ஹக்கீமுல்லா மசூத் மரணம்

பாகிஸ்தான்தலிபான் அமைப்பின் தலைவர் ஹக்கீமுல்லா மசூத் இறந்து விட்டதாக அந்த அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.


ஜனவரி 14ம் தேதி வசிரிஸ்தானின் சாக்தோய் பகுதியில், அமெரிக்கப் படையினர் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் ஹக்கீமுல்லா படுகாயமடைந்தார். அவர் உயிரிழந்து விட்டதாக பின்னர் அமெரிக்கப் படையினருக்குத் தகவல் கிடைத்தது. இத்தகவல் பாகிஸ்தான் ராணுவத்திற்கும் கிடைத்தது.

இருப்பினும் இதை இரு தரப்பும் உறுதிப்படுத்த முடியாமல் இருந்தன. இந்த நிலையில் ஹக்கீமுல்லா சிகிச்சை பலனளிக்காமல் இறந்து விட்டதாக பாகிஸ்தான் தலிபான் அமைப்பே அறிவித்துள்ளது.

இதன் மூலம் ஹக்கீமுல்லா நிலை குறித்து நிலவி வந்த குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது. ஹக்கீமுல்லாவின் மரணம், அமெரிக்க, பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு பெரும் உற்சாகம் அளிக்கக் கூடிய செய்தியாகும்.

அராக்சாய் பழங்குடியினப் பகுதியில் உள்ள தலிபான் அமைப்பினர் ஹக்கீமுல்லாவின் மரணச் செய்தியை உறுதிப்படுத்தி பேட்டி அளித்துள்ளனர்.

அதில், 28 வயதான ஹக்கீமுல்லா மசூத், ஏவுகணைத் தாக்குதலில் படுகாயமடைந்தார். காயத்திலிருந்து மீள முடியாமல் அவர் மரணமடைந்து விட்டார் என்று தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் முல்தான் நகருக்கு சிகிச்சைக்காக ஹக்கீமுல்லா கொண்டு வரப்பட்டதாகவும், அங்கிருந்து அவரை கராச்சி கொண்டு செல்ல முயற்சிகள் நடந்ததாகவும் கூறப்படுகிறது. அந்த சமயத்தில்தான் அவர் உயிரிழந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

உயிரிழந்ததைத் தொடர்ந்து ஹக்கீமுல்லாவின் உடலை மீண்டும் தலிபான்கள் ஆதிக்கம் நிறைந்துள்ள பழங்குடியினப் பகுதிக்கே கொண்டு சென்று விட்டனராம்.

அதேசமயம் இன்னொரு தகவலும் வெளியாகியுள்ளது. ஹக்கீமுல்லா 2 வாரங்களுக்கு முன்பு இறந்து விட்டதாகவும், அவரது உடலை அராக்சாய் கிராமப் பகுதியில் மாமனாரின் உடல் புதைக்கப்பட்ட இடத்திற்கு அருகே புதைத்து விட்டதாகவும் அத்தகவல் கூறுகிறது.

தலிபான் தலைவர்கள் ஹக்கீமுல்லாவின் மரணத்தை ஒப்புக் கொண்டுள்ள நிலையில் தலிபான் அமைப்பின் செய்தித் தொடர்பாளரான அஸம் தாரிக் இதுகுறித்து இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.

இவர் ஹக்கீமுல்லா உயிருடன் இருப்பதாக தொடர்ந்து கூறி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

t

0 comments: