல்லாஹ் கட்டளையிடுகின்றான். ஏனென்றால், அவர்களே உங்கள் தாயாராகவும், மகளாகவும், மாமியாராகவும் இருக்கின்றார்கள்,'' என்கிறார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். பெண்கள் உயர்ந்த குணங்களுடன் திகழ வேண்டும், ஆண்கள் அவர்களை மரியாதையுடன் நடத்த வேண்டுமென்பதை இன்றைய ரமலான் சிந்தனையாகக் கொள்வோம்.


முக்கியமான இளமைக்காலம்: நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள், ஒவ்வொரு பருவத்திலும் மக்கள் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் பற்றி, மிக அருமையாகச் சொல்கிறார்கள். ""இளைஞர்களே! உங்களின் பிள்ளைப்பருவம் கடந்து விட்டது. எனவே இறைவனுக்கு வழிபடுவதையும், நன்மையான செயல்களைச் செய்வதையும் இளமைப் பருவத்தில் தவறவிட்டால், பின்னர் எந்தக் காலத்தில் நீங்கள் அதனை ஈடுசெய்யப் போகின்றீர்? உங்களின் இளமை ஆட்டங்களில் மிக எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள். இளமைப் பருவம் ஷைத்தான் வேட்டையாடும் தலமாகும். மண்ணறையில் இருந்து (இறந்தபிறகு) எழுப்பப்பட்டு கேள்வி கணக்கிற்காக (விசாரணை) இறைவன் முன் நிறுத்தப்படும் போது, "ஆ! என் இளமை விளைவித்த கேடே! என்று எத்தனையோ இளைஞர்கள் அழுது புலம்புவார்கள். மானக்கேடே! என்று எத்தனையோ பெண்கள் கதறுவார்கள். ஆ! முதுமையே என எத்தனையோ முதியோர்கள் தம்மை நொந்து கொள்வார்கள். இத்தகைய பரிதாப நிலைமைகளை எண்ணிப்பார்த்து வாழ்வது அறிவுள்ளவர்களுக்கு படிப்பினையாகும்,'' என்கிறார்கள். ஆனால், இன்று நிலைமை என்ன? இளைஞர்களில் ஒரு பகுதியினர் இறைவனின் கட்டளைகளுக்குப் புறம்பாக, நாகரிகம் என்ற போர்வையில், கேடான செயல்களில் ஈடுபடுகிறார்கள். சில பெண்களும் ஆபாசமாய் உடையணிந்து, இளைஞர்களைக் கெடுக்கும் நிலையில் உள்ளார்கள். இளமை காலத்தில் மார்க்கம் கற்றுத்தந்த பாதைக்குள் சென்றுவிட்டால், பின்னர் எக்காலமும் கவலை இல்லை. ""ஒழுக்கமுள்ளவனாக இரு. மக்களில் நீயே சிறந்தவன். போதுமென்ற மனப்பான்மை உள்ளவனாக இரு. மக்களில் நீயே நன்றியுள்ளவன். உனக்காக எதை விரும்புகிறாயோ அதையே மற்றவர்களுக்கும் விரும்பு. நீயே உண்மையான முஸ்லிம்,'' என்கிறார் அண்ணல் நபிகளார். இளமையில் கடைபிடிக்கப்படும் ஒழுக்கம் காலம் முழுவதும் நீடிக்கும். இளமையிலேயே இறைவனின் அன்புக்கு பாத்திரமாகி விட்டால், எதற்கும் கலங்கத் தேவையில்லை என்பதே இன்றைய ரம்ஜான் சிந்தனை.


எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்: அப்துல்லா இறைவன் மீது அபார பக்தி கொண்டவர். ஒருநாள் இரவில், ஒரு பிச்சைக்காரர் வாசலில் நின்று, "ஐயா! பசிக்கிறது' என்றார். அப்துல்லா, அவரை உள்ளே அழைத்துச் சென்று, உணவு பரிமாறினார். பிச்சைக்காரர் சாப்பிட ஆரம்பித்தார். அப்துல்லா அவரிடம், ""பெரியவரே! தாங்கள் இந்த உணவைப் பெற்றவுடனேயே சாப்பிடத் துவங்கி விட்டீர்கள். இந்த உணவைக் கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்லிய பிறகல்லவா சாப்பிட தொடங்கியிருக்க வேண்டும்,'' என்றார். வந்தவர், ""ஐயா! இந்த உணவை அளித்தது நீர். இறைவன் அல்ல. உங்களுக்கு வேண்டுமானால் நான் நன்றி சொல்கிறேன். இறைவனுக்கு ஏன் நன்றி சொல்ல வேண்டும்?'' என்றதும், அப்துல்லாவுக்கு கோபம் வந்துவிட்டது. மீண்டும் மீண்டும் இறைவனால் தான் உணவு அவருக்குத் தரப்பட்டது என்று சொல்லியும் பெரியவர் அதை ஒப்புக்கொள்ளவில்லை. போதாக்குறைக்கு, ""நீர் இறைவனைப் பார்த்திருக்
கிறீரா?'' என்று வேறு கேட்டுவிட்டார். அப்துல்லாவுக்கு கோபம் அதிகமானது. அந்தப் பெரியவரின் கையைப் பிடித்து, ""இறைவனுக்கு நன்றி சொல்லாத நீர் இதை சாப்பிட உரிமை இல்லாதவர்,'' என்று கூறவே, பெரியவர் கோபத்துடன் எழுந்து போய்விட்டார். அன்றிரவு இறைவன் ""அப்துல்லா! ஏன் அந்தப் பெரியவரை கடிந்து கொண்டீர்! அவர் என்னை இன்று மட்டும் மறுக்கவில்லை. கடந்த 70 ஆண்டுகளாக மறுத்து வருகிறார். அப்படியிருந்தும், பொறுமையாக நான் அவருக்கு உணவளித்து வந்துள்ளேன். ஆனால், நீர் ஒரே இரவில் பொறுமையிழந்து அவரை வெளியே அனுப்பி விட்டீரே,'' என்றார். எல்லாம் வல்ல இறைவனின் கருணை மழையை எண்ணி வியந்தார். நம்மால் நன்மை பெற்றவர்கள் கூட, நம்முடன் கருத்து வேறுபாடு கொள்ளக்கூடும். அப்படிப் பட்ட சமயத்தில் கூட, நாம் அவர்களிடம் கோபப்படக்கூடாது என்பதே இன்றைய ரம்ஜான் சிந்தனை.


இருப்பதைக் கொண்டு வாழ்வோம்: வரவுக்கு மீறி செலவு செய்து, ஆடம்பரமாய் வாழும் நிலையால் பலரும் அவதிப்படுகின்றனர். ஒருமுறை, நபிகள்நாயகம் (ஸல்) அவர்களின் மனைவியர் ஒன்று கூடி, ""இறைத்தூதரே! தாங்கள் எங்களுக்குச் செலவுக்காக வழங்கும் பொருள் போதாது. இனிமேல், செலவுத் தொகையை அதிகமாக்கித் தர வேண்டும்,'' என்றனர். மனைவியரிடம் அண்ணலார் பேசவில்லை. வீட்டை விட்டு வெளியேறிய அவர்கள், பள்ளிவாசலிலேயே 28 நாட்கள் தங்கிவிட்டார்கள். ஒருநாள், இறைவனின் தூதுவரான ஜிப்ரீல் (அலை) அவர்கள், ஒரு வேத வசனத்துடன் இறங்கி வந்தார்கள்.""நபியே! உங்களுடைய மனைவிகளை நோக்கிக் கூறுங்கள். நீங்களெல்லாம் இந்த உலக வாழ்வையும் அதன் அலங்காரத்தையும் மட்டுமே விரும்புவோராயின், வாருங்கள்...உங்களின் வாழ்க்கைக்கு உரியதைக் கொடுத்து நல்ல முறையில் உங்களை விடுவித்துக் கொள்கிறேன். மேலும், நீங்கள் அல்லாஹ்வின் தூதரையும் (தன்னையும்) மறுமையின் வீட்டையும் விரும்புவோராயின், நிச்சயமாக அல்லாஹ் உங்களிலுள்ள நன்மையை நாடுவோர்க்கு மகத்தான கூலியைத் தயாராக்கி வைத்துள்ளான்,'' என்பதே அந்த வசனம். "அதாவது, ஆடம்பர வாழ்வுக்கு ஆசைப்பட்டு, நான் தருவதற்கு மேல் செலவழிக்க நினைப்பவர்கள் என்னை விட்டு பிரிந்து கொள்ளலாம்' என்ற ரீதியில் இந்த வசனம் அமைந்தது. நாயகம்(ஸல்) அவர்கள் வீட்டுக்குச் சென்றார்கள். தன் மனைவி ஆயிஷா அம்மையாரை அழைத்து, இந்த வசனத்தை ஓதிக்காட்டினார்கள். அந்த அம்மையார், அதை மற்றவர்களிடம் சொல்ல, அல்லாஹ் மூலம் விடுக்கப்பட்ட அந்த எச்சரிக்கையைக் கேட்டு அவர்கள் திடுக்கிட்டனர். எல்லோரும், தங்கள் செய்கைக்காக நபிகளாரிடம் மன்னிப்பு கேட்டனர். அடுத்தவர்கள் அணியும் நகை, ஆடை, உபயோகிக்கும் பொருட்களைப் பார்த்துவிட்டு, தனக்கும் அதுபோல் வேண்டும் என எண்ணாமல் இருப்பதைக் கொண்டு வாழ வேண்டும் என்பதை இன்றைய ரம்ஜான் சிந்தனையாகக் கொள்வோம்.


ஏழைகளுக்கு தானம் செய்யுங்கள்: ரம்ஜான் மாதத்தில் நோன்பு நோற்கும் கட்டாயக் கடமையைச் செய்து வருகிறோம். நோன்பு நோற்பதின் நோக்கமே, பசியின் கொடுமையை உணர்ந்து கொள்ளத்தான். பசித்திருப்பவர் ஒருபுறம், நன்றாகப் புசித்திருப்பவர் ஒருபுறம் என சமுதாயம் இரு பிரிவாக இருக்கிறது. பசியின் கொடுமையை உணரத்தான் பகல் முழுவதும் ஏதும் சாப்பிடாமல் நோன்பு நோற்கிறோம். இதனால் தான், ரம்ஜான் மாதத்தில் மிக அதிகமாக தானம் செய்ய வலியுறுத்தப்படுகிறது. தானம் செய்வதன் மூலம் ஏழைகளின் பசி தீர்கிறது. ஏதுமில்லாத ஏழை கூட, ஒரு டம்ளர் தண்ணீராவது, தவித்து வந்தவர்க்கு தானம் செய்ய வேண்டும். அத்துடன் பல நற்செயல்களையும் செய்ய வேண்டும்.குழந்தைகளுக்கு மார்க்கக் கல்வியைப் போதிக்க வேண்டும். நன்மையான வார்த்தைகளை அவர்களிடம் பேச வேண்டும். உற்றார் உறவினர்களுடன் சச்சரவு கூடாது. அவர்களுடன் இணைந்து வாழ வேண்டும். பிறருடைய பாரத்தையும் நாமே சுமக்க வேண்டும். அதாவது, ஒரு ஏழைக்குடும்பத்தையாவது நாம் ஏற்றுக் கொண்டு, அவர்களுக்குரிய தேவையை நிறைவு செய்ய வேண்டும். அனாதைகளுக்கு உதவி செய்ய வேண்டும். விருந்தினர்களை முகம் மலர உபசரிக்க வேண்டும்.பெற்றோரை வேதனை செய்பவனை பார்த்துக் கொண்டிருக்கும் இறைவன், "நீ எத்தனை வணக்கவழிபாடுகளில் ஈடுபட்டாலும், உன் பாவங்களை மன்னிக்கமாட்டேன்,' என்று சொல்லியுள்ளதை நினைவில் கொண்டு, பெற்றவர்களுக்கு உரிய மரியாதை செய்ய வேண்டும்.""அல்லாஹ் பரிசுத்தமானவன். பரிசுத்தத்தையே விரும்புகிறான், அல்லாஹ் மணமுள்ளவன். நறுமணத்தை விரும்புகிறான். எனவே, உங்கள் இல்லங்களை பரிசுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்,'' என்ற குர்ஆன் வசனத்தை நினைவில் கொண்டு, வீடுகளையும், சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.இப்படிப்பட்ட நல்ல சிந்தனைகளுடன் நோன்பை மகிழ்ச்சியுடன் நோற்போம்.


நேர்மையாக வாழ்வோம்: நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிகுந்த நேர்மையாளர். ஒருமுறை,அவர்கள் மதீனா நகருக்கு வெளியே கூடாரம் கட்டி தங்கியிருந்த வியாபாரிகளிடம் சென்றார்கள். அந்த வியாபாரிகள் இளைப்பாறிக் கொண்டிருந்தனர். அங்கிருந்த சிவப்பு நிற ஒட்டகத்தை அண்ணலாருக்குப் பிடித்து விட்டது. அதை வாங்க எண்ணி, அதன் விலையைக் கேட்டார்கள். அவர்கள் விலையைச் சொன்னதும், அதன் மூக்கணாங்கயிற்றைப் பிடித்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தார்.
"இவர் என்ன பணம் தராமல் செல்கிறாரே! இவர் யார் என்பதைக் கூட நாம் விசாரிக்கவில்லையே,'' என்று வியாபாரிகள் பேசிக்கொண்டிருந்த போது, அவர்களுடன் வந்த ஒரு பெண்மணி, ""கவலையை விடுங்கள்! அந்த முகம் எவ்வளவு பிரகாசமாக இருக்கிறது தெரியுமா? இப்படிப்பட்ட ஒருவரை இதற்கு முன் நாம் பார்த்ததே இல்லை. இத்தகைய களங்கமற்ற முகத்தை உடையவர் நம்மை ஏமாற்ற மாட்டார். பணமோ அல்லது ஒட்டகத்தின் விலைக்கு ஈடான பொருளோ நிச்சயம் வந்து விடும்,'' என்றார். அன்று மாலையே, அந்த ஒட்டகத்தின் விலைக்கு ஈடான பேரீச்சம் பழங்களையும், பிற உணவு வகைகளையும் நாயகம்(ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள்.
அண்ணலாருடன் பங்குதாரராக இருந்த சாயிப் என்ற வர்த்தகர் அவரைப் பற்றிச் சொல்லும் போது, "நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், என்னோடு வர்த்தகத்தில் பங்காளியாக இருந்திருக்கிறார்கள். அவர்கள் அதில் நடந்து கொண்ட முறை மிகவும் உன்னதமாகவும், குறைசொல்ல இடமற்றதாகவும் இருந்தது,'' என்றார். நேர்மையுடன் வாழ்ந்து பழக வேண்டும் என்பதே இன்றைய ரம்ஜான் சிந்தனை.


பெற்றவர்களிடம் கனிவுடன் நடப்போம்: "இந்த உலகில் நான் எத்தனை சோதனைகளை அனுபவிக்கிறேன். யா அல்லாஹ்! இதில் இருந்து எனக்கு விடுதலை கிடையாதா?' என்று கதறிக் கொண்டிருப்பவர்களில் பெரும்பகுதியினரின் வாழ்க்கை வரலாற்றை அலசினால், அவர்கள் பெற்றவர் களைக் கவனிக்காதவர்களாகத் தான் இருப்பார்கள். இவர்களைப் பற்றி நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறும் போது, ""தாய் தந்தையர்க்கு துன்பம் செய்வதைத் தவிர மற்ற எல்லா பாவங்களுக்கும் அல்லாஹ் மன்னிப்பளிக்கின்றான். பெற்றோர்களுக்கு துன்பம் செய்தவனுக்கு மரணத்திற்கு முன் தண்டனை வழங்கி விடுகின்றான்,'' என்கிறார்கள். குர்ஆனில் அல்லாஹ், "தாய் தந்தையரிடம் கருணையோடும், கனிவோடும் பழகுங்கள். அவர்கள் தான் உங்களை அறியாப்பருவத்தில் வளர்த்துப் போஷித்தவர்கள்,'' என்று அழகாகச் சொல்கிறார்.
ஒருமுறை நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, ""அண்ணலாரே! பாவம் ஒன்றைச் செய்து விட்டேன். அதில் இருந்து மீள வழியிருக்கிறதா?'' என்றார். அண்ணலார் அவரிடம், "உமக்கு தாய் இருக்கிறாரா?'' என்றதும், "இல்லை'' என பதிலளித்தார் வந்தவர்.
"சிற்றன்னை இருக்கிறாரா?'' என்றதும், "ஆம்' என்றார்.
"அப்படியானால் உமது சிற்றன்னைக்கு சேவை செய்யும்,'' என அவர்கள் கூறினார்கள்.
"தாயின் காலடியிலேயே சொர்க்கம் இருக்கிறது' என்று அவர்கள் அருமையாகச் சொன்னார்கள்.
பெற்றவர்களுக்கு சேவை செய்வது ஒவ்வொருவரின் கடமை என்பதே இன்றைய ரம்ஜான் சிந்தனை.


தேவையற்ற பேச்சு வேண்டாமே!: ரம்ஜானின் சிறப்பே தொழுகையை அதிகப்படுத்துவதுதான். இந்த இனிய மாதத்தில், பள்ளிவாசலின் சிறப்பையும், அங்கே நடந்து கொள்ள வேண்டிய விதம் பற்றியும் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சொல்வதைக் கேளுங்கள். ஒருமுறை அவர்கள் வானுலகம் சென்றிருந்த போது, அங்கே சிலர் பன்றிக்கறியை தின்று கொண்டிருந்தனர். ""இவர்கள் யார்?'' எனக் கேட்டார்கள் நாயகம் (ஸல்) அவர்கள். அதற்கு ஜிப்ரில்(அலை) அவர்கள், ""இவர்கள் பள்ளிவாசலில் அமர்ந்து ஊர்வம்பு அளந்து கொண்டிருந்தவர்கள்,'' என்று பதிலளித்தார்கள்.
பள்ளிவாசலுக்குள் உலக விஷயங்கள் பற்றியோ அல்லது வேறு காரியங்கள் குறித்தோ பேச வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால், நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் நெருப்பை மிதித்தது போன்ற உணர்வை அடைவார்கள். பள்ளிவாசலை விட்டு உடனே வெளியேறி, பேச வேண்டியதை வெளியில் வைத்து பேசிவிட்டு, மீண்டும் பள்ளிவாசலுக்குள் நுழைவார்கள். இதிலிருந்து, இறைவழிபாட்டால் நன்மைகளைச் சுமந்து செல்வதற்காக பள்ளிவாசல் வருபவர்கள் வீண்பேச்சுகளின் மூலம் பாவ மூட்டையை சுமந்து கொண்டு செல்கிறார்கள் என்பதை அவர்கள் உணர வைக்கிறார்கள். அது மட்டுமல்ல, ஏதாவது ஒரு செயல் கவலை தருமானால், அவர்கள் உடனே தொழுகைக்கு சென்று விடுவார்கள்.
இதுபற்றி நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மேலும் சொல்வதாவது:
* எமது உம்மத்தவர்களில் அல்லாஹ்வுக்குப் பயந்தவர்கள் பள்ளிவாசல்களில் தங்கியிருப்பார்கள்.
* ஒரு காடைக்குருவி போன்ற சின்னஞ்சிறிய பள்ளிவாசலைக் கட்டுபவருக்காக, சொர்க்கத்தில் அல்லாஹ் ஒரு மாளிகையை எழுப்புகிறான்.
* பாங்கொலி கேட்டு தொழுகைக்கு வராதவர் அநியாயமும், இணை வைத்தலும், வஞ்சகத்தன்மையும் உடையவர் ஆகிறார். பள்ளிவாசலுக்கு செல்லும்போது வீண்பேச்சு வேண்டாம் என்பது இன்றைய ரம்ஜான் சிந்தனையாக அமையட்டும்.
எதையெல்லாம் சிந்திக்க வேண்டும்?: ரம்ஜான் மாதம் இன்று பிறந்துள்ளது. இந்த இனிய நாளில், ஒரு மனிதன் தினமும் என்னென்ன சிந்திக்க வேண்டும் என்பது பற்றிச் சொல்கிறார்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள். இதுவே இன்றைய ரம்ஜான் சிந்தனையாக அமையட்டும்.
* மனிதர்கள் செய்த உதவியைச் சிந்திப்பதை விட இறைவன் செய்த உதவியை சிந்தனை செய்யுங்கள். நீங்கள் செய்த நன்மைகளைப் பற்றி சிந்திப்பதை விட, செய்த பாவங்கள் பற்றிச் சிந்தியுங்கள். நீங்கள் உயிருடன் வாழப்போவதைச் சிந்திப்பதைவிட, வருகின்ற மரணத்தைப் பற்றிச் சிந்தனை செய்யுங்கள்.
* மற்றவர்களின் குற்றங்களை நோட்டம் இடுவதை விட, உங்களின் குற்றங்களை நோட்டமிடுங்கள். உப்பை நீர் கரைப்பது போன்று, நற்குணம் உங்கள் பாவங்களைக் கரைத்துவிடும். கள்ளின் மண்டி தேனைக் கெடுத்துவிடுவது போன்று, துர்க்குணம் வணக்கங்களைக் கெடுத்துவிடும். உன் வாயிலாக இறைவன் ஒரு மனிதனுக்கு நேர்வழி காட்டுவது இவ்வுலகத்தையும், இதிலுள்ள யாவற்றையும் விட உனக்கு நன்மை பயப்பதாகும்.
* எவர் அண்டை வீட்டாரைத் துன்புறுத்து கின்றாரோ அவர் என்னைத் துன்புறுத்தியவராவார். அன்பு செலுத்தாதவன் அன்பு செலுத்தப் படுவதற்கு அருகதையில்லாதவன்.
* தர்மம் செய்ய இயலாதவன் ஒரு நற்செயல் செய்வானாக அல்லது ஒரு கெட்ட செயலில் இருந்து விலகிக் கொள்வானாக. அதுவே அவனது ஈகை.
* உங்களை நம்பி ஒருவன் ஒரு செய்தியைச் சொன்னால், அதை அடைக்கலப் பொருள் போல பாதுகாத்து வையுங்கள்.
* தன் பிள்ளைகளைப் பிறர் நல்லவிதமாக நடத்த வேண்டும் என்று விரும்புவர், அனாதைப் பிள்ளைகளை நல்லவிதமாக நடத்த வேண்டும்.
* மனிதன் எதைச் செய்கிறானோ அதை எந்த எண்ணத்துடன் செய்கிறான் என்பதை தான் இறைவன் கவனிக்கிறான்.
இந்த சிந்தனை மொழிகளை ரம்ஜான் மாதத்தில் மட்டுமில்லாமல், தினமும் படியுங்கள். உங்களுக்குள் நற்குணம் கொடி கட்டி வளரும்.

விமான பணிப்பெண் பயிற்சி நிறுவன மோசடி போலீசில் புகார்

சென்னையில் உள்ள விமான பணிப்பெண் பயிற்சி நிறுவனம் மீது, பணத்தை பெற்று மோசடி செய்து விட்ட தாக, சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளனர்.சென்னை சூளைமேடு, நெல்சன் மாணிக்கம் சாலை பகுதியில் ஏ.எச்.ஏ., ஏவியேசன் மற்றும் ஹாஸ்பிட்டாலிட்டி தனியார் நிறுவனம் இயங்கி வந்தது.இந்த நிறுவனத்தில் விமான பணிப்பெண் பயிற்சிக்காக நூற்றுக்கணக்கானோர் சேர்ந்தனர்.கடந்த சில மாதங்களுக்கு முன் இந்நிறுவனம் மூடப்பட்டதால், இதில் பணத்தை கட்டி ஏமாந்த மாணவர்கள், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.


இந்நிலையில், நேற்று முன்தினம் கடந்த 2008-09ம் ஆண்டில் பயிற்சியில் சேர்ந்து முடித்தவர்கள், தங்களை பயிற்சி நிறுவனம் மோசடி செய்து விட்டதாக ஒரு புகாரை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்தனர். இது குறித்து புகார்தாரர்கள் கூறியதாவது:விமான பணிப்பெண், கேபின் க்ரூ போன்ற பணிகளுக்கான பயிற்சி அளித்து, உடனடியாக பணி வாய்ப்பு பெற்று தருவதாகதெரிவித்தனர்.இதற்காக 1.60 லட்ச ரூபாய் செலுத்தினோம். ஆனால், விமான பணிப்பெண்ணிற்கான பயிற்சிகள் அளிக்கப்படவில்லை.


பயிற்சி அளிக்கப்பட்டதாக எழுதி வாங்கிக் கொண்டனர். இவர்கள் அளித்த பயிற்சிக்கான சான்றிதழுக்கு மதிப்பே இல்லை என்று, பணி வழங்கும் நிறுவனங்கள் சில தெரிவித்துள் ளன. இது குறித்து விசாரிக்க அந்த நிறுவனத்தை தொடர்பு கொண்ட போது, அந்த நிறுவனம் பூட்டப்பட்ட தகவல் கிடைத்தது. எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர். தொடர்ந்து, நேற்றும் 20க்கும் மேற்பட்ட விமான பணிப்பெண் பயிற்சி முடித்தவர்கள் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.