ஏர் இந்தியா விமானங்களுக்கு மிரட்டல்
மும்பையில் உள்ள ஏர்-இந்தியா அலுவலகத்திற்கு நேற்று ஒரு இ-மெயில் வந்தது. அதில், ஏர்-இந்தியா விமானங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. அவை வெடித்துச் சிதறும் என்று மிரட்டப்பட்டிருந்தது.
இதையடுத்து அனைத்து விமான நிலையங்களும் உஷார்படுத்தப்பட்டு வெடிகுண்டு சோதனை, கண்காணிப்புக்கு உத்தரவிடப்பட்டது. பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டது.
டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூர் , ஹைதராபாத், கொச்சி உள்ளிட்ட உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான நிலையங்களில் விமான நிலைய அதிகாரிகள் கண்காணிப்பு மற்றும் சோதனையை தீவிரப்படுத்தினர்.
சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு முனையம், காமராஜர் உள்நாட்டு முனையம் ஆகியவற்றில் இருந்து புறப்பட்டு செல்லும் ஏர்-இந்தியா, இந்தியன் ஏர்லைன்ஸ், ஏர்-இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகிய விமானங்களில் பயணிகள் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.
சென்னையில் இருந்து ஏர்-இந்தியா நிறுவனங்களில் இருந்து கொழும்பு, சிங்கப்பூர், கோலாலம்பூர், துபாய், டெல்லி, கொல்கத்தா, மும்பை உள்பட பல்வேறு நகரங்களுக்கு செல்ல கூடிய 37 விமானங்களிலும் அதிகாரிகள் பலகட்ட சோதனை செய்து பயணிகளை அனுப்பி வைத்தனர்.
விமான பயணிகள் அனைத்து விதமான திரவ பொருட்களையும் எடுத்து செல்லவும் தடை விதிக்கப்பட்டது. விமானங்களில் திரவ பொருட்களை எடுத்துச் செல்வதற்கு ஏற்கனவே தடை உள்ளது. திரவ வடிவில் குண்டுகளை எடுத்துச்சென்று வெடிக்கச் செய்ய முடியும் என்பதால் இந்த தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனஆல் இது சரியான முறையில் நடைமுறையில் இல்லை.
ஆனால் நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த உத்தரவை அதிகாரிகள் தீவிரமாக அமல்படுத்தினர்.
நேற்று நாடு முழுவதும் நடந்த சோதனையில் எங்கும் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்படவில்லை. இருப்பினும் தொடர்ந்து அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
பெற்றோர் இருக்கும் போதே அநாதை பட்டம்
பேரூர், காளம்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே மூன்று வயது சிறுமி, மூன்று சிறுவர்கள் பொது மக்களிடம் தங்களது கையில் வைத்திருந்த அட்டையை காட்டி பிச்சை கேட்டனர்.
அந்த அட்டையில், இவர்களுக்கு, பணமோ, துணியோ கொடுத்து உதவுங்கள் என்றும் இப்படிக்கு அனாதை ஆசிரம தலைவர் கிருஷ்ணய்யா என புகைப்படத்துடன் கையெழுத்திட்டு இருந்தது.
இதனையடுத்து, பொதுமக்கள் சிலர் அந்த ஆசிரம தலைவரோடு போனில் பேசியபோது, பணம் இருந்தால் குழந்தைகளிடம் கொடுங்கள், இல்லாவிட்டால் குழந்தையை விட்டு விடுங்கள் என ஆசிரம தலைவர் கூறியுள்ளார்.
சந்தேகமடைந்த பொதுமக்கள், குழந்தைகளை போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில் அந்த குழந்தைகள் பெயர், அனிதா (5), அஜய் (7), மஞ்சு (9), தேவா (6) என தெரிய வந்தது.
இந்த குழந்தைகளின் பெற்றோர்கள் ஆலாந்துறையில் உயிரோடு தங்கியிருப்பதும், ஆசிரமத்தின் உத்தரவின் பேரிலேயே இந்த குழந்தைகளை பிச்சை எடுக்க வைத்துள்ளதும் தெரியவந்துள்ளது.
பைலட் மர்ம சாவு
தனியார் விமான நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தவர் பைலட் கிருஷ்ண நாராயணன் (28). இவர் திருவான்மியூரில் தங்கியிருந்தார். சில நாட்களுக்கு முன்பு வீ்ட்டுக் கதவு மூடப்பட்டு வெளியூர் போயிருப்பதாக ஒரு அட்டை தொங்க விடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், நேற்று வீட்டிலிருந்து மிகவும் துர்நாற்றம் வீசியதால் அக்கம் பக்கத்தினர் சந்தேகமடைந்து போலீஸுக்குத் தகவல் தெரிவித்தனர்.
போலீஸார் விரைந்து வந்து பூட்டை உடைத்து உள்ளே போய் பார்த்தபோது அழுகிய நிலையில் கிருஷ்ண நாராயணன் பிணமாகக் கிடந்ததைப் பார்த்தனர்.
கட்டில் மீது உடல் விழுந்து கிடந்தது. ஐந்து அல்லது 6 நாட்களுக்கு முன்பு நாராயணன் கொல்லப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
அவரைக் கொலை செய்து விட்டு வீட்டுக்கு வெளியே வெளியூர் போயிருப்பதாக அட்டையை சிலர் தொங்க விட்டுச் சென்றிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.
இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.
இன்றைய மொஹாலி போட்டியில் இந்தியா வென்றால் முதலிடம் கிடைக்கும்
இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான 7 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் இதுவரை 3 போட்டிகள் முடிந்துள்ளன. முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவும், கடைசி இரு போட்டிகளில் இந்தியாவும் வென்றுள்ளன.
4வது ஒரு நாள் போட்டி இன்று மொஹாலியில் நடைபெறுகிறது. இதிலும் வெற்றி பெற்று விட வேண்டும் என்ற வேகத்துடன் இந்திய அணி உள்ளது.
இன்றைய போட்டியில் இந்தியா வென்றால் ஒரு நாள் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்கும்.
தற்போது முதலிடத்தில் ஆஸ்திரேலியா (127 புள்ளிகள்) உள்ளது. அடுத்த இடத்தில் இந்தியா 126 புள்ளிகளுடன் உள்ளது. எனவே இன்றைய போட்டியில் இந்தியா வென்றால் முதலிடத்தைப் பிடிக்கும்.
போட்டித் தொடர் தொடங்குவதற்கு முன்பு இந்தியாவுக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான புள்ளிகள் வித்தியாசம் 4 ஆக இருந்தது. ஆனால் 2 மற்றும் 3வது ஒரு நாள் போட்டிகளில் இந்தியா அபாரமாக வென்றதன் மூலம் ஒரு புள்ளி வித்தியாசமாக குறைந்து விட்டது.
தென் ஆப்பிரிக்கா 121 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது.
சர்வதேசியமாகிறது இன்டர்நெட்- இனி எந்த மொழியிலும் டொமைன்!
மேலும், டொமைன் பெயர்களில், உலகின் எந்த மொழியையும் பயன்படுத்தவும் அது அனுமதி அளித்துள்ளது.
இதுகுறித்த முடிவு சியோலில் நடந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இதுகுறித்து ஐசிஏஎன்என் தலைவர் ராட் பெக்ஸ்டிரோம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இது இன்டர்நெட் பயன்பாட்டாளர்களிடையே மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
இது முதல் படி மட்டுமே. ஆனால் இது மிகப் பெரிய வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த முடிவாகும். இனிமேல் இன்டர்நெட், சர்வதேசியமாகிறது.
ஆசியா, மத்திய கிழக்கு, ரஷ்யா போன்ற நாடுகளைச் சேர்ந்த கோடிக்கணக்கான மக்கள் இனிமேல் இன்டர்நெட்டை மிக எளிதாக கையாள முடியும் என்றார்.
நவம்பர் 16ம் தேதி முதல் இந்தத் திட்டம் படிப்படியாக அமலுக்கு வருகிறது.
தொடக்கத்தில், சைனீஸ், கொரியன், அரபி ஆகிய மொழிகளில் அமைந்த சர்வதேச டொமைன் பெயர்களை இந்த அமைப்பு ஒதுக்கும். அதன் பிறகு உலகின் அனைத்து மொழிகளிலும் டொமைன் பெயர்கள் வழங்கப்படும்.
1998ம் ஆண்டு ஐசிஏஎன்என் தொடங்கப்பட்டது. அமெரிக்க அரசின் வர்த்தகத்துறையின் கீழ் இது செயல்பட்டு வருகிறது.
.com போன்ற டொமைன் பெயர்களை இந்த அமைப்புதான் முடிவு செய்கிறது.
கடந்த மாதம், இந்த அமைப்பு அமெரிக்காவுக்கு மட்டும் உரியதாக இல்லாமல், சர்வதேச அளவிலான அமைப்பாக மாற வேண்டும் என்று அமெரிக்க அரசு முடிவு செய்து அதற்கான அனுமதியையும் வழங்கியது.
இதன் மூலம் தற்போது முதல் அதிரடி மாற்றத்தை ஐசிஏஎன்என் அறிவித்துள்ளது.
விமான எரிபொருள் கட்டணம் மீண்டும் உயர்வு!
ஏவியேஷன் டர்பைன் ஃப்யூயல் (ATF) எனப்படும் விமான பெட்ரோல் விலையை மாதந்தோறும் முதல் மற்றும் 16-ம் தேதிகளில் மறு சீரமைப்பு செய்வது வழக்கம். இதுவரை விமானப் பெட்ரோலின் விலை கிலோ லிட்டருக்கு ரூ. 36,188.27 ஆக இருந்தது.
ஆனால் மீண்டும் அதனை 9 சதவிகிதம் அளவுக்கு விலை உயர்த்தியுள்ளன எண்ணெய் நிறுவனங்கள். நான்கு முக்கிய நகரங்களிலும் இந்த விமான எரிபொருளின் விலை எவ்வளவு என்று இன்று மாலை அல்லது நாளை எண்ணெய் நிறுவனங்கள் அறிவிக்க உள்ளன.
இந்த அளவு விலை உயர்த்தப்பட்டுள்ளதால், அது விமான கட்டணங்களிலும் எதிரொலிக்கும் என்று தெரிகிறது.
தமிழ் இளைஞரை கடலில் வைத்து அடித்துக் கொன்ற சிங்களர்கள்
தமிழர்களுக்கு எதிரான சிங்களர்களின் விஷ மனோபாவம் இதன் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
வியாழக்கிழமை கொழும்பு பம்பலப்பிட்டி பகுதியில் பாலகிருஷ்ணன் சிவக்குமார் என்ற 26 வயது இளைஞரை சிங்களக் கும்பல் துரத்தியது. அவர் மன நலம் பாதிக்கப்பட்டவர் போல காணப்பட்டார். சிவக்குமார் ரத்மலானை பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.
வாகனங்கள் மீதும், ரயில் மீதும் அவர் கல் எறிந்தார் என்று கூறி சிங்களர்கள் துரத்தித் தாக்கினர். அவர் தமிழர் என்று தெரிய வந்ததும் மூர்க்கத்தனமாக துரத்தினர். இதனால் பயந்து போன பாலகிருஷ்ணன் கடலில் குதித்தார்.
ஆனால் அவரை தொடர்ந்து துரத்திச் சென்ற காவல்துறை அதிகாரி ஒருவர் அந்த அப்பாவி தமிழ் இளைஞரை கொடூரமாகத தாக்கினார். கையில் இருந்த பெல்ட்டால் சரமாரியாக அடித்தார். கையெடுத்துக் கும்பிட்டபடி தன்னை விட்டுவிடுமாறு அந்த இளைஞர் கெஞ்சியும் கூட மனிதாபிமானமே இல்லாமல் அந்த போலீஸ் அதிகாரி அடித்தார்.
இதில் காயமடைந்து கடலில் மூழ்கிய அந்த இளைஞர் சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்தக் காட்சிகள் அனைத்தும் ஒருவரால் செல்போன் கேமராவில் பதிவு செய்யப்பட்டு இலங்கை தனியார் தொலைக்காட்சி ஒன்றில் வெளியாகியுள்ளது.
போராட்டம்...
இந்தக் கோர சம்பவத்தைக் கண்டித்து நவம்பர் 4ம் தேதி கொழும்பு கோட்டை ரயில் நிலையம் முன்பு போராட்டம் நடத்தப் போவதாக ஜனநாயக மக்கள் முன்னணி அறிவித்துள்ளது.
தொண்டியில் மர்ம காய்ச்சல்* பெண் பலி
வட்டார மருத்துவ அலுவலர் துரைசாமி கூறுகையில்,""இந்த பகுதியில் மழைநீரில் வாழும் கொசு மூலம் வைரஸ் காய்ச்சல் பரவுகிறது.வீட்டு மூலையில் 100 மில்லி தண்ணீர் தேங்கியிருந்தால் கூட அதில் கொசு உற்பத்தியாகிவிடும். மழை நீர் தேங்காதவண்ணம் வீட்டை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் ''என்றார். பவுசல்நிஷா இறந்தைதை யொட்டி தொண்டி பகுதி முழுவதும் சுகாதார துறையினர் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
பாம்பனில் கடல் சீற்றம் *மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
ராமநாதபுரம் மாவட்டத்தில் வட கிழக்கு பருவ மழை துவங்கி பரவலாக பெய்து வருகிறது. கடலோர பகுதிகளான ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக ராமேஸ்வரத்தில் 30.20 மி.மீட்டர் பதிவானது. தனுஷ்கோடி பகுதியில் காற்று அதிகமாக வீசியதால் பயணிகள் தனுஷ்கோடி பகுதிக்கு செல்லமுடியவில்லை.
கோதண்டராமர் கோயில் வரை சென்று திரும்பினர்.மழையால் ராமேஸ்வரம் கடற்கரை பகுதியிலும் சுற்றுலா பயணிகளை அதிகளவு காணமுடியவில்லை. காற்றால் கடல் வழக்கத்துக்கு மாறாக சீற்றத்துடன் காணப்பட்டது. பாம்பன் பகுதியில் அலைகள் சிறி பாய்ந்தன. கடல் சீற்றமாக இருந்ததால் பாம்பனில் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை. ராமேஸ்வரத்தில் வழக்கம்போல் டோக்கன் வழங்கப்பட்டாலும், சிலர் மட்டுமே மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். மழை தொடர்ந்து பெய்தாலும் பாம்பனில் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்படவில்லை.
மகளை உல்லாசத்துக்கு அழைத்தவரை கண்டித்த தாய் அடித்துக் கொலை
வளப்பக்குடி நடுத்தெருவை சேர்ந்தவர் மூக்கன் மகன் சேகர் (40). இவர் அடிக்கடி தனலட்சுமியிடம் தவறாக நடக்க முயன்றார். நேற்று முன்தினம் இரவு பழனியம்மாளும், தனலட்சுமியும் திருக்காட்டுப்பள்ளியில் இருந்து வளப்பக்குடிக்கு பஸ்ஸில் வந்தனர். அதே பஸ்ஸில் வந்த சேகர், தனலட்சுமியை உல்லாசமாக இருக்க அழைத்தார். இதையறிந்த பழனியம்மாள் வளப்பக்குடி வந்ததும் சேகரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் கோபமடைந்த சேகர், தனது துண்டில் கருங்கல்லை கட்டி பழனியம்மாளை தாக்கினார். இதில், பலத்த காயமடைந்த பழனியம்மாள் அதே இடத்தில் இறந்தார். இதுகுறித்து தனலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் மரூர் போலீஸ் எஸ்.ஐ., பாலதண்டாயுதபாணி வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள சேகரை தேடி வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜன., 21ல் மீண்டும் கள் இறக்கும் போராட்டம்
தஞ்சாவூர் பெசன்ட் அரங்கில் காவிரி டெல்டா மாவட்டங்களின் கள் இயக்க ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு பதநீர் இறக்கும் தொழிலாளர் சங்க மாநில தலைவர் தவமணிதாஸ் தலைமையில் நடந்தது. காவிரி டெ ல்டா மாவட்ட விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் ஆறுபாதி கல்யாணம் முன்னிலை வகித்தார்.
தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கூறியதாவது: கள்ளுக்கு எதிராக இருப்பவர்களின் கருத்தையும், ஆதரவானவர்களின் கருத்தையும் பதிவு செய்யும் பொருட்டு கடந்த மே 31ம் தேதி சென்னை ஐகோர்ட் ஓய்வுபெற்ற நீதிபதி சிவசுப்பிரமணியம் தலைமையிலான நால்வர் குழு தமிழக அரசால் அமைக்கப்பட்டது. கள் இறக்கும் அறப்போராட்டம் அறிவித்த நாளில் அதை எதிர்த்து அறிக்கை விட்டதோடு அல்லாமல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு, தமிழ்நாடு அரசு பனை தொழிலாளர் நல வாரியத்தலைவர் குமரி அனந்தனும் சென்னையில் உண்ணாவிரதம் இருந்தனர். கோபி எம்.எல்.ஏ., செங்கோட்டையன், கள்ளுக்கு ஆதரவாக சட்டசபையில் பேசியவர்களை விமர்சனம் செய்தார். விசாரணைக்குழு மதுரை, நெல்லை, ஈரோடு, சேலம் வந்திருந்த போது, அவர்கள் மூன்று பேரும் தங்கள் தரப்பு வாதத்தை எடுத்து கூறி பதிவு செய்திருக்க வேண்டும்.
கடந்த சில ஆண்டாக விவசாயிகளும், பனைத் தொழிலாளர்களும் கள்ளுக்கு விதித்திருக்கும் தடையை நீக்க வேண்டி அமைதியான முறையில் போராடி வருகிறார்கள். ஒரு சிலர் கள்ளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
"அனைத்தையும் பரிசீலித்து தேர்தலுக்கு பிறகு ஒரு நல்ல முடிவு எடுக்கப்படும்' என தமிழக முதல்வர் கருணாநிதி கூறியதை அந்த மூன்று பேரும் மறந்து விடக்கூடாது. அவர்களுக்காகவே மக்களின் வரிப்பணத்தில் இந்த விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த மூவர் தரப்பு வாதத்திலும், பதிவிலும் நியாயம் இருந்தால் அது கள் இயக்கப் போராளிகளின் போக்கை திருத்திக் கொள்ளவும், நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவும் ஏதுவாக இருக்கும். இந்த கருத்து ஏற்கனவே மூன்று பேருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சைக்கு வந்து அவர்களுடைய கருத்துகளை பதிவு செய்ய வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அது நிராகரிக்கப்பட்டு விட்டது. அடுத்து விசாரணை நடக்கவுள்ள திருவண்ணாமலைக்கு வந்து இந்த வாய்ப்பை அவர்கள் பயன்படுத்தி எதிரணியினரை நல்வழிப்படுத்த வேண்டும்.
அவர்கள் இந்த நல்வழியை உதாசீனப்படுத்தி கண்டுகொள்ளாத போக்கைக் கடைபிடித்தால் அவர்களை கண்டித்து இறுதி விசாரணைக்கு பிறகு குமரிஅனந்தன், தங்கபாலு மீது எத்தகைய நடவடிக்கை என்பது குறித்து செயற்குழு முடிவு எடுக்கும். செங்கோட்டையன் வரும் சட்டசபை தொகுதியில் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும், சேல ம் லோக்சபா தொகுதியில் தங்கபாலுவை தோற்கடித்தது போல் அவரை தோற்கடிப்போம். விசாரணைக்குழு நவம்பர் இறுதியில் தனது அறிக்கையை தாக்கல் செய்யும். பால் கூட்டுறவு உற்பத்தியாளர்கள் சங்கம் போல், கள் கூட்டுறவு உற்பத்தியாளர் சங்கம் ஏற்படுத்த வேண்டும். அரசிக்கு மானியம் வழங்குவதை போல், கள்ளுக்கும் மான்யம் வழங்கம் வேண்டும்.
தமிழக அரசு கள் மீதான தடையை நீக்கி கள் இறக்க அனுமதிக்க வேண்டும். அரசு சாதகமான முடிவு எடுக்கவில்லை என்றால், வரும் ஜனவரி 21ம் தேதி மாநிலம் தழுவிய அளவில் கள் இறக்கும் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு நல்லசாமி தெரிவித்தார்.
இந்திய விவசாயிகள் சங்க தலைவர் குருசாமி, ஐக்கிய விவசாயிகள் சங்க தலைவர் வையாபுரி, அமராவதி ஆறு பாசன விசாயிகள் சங்கம் செல்லமுத்து, தூத்துக்குடி ராயப்பன், திருவண்ணாமலை புருஷோத்தமன், கள் இயக்க அமைப்பாளர் கதிரேசன், விருதுநகர் மாவட்ட பனை தொழிலாளர் சங்க தலைவர் பாலசுப்பிரமணியன், கொங்கு மண்டல ஆய்வு மன்ற தலைவர் உடுமலை ரவிக்குமார், பனைத் தென்னை தொழிலாளர் நல மாநில துணைத்தலைவர் பொள்ளாச்சி முருகன், கீழ்பவானி பாசன விவசாயிகள் சங்க பொறுப்பாளர் தங்கராசு உட்பட பலர் பங்கேற்றனர்.
கூகுள், பேஸ்புக்கில் இசை சேவை அதிகரிப்பு

இசை பிரியர்களுக்காக, கூகுள் மற்றும் பேஸ்புக் ஆகியவை புதிய சேவைகளை அறிமுகப்படுத்த உள்ளன.கூகுள் அறிமுகப்படுத்த உள்ள புதிய இசை சேவை மூலம், அதை பயன்படுத்துபவர்கள், பேண்ட்கள், ஆல்பம் மற்றும் பாடல்கள் குறித்த தகவல்களை அறிந்து கொள்ளலாம். இதற்காக, கூகுள் நிறுவனம் லாலா, இமீம், மைஸ்பேஸ் டிவிஷன் ஐலைக் ஆகியவற்றுடன் தொடர்பு வைத்துள்ளது.
இதன் மூலம் கூகுள் இணையதளத்தில் பாடல்கள் தேடுவோர், தாங்கள் தேர்ந்தெடுக்கும் சாம்பிள் பாடல்களை 30 வினாடிகள் வரை கேட்டு அதன் பின் தங்களுக்கு தேவையான பாடல்களை தேர்ந்தெடுக்கலாம். சில நேரங்களில் முழு பாடலையும் கேட்க முடியும்.கூகுள் மட்டுமல்லாது, பேஸ்புக்கும், இசை சேவையில் ஈடுபட்டுள்ளது. ஒராண்டிற்கு முன்பே பேஸ்புக், இசை சேவையை தன் இணையதளத்தில் வழங்க தொடங்கினாலும், தற்போது தன் கிப்ட் ஸ்டோரில், இசை சேவை வழங்கும் நிறுவனத்தையும் இணைத்துள்ளது.
பேஸ்புக் கிப்ட் ஸ்டோரில்,ஏற்கனவே, பிறந்த நாள் கேக்குகள் உட்பட பல்வேறு படங்கள் என ஏராளமானவைகள் உள்ளன. மக்கள் இந்த படங்களை பணம் செலுத்தி பெறுகின்றனர். இதே போன்று, தற்போது பேஸ்புக்கை பயன்படுத்துபவர்கள், அதில் இணைக்கப்பட்டுள்ள "லாலா'வில் இருந்து பாடல்களை பெறலாம். இதற்கு பேஸ்புக்கை பயன்படுத்துபவர்கள், கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தி, பாடங்களை டவுன்லோடு செய்து, தங்கள் மியூசிக் பிளேயருக்கு மாற்றலாம்.
மொபைல் போனில் ரயில் டிக்கெட் அமலாவதில் சிக்கல்
மொபைல் போன் மூலம் டிக்கெட் பதிவு செய்யும் முறையை அறிமுகம் செய்ய திட்டம் தீட்டியது. இதன்படி, ரயில் டிக்கெட் பெற நினைப்போர் மொபைல் போனில் எஸ்.எம்.எஸ்., செய்து, வேண்டிய டிக்கெட்டை பதிவு செய்து கொள்ளலாம். இந்த திட்டத்திற்கு, ரயில்வே போர்டு கடந்த டிசம்பர் மாதம் ஒப்புதல் அளித்திருந்தது. மும்பையை சேர்ந்த ஆக்சிஜன் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்திடம் பணியை ஒப்படைத்திருந்தது. இந்நிறுவனம் மேற்கு ரயில்வே மண்டலத்தில் முதன் முறையாக இந்த மாதம் துவக்க திட்டமிட்டிருந்தது.
ஆனால், இதற்கான ஏற்பாடுகள் இன்னும் பூர்த்தி அடையாததால், இந்த திட்டம் அமலாக இன்னும் சில மாதம் ஆகும் என்று தெரிகிறது. ரிசர்வ் வங்கி வகுத்த விதிமுறைகளுக்கு இந்நிறுவனம் கொள்கை அளவில் ஒத்துபோகவில்லை. ஆதலால், ரிசர்வ் வங்கி திட்டம் துவக்க உத்தரவு வழங்கவில்லை. மேலும், சாப்ட்வேர் தொழில்நுட்பத்தில் சில இயந்திரக் குறைபாடுகளும் உள்ளன என்றும் தெரிகிறது.
காஸ் சிலிண்டருக்கு ரூ.30 சலுகை ரத்து

ஒரு காஸ் சிலிண்டர் உபயோகப்படுத்தும் நுகர்வோருக்கு, மாநில அரசு வழங்கி வந்த 30 ரூபாய் மானியம் இன்று முதல் நிறுத்தப்படுகிறது. இனிமேல் சிங்கிள் சிலிண்டரை 316 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேல்தட்டு மக்கள் வீடுகள் முதல் அடித்தட்டு மக்கள் வீடுகள் வரை, காஸ் சிலிண்டர் உபயோகம் அத்தியாவசியமாகி விட்டது.
விறகு, மண்ணெண்ணெய் அடுப்பு பயன்படுத்துவது நகரங்களில் மட்டுமல்ல; கிராமங்களிலும் தவிர்க்கப்பட்டு வருகிறது. பெட்ரோல், டீசல் விலை ஏறும் போது காஸ் சிலிண்டர்களின் விலை ஏறுவதும் சகஜம். கடந்த 2004ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு அமைந்த பின், கடந்த 2008ம் ஆண்டு ஜூன் 5ம் தேதி காஸ் விலை உயர்த்தப்பட்டது. அதாவது, ஒரு சிலிண்டர் விலை 288 ரூபாயிலிருந்து 339 ரூபாயாக உயர்த்தப்பட்டது. உலகச் சந்தையில் கச்சா பொருள் விலை ஏற்றத்தினால் விலை உயர்வு தவிர்க்க முடியவில்லையென மத்திய அரசு அறிவித்தது. இருப்பினும் காங்கிரஸ் கட்சி ஆளுகிற டில்லி, ஆந்திர மாநிலங்களில் காஸ் உயர்வுக்கு 50 ரூபாய் மானியம் அளிக்க முன்வந்தது. உடனே, தமிழக அரசும் கடந்த ஆண்டு ஜூலை 1ம் தேதி முதல், ஒரு சிலிண்டர் உபயோகிப்பவர்களுக்கு 30 ரூபாய் மானியம் வழங்கப்படும் என அறிவித்தது.
காஸ் விலை உயர்வுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியதால், 339 ரூபாயாக உயர்த்தப்பட்ட காஸ் சிலிண்டர் விலை 314 ஆக குறைக்கப் பட்டது. ஆனால், காஸ் விலை குறைந்த பின்னும் மானியத்தை நிறுத்த மாநில அரசு விரும்பவில்லை. இதனால், ஒரு சிலிண்டர் விலை மற்றும் ஏஜன்ட் கமிஷன் சேர்த்து 286 ரூபாய்க்கு காஸ் ஏஜன்சிகள் கொடுத்து வந்தன. இதற்கு லோக்சபா தேர்தலும் ஒரு காரணமாக அமைந்தது. இந்நிலையில், ஒரு சிலிண்டருக்கு மாநில அரசு வழங்கி வந்த மானியம் 30 ரூபாய், இன்று முதல் நிறுத்தப்படுகிறது.
இது குறித்த வாய்மொழி உத்தரவை உணவு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் அதிகாரிகள், சம்பந்தப்பட்ட காஸ் ஏஜன்சி உரிமையாளர்களிடம் தொலைபேசி மூலம் நேற்று பிறப்பித்துள்ளனர். இதனால், நாளை முதல் ஒரு சிலிண்டரை உபயோகிக்கும் நுகர்வோர், 316 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஆசிய விளையாட்டுப் போட்டி

சீனாவில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணி சார்பில் பங்கேற்க புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரி மாணவி சூரியா தகுதி பெற்றுள்ளார். புதுக்கோட்டை வருமான வரித்துறை அலுவலகத்தில் பணியாற்றி வருபவர் லோகநாதன். இவர் மாணவ, மாணவிகளுக்கு தடகள விளையாட்டுப் போட்டிகளில் பயிற்சி அளித்துவருகிறார். இவரது மகள் சூரியா(19). இவர் புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் பி.காம்., இரண்டாவது ஆண்டு படிக்கிறார். புதுக்கோட்டை அடுத்த கவிநாடு இளைஞர் விளையாட்டு மன்றத்தில் உறுப்பினராக சேர்ந்து பயிற்சி பெற்றுவரும் மாணவி சூரியா மாநில மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு சாதனைகள் நிகழ்த்திவருகிறார்.
கடந்தாண்டு புனேயில் நடைபெற்ற யூத் காமன்வெல்த் போட்டிகளில் கலந்துகொண்டு மாவட்டத்துக்கு பெருமை சேர்த்துள்ளார். தென்கொரியாவில் நடைபெற்ற பெண்களுக்கான உலக சமாதான விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு வெள்ளி பதக்கம் வென்றதன் மூலம் இந்தியாவுக்கும், புதுக்கோட்டை மாவட்டத்துக்கும் பெருமை சேர்த்தார். சென்னையில் செப்டம்பர் 27ம் தேதி நடந்த கிவ் லைஃப் மாரத்தான் போட்டியில் முதல் பரிசு வென்றார். இதுபோன்று சென்னையில் நடந்த தேசிய அளவிலான சீனியர் பிரிவு தடகளப் போட்டியில் பங்கேற்று இரண்டாவது பரிசு வென்றார். இதன் தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவில் வரும் நவம்பர் 10ம் தேதி ஆரம்பமாகிறது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். 10 ஆயிரம் மீட்டர் தூர ஓட்டப் போட்டியில் இந்திய அணி சார்பில் பங்கேற்க புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரி மாணவி சூரியா தகுதி பெற்றுள்ளார். இதற்காக தீவிர ஓட்டப் பயிற்சியில் ஈடுபட்டுவரும் மாணவி சூரியா நவம்பர் முதல் வாரத்தில் சீனா செல்ல உள்ளார்.