ஏப்., 26ல் முத்துப்பேட்டை கந்தூரி விழா திருவாரூர் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நடக்க உள்ள கந்தூரி விழாவை முன்னிட்டு ஏப்ரல் 26ம் தேதி உள்ளூர் விடுமுறை விடுக்கப்படுகிறது. திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பெரிய தர்காவில் கந்தூரி விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. ந்தாண்டு கந்தூரி விழா ஏப்ரல் 16 முதல் 26ம் தேதி வரை நடக்க உள்ளது.

இவ்விழாவை சிறப்பாக கொண்டாடுவது தொடர்பாக உயர்மட்ட ஆலோசனைக்குழு கூட்டம் திருவாரூர் கலெக்டர் சந்திரசேகரன் தலைமையில் நடந்தது. கலெக்டர் சந்திரசேகரன் பேசியதாவது: இவ்விழாவை எவ்வித பிரச்னையும் இன்றி அமைதியாகவும், சிறப்பாக நடத்த அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

விழாவுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள், கழிப்பறை வசதி, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை அந்தந்த துறையினர் செய்து முடிக்க வேண்டும். விழாவை காண வரும் பொதுமக்கள் வசதிக்காக பக்கத்து ஊர்களில் இருந்தும், பக்கத்து மாவட்டங்களில் இருந்தும் அரசு சிறப்பு பஸ்கள், கூடுதல் பஸ்கள் இயக்க போக்குவரத்து கழகம் ஏற்பாடு செய்ய வேண்டும்.

விழா துவங்கி முடியும் வரை தேவையான மருந்து பொருட்களுடன் நடமாடும் மருத்துவ குழுவினர் மருத்துவ வசதி செய்து கொடுக்க வேண்டும். தண்ணீர் வசதியுடன் கூடிய தீயணைப்பு வாகனங்களை எப்போதும் நிறுத்தி இருக்க வேண்டும். தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும். பொதுமக்களின் நலன் கருதி கந்தூரி விழா துவங்கும் தினமாக ஏப்ரல் 16ம் தேதியும், சந்தனக்கூடு விழா நடக்கும் 26ம் தேதியும் முத்துப்பேட்டை பகுதியில் உள்ள நான்கு டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது. பாதுகாப்பு நலன் கருதி கூடுதல் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும். சீருடை இல்லாத ரகசிய போலீஸார் கூட்டத்தை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

தேவையான இடங்களில் ரகசிய கேமராக்கள் அமைத்து கூட்டத்தை கண்காணிக்க வேண்டும். விழா சிறப்பாக நடக்க அனைத்து துறை அலுவலர்களும், பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். திருவாரூர் எஸ்.பி., பிரவின்குமார் அபினவ், முத்துப்பேட்டை தர்காவின் முதன்மை அறங்காவலர் பாக்கர்அலி, உறுப்பினர்கள் அலிஅக்பர், நூர்முகம்மது உட்பட பலர் பங்கேற்றனர்.

ஏப்., 19ல் இலவச கண் சிகிச்சை முகாம்: மக்கள் பயன்பெற கலெக்டர் அழைப்பு

தஞ்சை மாவட்டத்தில் ஏப்ரல் 19ம் தேதி முதல் அனைத்து தாலுகாக்களிலும் குறிப்பிட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவச கண் சிகிச்சை முகாம் நடக்க உள்ளது. இம்முகாம்கள் காலை ஒன்பது முதல் மதியம் ஒரு மணி வரை நடக்கும். ஏப்ரல் 19ம் தேதி ஒரத்தநாடு தாலுகா வாண்டையார்இருப்பு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும், 20ம் தேதி பாபநாசம் தாலுகா கபிஸ்தலம் ஆரம்ப சுகாதார நிலையம், மெலட்டூர் ஆரம்ப சுகாதார நிலையம், திருவையாறு அடுத்த நடுக்காவேரி ஆரம்ப சுகாதார நிலையம், 22ம் தேதி பேராவூரணி தாலுகா செருவாவிடுதி ஆரம்ப சுகாதார நிலையம், மதுக்கூர் அடுத்த ஆலத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடக்கிறது.

23ம் தேதி சேதுபாவாசத்திரம் அடுத்த அழகியநாயகிபுரம் ஆரம்ப சுகாதார நிலையம், 26ம் தேதி திருப்பனந்தாள் அடுத்த துகிலி ஆரம்ப சுகாதார நிலையம், 27ம் தேதி பூதலூர் அடுத்த செல்லப்பன்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையம், 28ம் தேதி திருவோணம் ஆரம்ப சுகாதார நிலையத்திலும் இலவச கண் சிகிச்சை முகாம் நடக்கிறது. மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் சார்பில் நடக்க உள்ள இந்த முகாமில், பொதுமக்கள் பங்கேற்று கண் பரிசோதனை, கண் புரை நோயாளிகள் சிகிசசை பெறலாம், என கலெக்டர் சண்முகம் கேட்டுக் கொண்டார்.

மின்தடையா? உடனடி தீர்வுகளுக்கு ஏப்.,24 ல் அதிகாரிகள் விளக்கம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் மின்தடையா? மின்வாரிய அதிகாரிகள் மூலம் உரிய தீர்வு கிடைக்க வேண்டுமா? பொது மக்கள் தயக்கமின்றி அதிகாரிகளுடன் கலந்துரையாடலாம். அதற்கான வாய்ப்புகளை ஏப்., 24 ல் ஏற்படுத்தி உள்ளனர் மின்வாரியத்தினர். பொது மக்கள் தவறாது கலந்து கொண்டு அடுக்கடுக்கான கேள்விகளை கேட்கலாம். மாவட்டத்தில் மின் தொடர்பான பல்வேறு சந்தேகங்கள் இருந்தாலும் பொது மக்கள் அதை உரிய நபர்களிடம் கேட்காமல் இடைத்தரகர்களை நம்பி ஏமாற்றமடைவது தொடர்கிறது. மின்சார்ந்த பிரச்னைகளை நேரிடையாக கேட்கலாம் என மின்வாரிய அதிகாரிகள் பலமுறை தெரிவித்தும் பொது மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததால் யாரும் முன்வந்து தங்களது குறைகளை தெரிவிப்பதில்லை.

பொது மக்கள் மட்டுமின்றி உள்ளாட்சி பிரதிநிதிகளும் தாங்கள் சார்ந்த பகுதிகளில் மின் விளக்குகள் எரியாதது, மின் கம்பம் பழுதான நிலையில் உள்ளது, அறிவித்த மின்தடை நேரத்தைவிட கூடுதல் நேரத்தில் மின்தடை ஏற்படுவது போன்ற பல்வேறு கேள்விகளுக்கு மின்வாரிய அதிகாரிகளை சந்தித்து குறைகளை தெரிவித்து சரிசெய்து கொள்ளலாம். இதற்காக மின்வாரியத்தினர் ஏப்.,24ல் காலை 11 மணிக்கு ராமநாதபுரம் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடத்துகின்றனர். மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் மின்நுகர்வோர் தங்களுடைய குறைகளை கூறி நிவர்த்தி செய்து கொள்ளலாம்

பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி துவக்கம்

பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி, கோவையில் இரண்டு மையங்களில் நேற்று துவங்கியது. பிளஸ்2 விடைத்தாள் திருத்தும் பணி, கோவையில் பெர்க்ஸ் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி மற்றும் ஆர்.எஸ்.புரம் நேரு வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய இரு பள்ளிகளில் நடைபெற்று வருகிறது. ஏப்., 20ல் இப்பணிகள் முடிவடைகின்றன. பெர்க்ஸ் பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆனந்தி தலைமையிலும், நேரு வித்யாலயா பள்ளியில் மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் இளங்கோ தலைமையிலும் திருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் நேற்று துவங்கின. ஸ்டேட் போர்டு தேர்வு விடைத்தாள்கள் கோவை ஆர்.எஸ்.புரம் அம்மணியம்மாள் மாநகராட்சிப் பள்ளியிலும், மெட்ரிக் தேர்வு விடைத்தாள்கள் ஏ.எல்.ஜி., மெட்ரிக் பள்ளியிலும் நடைபெறுகிறது. மாவட்ட கல்வி அலுவலர் முருகன் மற்றும் அரசு தேர்வுகள் துறை துணை இயக்குனர் பாஸ்கரன் தலைமையில் இப்பணிகள் நடைபெற்று வருகின்றன

ஏர்போர்ட்டில் ரூ.27 லட்சம் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் பறிமுதல்

சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட 27 லட்சம் ரூபாய் மதிப்பிலான எலக்ட்ரானிக் பொருட்களை, விமான நிலைய கஸ்டம்ஸ் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இதுகுறித்து சென்னை விமான நிலைய கஸ்டம்ஸ் கமிஷனர் பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது: கடந்த 13ம் தேதியன்று இரவு சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் இருந்து வந்த விமானப் பயணிகளை, கஸ்டம்ஸ் அதிகாரிகள் கண்காணித்து வந்தனர்.

அப்போது, சந்தேகப்படும் வகையில் கிடந்த ஏழு பேக்கேஜ்களை கஸ்டம்ஸ் அதிகாரிகள் சோதனையிட்டனர். அவற்றில், 27 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கம்ப்யூட்டர் பாகங்கள், ஐபாட்கள் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் இருந்தன. இது குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. மற்றொரு சம்பவத்தில், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப் பட்ட கேமராக்களின் விலையை குறைத் துக் காட்டி, வரி ஏய்ப்பு செய்துள்ளது தெரிய வந்தது.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் தரத்தைக் குறைத்து, வரி ஏய்ப்பு செய் யப்படுவதாக சென்னை விமான நிலைய கஸ்டம்ஸ் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நடந்த அதிரடிச் சோதனையில், சையத் மூசா கடாரி என்பவருக்கு சொந்தமான பார்சலை, ஏர் கார்கோ பிரிவில் கஸ்டம்ஸ் அதிகாரிகள் சோதனையிட் டனர். அதில், நிக்கான் டி90 என்ற உயர் திறன் கொண்ட கேமராக்கள் இருந்தன. ஆனால், அந்த கேமராக்களின் விலையை குறைத்துக் காட்ட வேண்டும் என்பதற்காக, அவற்றின் மீது விலை குறைந்த மாடலான நிக்கான் டி40 என்று போலியாக ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந் தன. இந்த வகையில், 25 லட்சம் ரூபாய் மதிப்பு குறைத்து காட்டப்பட்டிருப்பதும், அதன் மூலம் வரி ஏய்ப்பு செய்ய முயற்சித் திருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து, சையத் மூசா கடாரியை கைது செய்த கஸ்டம்ஸ் அதிகாரிகள், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சானியாவுக்கு பாக்., மந்திரி தங்க கிரீடம் அளித்து வாழ்த்து

கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக் - டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா திருமண வரவேற்பில், பாகிஸ்தான் அமைச்சர் ஆஷிக் அவான் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டு, தங்க கிரீடத்தை அன்பளிப்பாக அளித்துள்ளனர்.பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக் - சானிய மிர்சா திருமணம் கடந்த 12ம் தேதி ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் எளிமையாக நடந்தது. ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று நடந்த திருமண வரவேற்பில் ஏராளமான வி.ஐ.பி.,க்கள் கலந்து கொண்டனர்.

பாகிஸ்தானிலிருந்து மக்கள் நலத்துறை அமைச்சர் ஆஷிக் அவான், முன்னாள் கிரிக்கெட் வீரர் சோகைல் தன்வீர் உள்ளிட்டவர்கள் சானியா திருமண வரவேற்பில் கலந்து கொண்டனர். பாகிஸ்தான் சார்பில் இவர்கள் சானியாவுக்கு தங்க கிரீடம் அளித்தனர்.பாகிஸ்தான் அமைச்சர் ஆஷிக் அவான் குறிப்பிடுகையில், 'சோயப் - சானியா திருமணம் இந்திய - பாகிஸ்தான் நட்புறவை மேம்படுத்த உதவியுள்ளது' என்றார்.

கட்டிப் பிடித்த ரசிகர்... கன்னத்தில் பளார் விட்ட ப்ரியங்கா!

ஆர்வம் மிகுதியால் தன்னைக் கட்டிப்பிடித்த ரசிகர் ஒருவருக்கு பளார் விட்டார் நடிகை ப்ரியங்கா சோப்ரா.

பொதுவாகவே படங்களில் பிஸியாக இருக்கும் ப்ரியங்கா சோப்ரா பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில்லை. தவிர்க்க முடியாமல் பங்கேற்கும் நிலை வந்தாலும் ஏகப்பட்ட செக்யூரிட்டிகளோடு தான் வருகிரார்.

சமீபத்தில் ஒரு விருந்துக்கு அவரை அழைத்திருந்தார் ப்ரியங்காவுக்கு வேண்டப்பட்டவர். கட்டாயம் பங்கேற்றே தீர வேண்டும் என்பதால், படப்பிடிப்பு தளத்திலிருந்து கேரவனில் உடை மாற்றிக் கொண்டு விருந்துக்கு சென்றார் ப்ரியங்கா.

விருந்து நடந்த வீட்டின் முன்னால் வந்து இறங்கியபோது அங்கு ஏராளமான இளைஞர்கள் கூடி நின்றனர். அதில் ஒருவர் பிரியங்கா சோப்ராவை பார்த்ததும் உணர்ச்சிவசப்பட்டு படாரென்று ப்ரியங்காவைக் கட்டிப் பிடித்தார். கூடி நின்ற மற்ற இளைஞர்களும் அவரை சூழ்ந்து, ப்ரியங்காவைத் தொட முயன்றனர்.

இத்ல் ஆத்திரமடைந்த பிரியங்கா சோப்ரா, அந்த ரசிகரின் பிடியில் இருந்து திமிறி விடுபட்டார். அப்போதும் அந்த இடத்தைவிட்டு நகராத ரசிகர் கன்னத்தில் ஓங்கி ஒரு பளார் விட்டார்.

உடனே ப்ரியங்காவுடன் வந்திருந்த பாதுகாவர்கள் அந்த ரசிகரை அடித்துத் துவைத்தனர். அவரை போலீ சில் ஒப்படைக்க முயன்றனர். ஆனால் பிரியங்கா வேண்டாம் விட்டு விடுங்கள் என்று கூறி விட்டார்.

இந்த சம்பவத்தால் மூட் அவுட் ஆன ப்ரியங்கா, விருந்துக்குச் செல்லாமல் வண்டியை வீட்டுக்கு விடச் சொன்னதில், விருந்துக்கு அழைத்த நண்பர் மனம் உடைந்தது தனிக்கதை

நரேந்திர மோடியின் தூண்டுதலின்படி செயல்படுகிறார் லலித் மோடி

குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் தூண்டுதலின் பேரில்தான் கொச்ச ஐபிஎல் அணிக்கு எதிராக லலித் மோடி செயல்படுவதாக கொச்சி அணி குற்றம் சாட்டியுள்ளது.

கொச்சி அணி நிர்வாகத்திற்கும், ஐபிஎல் நிர்வாகத்திற்கும் இடையே கடும் போர் மூண்டுள்ளது. இதில் பலருடைய தலைகளும் அடிபட்டு வருகின்றன. இந்த நிலையில் புதிய முகமாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும் இந்த காட்சியில் இணைந்துள்ளார்.

கொச்சி அணியின் செய்தித் தொடர்பாளரான சத்யஜித் கெய்க்வாட் டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், அகமதாபாத் பெயரில் ஒரு அணியை வாங்க அடானி குருப்பூம், நரேந்திர மோடியும் கடுமையாக முயன்றனர்.

ஆனால் நாங்கள் ஏலத்தில் வென்றோம். இதையடுத்து முன்னாள் கிரிக்கெட் வாரியத் தலைவர் சரத் பவாரைத் தொடர்பு கொண்டு, எந்த நகரை தேர்வு செய்வது என்று கேட்டபோது, உங்களது விருப்படியான ஊரைத் தேர்வு செய்து கொள்ளுங்கள் என்று அவர் கூறினார். அதன்படி நாங்கள் கொச்சியைத் தேர்வு செய்தோம்.

ஆனால் அகமதாபத்தை தளமாக கொண்ட அணியை உருவாக்க முடியாததால், அதிருப்தி அடைந்த நரேந்திர மோடி, தற்போது லலித் மோடி மூலம் எங்களுக்கு சிக்கலைக் கொடுத்து வருகிறார் என்றார் கெய்க்வாட்.

தோல்விக்கு பொறுப்பு

சூப்பர் கிங்சிடம் படுதோல்வி அடைந்தது குறித்து கொல்கத்தா அணி உரிமையாளர் நடிகர் ஷாருக் கான் கூறியதாவது:
தோல்விக்கு நான் முழு பொறுப்பேற்கிறேன்.
நைட் ரைடர்ஸ் அணி மீது கொல்கத்தா ரசிகர்கள் வைத்த நம்பிக்கை, வழங்கிய அமோக ஆதரவை வீணடித்தது வருத்தமாக உள்ளது.
இனியும் வெற்று உறுதிமொழிகளைக் கொடுத்து ரசிகர்களை ஏமாற்ற விரும்பவில்லை. இவ்வாறு ஷாருக் கூறியுள்ளார்

பிரீத்தி ஜிந்தாவை லவ்வுகிறாரா பிரட் லீ?

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிரட் லீக்கும் பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தாவுக்கும் காதல் என்று சமீப காலமாக கிசுகிசுக்கப்படுகிறது.
பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியின் உரிமையாளர்களில் ஒருவர் ப்ரீத்தி ஜிந்தா. இந்த அணியின் நட்சத்திர பவுலர் பிரட் லீ. இவர் தன் மனைவியைப் பிரிந்து வாழ்கிறார். இந்த நிலையில், ஐபிஎல் போட்டிக்குப் பிறகு நடந்த இரவு நேர விருந்தில் ப்ரீத்தியும் பிரட் லீயும் பிரட்டும் ஜாமும் போல ஒட்டி உறவாடினார்களாம்.

இவர்களின் நெருக்கத்தைப் பார்த்து மனம் வெதும்பித்தான் யுவராஜ் சிங் அணியை விட்டே வெளியேறுவேன் என்று கூறியதாகவும் பரபரப்பாக பேசப்படுகிறது (யுவராஜ் சிங் இப்போது அதை மறுத்துள்ளார்).

இருவரும் டேட்டிங் போனதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதனை பிரட் லீயின் மேனேஜர் மறுத்துள்ளார்.

இதுகுறித்து பஞ்சாப் அணியினர் இப்படிக் கூறுகின்றனர்:

"ப்ரீத்தி ஜிந்தாவுக்கு பஞ்சாப் அணி வீரர்கள் மீது தனி பிரியம். அதனால்தான் அவர் மிக நெருக்கமாகப் பழகி வந்தார். நட்புடன் அணைத்துக் கொண்டார்.

முன்பு யுவராஜ் சிங்கை அவர் கட்டிப் பிடித்ததை இப்படித்தான் மிகைப்படுத்தி விட்டார்கள். அணியின் நன்மைக்காகவே ப்ரீத்தி இந்த அளவு சுதந்திரமாக அனைவருடனும் பழகி வருகிறார். அதைப் போய் தவறாகப் பேசுவதா?" என்றனர்.

சோயப் - சானியா வரவேற்பில் தடபுடல் விருந்து நடக்குமா?

பாகிஸ்தானின் லாகூர் நகரில் நடக்கும் சோயப் - சானியா மிர்சா திருமண வரவேற்பு விருந்தில், தடபுடலாக பல்வேறு வகை உணவுகளை பரிமாறக்கூடாது என்ற மாகாண அரசின் உத்தரவால், பிரச்னை ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்குக்கும், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுக்கும் ஐதராபாத்தில் இரண்டு நாட்களுக்கு முன் திருமணம் நடந்தது. இன்று இவர்களது திருமண வரவேற்பு, ஐதராபாத்தில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலில் நடக்கிறது.

சோயப் மாலிக் வீட்டு சார்பில் பாகிஸ்தானின் லாகூர் நகரில் வரும் 22ம் தேதி, திருமண வரவேற்பு நடைபெற உள்ளது. இதற்காக 500 பேருக்கு விருந்தளிக்க, அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.கோழிக்கறி குழம்பு, குலாப் ஜாமூன், ரசமலாய் ஆகியவை இந்த விருந்தில் பரிமாற திட்டமிடப்பட்டது. ஆனால், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண அரசின் உத்தரவு படி எவ்வளவு பணக்காரர்களாக இருந்தாலும், திருமண விருந்தில் ஒரு சிறப்பு வகை உணவு பதார்த்தத்திற்கு மேல் பரிமாறக்கூடாது என்ற உத்தரவு, அமலில் உள்ளது.

திருமணம் எளிமையாக நடக்க வேண்டும் என்ற நோக்கில் அங்கு இந்த உத்தரவு அமல்படுத்தப் பட்டுள்ளது.'சோயப் - சானியா திருமண வரவேற்பு நிகழ்ச்சி வி.வி.ஐ.பி.,க் கள் சம்பந்தப் பட்டது என்றாலும், பஞ்சாப் மாகாண அரசின் உத்தரவை மீற முடியாது' என, ஓட்டல் நிர்வாகம் திட்டவட்டமாகக் கூறிவிட்டது.

இதனால், சோயப் - சானியா திருமண வரவேற்பில் தடல்புடல் விருந்தை எதிர்பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இனி, சோயப்பிற்காக மாகாண அரசு ஏதாவது உத்தரவு புதிதாக போட்டால் தான், நிலைமை மாறும்.
சானியாவின் பெயரைமாற்றிய பெற்றோர்:டென்னிஸ் வீராங்கனை சானியா மீதுள்ள ஆர்வத்தின் காரணமாக, மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் பகுதியைச் சேர்ந்த மதன்லால் - கீதா தம்பதியர், கடந்த 2002ம் ஆண்டு பிறந்த தங்கள் குழந்தைக்கு முஸ்லிம் பெயரான சானியா என்று வைத்தனர்.
தற்போது சானியா மிர்சா, பாகிஸ்தானியரை மணந்துள்ளதால் இந்த தம்பதியர் கோபமடைந்துள்ளனர். எனவே, தங்கள் மகளுக்கு வைத்த சானியா பெயரை மாற்றி, 'சங்கீதா' என பதிவு செய்ய விண்ணப்பம் செய்துள்ளனர்.

கொரடாச்சேரி தேர்தலில் பாதுகாப்பாக ஓட்டு போட ஏற்பாடு

கொரடாச்சேரி பேரூராட்சித் தேர்தலில் வாக்காளர்கள் பாதுகாப்பான முறையில் ஓட்டு போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள

செய்திக்குறிப்பு:கொரடாச்சேரியில் உள்ள 15 பேரூராட்சி வார்டுகளுக்கு வரும் 19ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. இதில் ஆயிரத்து 942 ஆண் வாக்காளர்கள், ஆயிரத்து 915 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 3 ஆயிரத்து 857 பேர் ஓட்டு போட உள்ளனர். வார்டுக்கு 2 வேட்பாளர்கள் வீதம் 30 பேர் களத்தில் உள்ளனர். வரும் 19ம் தேதி காலை 7மணி முதல் மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது.

வாக்காளர்கள் பாதுகாப்பான முறையில் ஓட்டு போட தகுந்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே வாக்காளர்கள் எந்தவித பயமும், பதட்டமும் இன்றி வாக்களிக்கலாம். வார்டு எண் 1 மற்றும் 2க்கு வடக்கு மாங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், வார்டு 3 முதல் 12 முடிய கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், வார்டு எண் 13, 14, 15க்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஓட்டுப்பதிவு மின்னணு இயந்திரம் மூலம் நடக்க உள்ளது. மின்னணு இயந்திரத்தில் ஓட்டுப்பதிவு செய்யப்படும் முறை குறித்து இன்று (15ம் தேதி) பொதுமக்கள் கூடும் இடங்களில் மாதிரி செயல்முறை விளக்க முகாம் நடக்க உள்ளது. வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்குள் செல்போன் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை.வாக்காளர்கள், புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அல்லது பாஸ்போர்ட், 31.12.2009 வரை பெற்றுள்ள ஓட்டுனர் உரிமம், வருமானவரி சான்று அடையாள அட்டை, மத்திய, மாநில அரசு, உள்ளாட்சி நிறுவனம் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கான அடையாள அட்டை, 31.12.2009 வரை எடுக்கப்பட்ட புகைப்படம் எடுக்கப்பட்ட பொதுத்துறை வங்கிகள் மற்றும் தபால் நிலைய கிஷான் பாஸ் புத்தகம், அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் வழங்கப்பட்ட அடையாள அட்டை, முன்னாள் ராணுவ வீரருக்கான ஓய்வூதிய பாஸ்புக், ஓய்வூதிய உத்தரவு, முன்னாள் ராணுவத்தினரின் விதவை மனைவி மற்றும் சார்ந்தோர் சான்றுகள்.புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய உத்தரவு மற்றும் விதவை ஓய்வூதிய உத்தரவு, ரயில்வே அடையாள அட்டை, சுதந்திரபோராட்ட தியாகிகளின் அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய ஆயுத உரிமம், உடல் ஊனமுற்றோர் அடையாள அட்டை, சொத்து பத்திரம், பதிவு பத்திரம், தாழ்த்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்பதற்கான புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, 100 நாள் வேலை திட்ட அடையாள அட்டை, மருத்துவ காப்பீட்டு திட்ட அடையாள அட்டை ஆகிய ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பித்து ஓட்டு போடலாம்.

தஞ்சாவூர் பாரத் கல்லூரியில் நாளை வேலை வாய்ப்பு முகாம்

தஞ்சை அப்டெக் கம்ப்யூட்டர் மையம் சார்பில் ஆயிரம் பேருக்கு வேலை வழங்கும் வேலை வாய்ப்பு முகாம் தஞ்சை பாரத் கல்லூரி வளாகத்தில் நாளை நடக்கிறது.தஞ்சை அப்டெக் கம்ப்யூட்டர் மையம், ஹெச்.சி.எல். கம்பெனியின் பி.பிஓ. நிறுவனம் இணைந்து வேலைவாய்ப்பு முகாமை நாளை (16ம்தேதி) நடத்துகின்றன.

இந்த முகாமில் ஆயிரம் பேருக்கு வேலை வழங்கும் வகையில் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.முற்றிலும் இலவசமாக நடத்தப்படும் இந்த முகாமில் பள்ளி மேற்படிப்பு முடித்தவர்கள் முதல் பட்டதாரிகள் வரை பங்கேற்கலாம் என்று தஞ்சை அப்டெக் கம்ப்யூட்டர் மைய நிர்வாக இயக்குனர் இளமுருகன் தெரிவித்து உள்ளார்.

குழந்தைகளை கல்வி கற்க அனுப்பாத பெற்றோர் மீது சட்டப்படி நடவடிக்கை : நாகை கலெக்டர் எச்சரிக்கை

பள்ளிக்கு குழந்தைகளை கல்வி கற்க அனுப்பாத பெற்றோர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் (பொ) அண்ணாதுரை தெரிவித்தார்.வேதாரண்யம் அருகே தகட்டூர் ஊராட்சியில் மனுநீதி நாள் முகாம் நடந்தது. ஆர்.டி.ஓ., ராஜேந்திரன், மாவட்ட கவுன்சிலர் அனந்தராசு, ஒன்றிய கவுன்சிலர் கோவிந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கலெக்டர் (பொ) அண்ணாதுரை தலைமை வகித்து பொதுமக்கள் அளித்த 133 மனுக்களை பெற்றுக் கொண்டார். அதில் 93 மனுக்கள் மீது உடன் நடவடிக்கை எடுத்து பயனாளிக்குத் தேவையான உதவிகளை செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர் அவர் பேசியதாவது:தற்போது கட்டாய கல்வி திட்டம் குறித்து தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வேதாரண்யம் பகுதி முழுவதும் ஆசிரியர்களும், அரசு பணியாளர்களும் நிறைந்த பகுதியாகும். எனினும் 158 பேர் பள்ளிகளுக்கு சென்று படிக்கவில்லை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சட்டப்படி பெற்றோர் தங்களது பிள்ளைகளை கல்வி கற்க பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டும். இதற்கு கல்வித்துறை அதிகாரிகளும், அரசின் மற்ற அதிகாரிகளும் கண்காணித்து பள்ளி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்விக்கு கட்டணமில்லை.

கல்வி கற்க குழந்தைகளை அனுப்பாத பெற்றோர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். புற்றுநோய்க்கு காரணமாக விளங்கும் புகையிலையை தவிர்த்து மாற்றுப் பயிர் வகைகளை விவசாயிகள் பயிர் செய்ய வேண்டும் என்றார்.மேலும் 36 பேருக்கு திருமண உதவி, 4 பேருக்கு புதிய பட்டா வழங்குதல், 9 பேருக்கு முதியோர் உதவித்தொகை என பல நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

தாசில்தார் கருணாகரன், ஒன்றிய ஆணையர்கள் மூர்த்தி, மஞ்சுளா, நெடுஞ்சாலை உதவி கோட்ட பொறியாளர் ரவி மற்றும் பலர் கலந்து கொண்டனர். தகட்டூர் ஊராட்சித் தலைவர் அமிர்தகடேஸ்வரன் வரவேற்றார். தாசில்தார் கருணாகரன் நன்றி கூறினார்.

'முழு உடல்' காட்டும் ஸ்கேனர் கருவிகள்: இந்தியாவிலும் பொருத்த திட்டம்?

தற்போது அமெரிக்க விமான நிலையங்களில் பயன்படுத்தப்பட்டு வரும், முழுஉடல் பரிசோதனைக் கருவிகள் (ஸ்கேனர்), விரைவில் இந்திய விமான நிலையங்களிலும் வர உள்ளது. பெண்கள் உடலில் செலுத்திக் கொள்ளும், 'சிலிக்கானை'க் கூட இது வெட்ட வெளிச்சமாகக் காட்டி விடும். அமெரிக்க விமான நிலையங்களில் முழு உடல் பரிசோதனைக் கருவிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இதற்கு பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், பாதுகாப்பு குறித்த விஷயங்களில் சமரசம் செய்து கொள்ள முடியாது என, அமெரிக்கா உறுதியுடன் தெரிவித்து விட்டது.

பயங்கரவாதம் பல வடிவம் எடுத்து உலவி வரும் வேளையில், இந்திய விமான நிலையங்களிலும் இந்த முழுஉடல் பரிசோதனைக் கருவிகளைப் பயன்படுத்துவது குறித்து, இந்திய விமான நிலைய உயரதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். 'மில்லி மீட்டர் வேவ் ஸ்கேனர்' மற்றும் 'பேக்ஸ்கேட்டர் ஸ்கேனர்' என, இருவகைக் கருவிகள் தற்போது தயாரிக்கப்படுகின்றன. இவற்றில் மி.மீ., ஸ்கேனர் என்பது வட்டவடிவில் இருக்கும். இதன் சுவர்களில் கண்ணாடி இருக்கும். சுவர்களில், ஸ்கேன் செய்யும் கருவிகள் பொருத்தப்பட்டிருக்கும்.

அவற்றிலிருந்து சிறிய அளவிலான ரேடியோ அலைகள் வெளிவந்து உடலைத் தொட்டு, திரும்பும். பாதுகாப்பு அறையில் பொருத்தப்பட்டுள்ள கணினி திரையில் உடல் முழுவதும் தெரியும். மனித சதைக்கு மாறாக ஏதேனும் இருந்தால், சத்தம் வரும். 'பேக்ஸ்கேட்டர் ஸ்கேனர்' கருவி, இரண்டு செவ்வகப் பெட்டி வடிவிலான தூண்களாக இருக்கும். இவற்றுக்கிடையில் ஒருவர் நிற்கும்போது, அவர் உடலின் மீது, தூண்களிலிருந்து குறைந்த வீச்சுடைய எக்ஸ்-ரே கதிர்கள் வெளிவரும். அவை உடலில் பட்டு திரும்பும்.
இந்த இரண்டு முறையிலும், பரிசோதிக்கப்படுபவரின் உடல் மற்றோர் இடத்தில் வைக்கப் பட்டுள்ள கணினி திரையில்தான் தெரியும்.

இந்த இரண்டு, 'ஸ்கேனர்'களுமே, உடலில், சதை தவிர மற்ற எந்த பொருளையும் துல்லியமாகக் காட்டி விடும். பேஸ்மேக்கர், எலும்புக்கு பதிலாக பொருத்தப்படும் இரும்பு கம்பிகள், சிலிக்கான் பொருத்தப்பட்ட செயற்கை மார்பகங்கள் ஆகியவற்றை துல்லியமாக காட்டி விடும். இதுகுறித்து, விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறுகையில்,'இந்தக் கருவிகளிலிருந்து வரும் கதிர்கள், நம் உடலில் படும் சூரியக் கதிர்களை விட குறைவான சக்தி உடையவைதான். ஆனாலும் இவற்றின் மூலம் உடல்நலத்துக்குத் தீங்கு ஏற்படுமா என்று ஆராய்ந்த பின்னரே இவை நிறுவப்படும். அதே நேரம், பெண்களை பெண் அதிகாரிகளும், ஆண்களை ஆண் அதிகாரிகளும் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படலாம்' என்று தெரிவித்தார்.