ஜன., 21ல் மீண்டும் கள் இறக்கும் போராட்டம்

""தமிழக அரசு கள் இறக்க அனுமதிக்காவிட்டால் வரும் ஜனவரி 21ம் தேதி மாநில அளவில் கள் இறக்கும் போராட்டம் நடத்தப்படும்,'' என தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தெரிவித்தார்.

தஞ்சாவூர் பெசன்ட் அரங்கில் காவிரி டெல்டா மாவட்டங்களின் கள் இயக்க ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு பதநீர் இறக்கும் தொழிலாளர் சங்க மாநில தலைவர் தவமணிதாஸ் தலைமையில் நடந்தது. காவிரி டெ ல்டா மாவட்ட விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் ஆறுபாதி கல்யாணம் முன்னிலை வகித்தார்.



தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கூறியதாவது: கள்ளுக்கு எதிராக இருப்பவர்களின் கருத்தையும், ஆதரவானவர்களின் கருத்தையும் பதிவு செய்யும் பொருட்டு கடந்த மே 31ம் தேதி சென்னை ஐகோர்ட் ஓய்வுபெற்ற நீதிபதி சிவசுப்பிரமணியம் தலைமையிலான நால்வர் குழு தமிழக அரசால் அமைக்கப்பட்டது. கள் இறக்கும் அறப்போராட்டம் அறிவித்த நாளில் அதை எதிர்த்து அறிக்கை விட்டதோடு அல்லாமல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு, தமிழ்நாடு அரசு பனை தொழிலாளர் நல வாரியத்தலைவர் குமரி அனந்தனும் சென்னையில் உண்ணாவிரதம் இருந்தனர். கோபி எம்.எல்.ஏ., செங்கோட்டையன், கள்ளுக்கு ஆதரவாக சட்டசபையில் பேசியவர்களை விமர்சனம் செய்தார். விசாரணைக்குழு மதுரை, நெல்லை, ஈரோடு, சேலம் வந்திருந்த போது, அவர்கள் மூன்று பேரும் தங்கள் தரப்பு வாதத்தை எடுத்து கூறி பதிவு செய்திருக்க வேண்டும்.
கடந்த சில ஆண்டாக விவசாயிகளும், பனைத் தொழிலாளர்களும் கள்ளுக்கு விதித்திருக்கும் தடையை நீக்க வேண்டி அமைதியான முறையில் போராடி வருகிறார்கள். ஒரு சிலர் கள்ளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
"அனைத்தையும் பரிசீலித்து தேர்தலுக்கு பிறகு ஒரு நல்ல முடிவு எடுக்கப்படும்' என தமிழக முதல்வர் கருணாநிதி கூறியதை அந்த மூன்று பேரும் மறந்து விடக்கூடாது. அவர்களுக்காகவே மக்களின் வரிப்பணத்தில் இந்த விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த மூவர் தரப்பு வாதத்திலும், பதிவிலும் நியாயம் இருந்தால் அது கள் இயக்கப் போராளிகளின் போக்கை திருத்திக் கொள்ளவும், நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவும் ஏதுவாக இருக்கும். இந்த கருத்து ஏற்கனவே மூன்று பேருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சைக்கு வந்து அவர்களுடைய கருத்துகளை பதிவு செய்ய வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அது நிராகரிக்கப்பட்டு விட்டது. அடுத்து விசாரணை நடக்கவுள்ள திருவண்ணாமலைக்கு வந்து இந்த வாய்ப்பை அவர்கள் பயன்படுத்தி எதிரணியினரை நல்வழிப்படுத்த வேண்டும்.
அவர்கள் இந்த நல்வழியை உதாசீனப்படுத்தி கண்டுகொள்ளாத போக்கைக் கடைபிடித்தால் அவர்களை கண்டித்து இறுதி விசாரணைக்கு பிறகு குமரிஅனந்தன், தங்கபாலு மீது எத்தகைய நடவடிக்கை என்பது குறித்து செயற்குழு முடிவு எடுக்கும். செங்கோட்டையன் வரும் சட்டசபை தொகுதியில் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும், சேல ம் லோக்சபா தொகுதியில் தங்கபாலுவை தோற்கடித்தது போல் அவரை தோற்கடிப்போம். விசாரணைக்குழு நவம்பர் இறுதியில் தனது அறிக்கையை தாக்கல் செய்யும். பால் கூட்டுறவு உற்பத்தியாளர்கள் சங்கம் போல், கள் கூட்டுறவு உற்பத்தியாளர் சங்கம் ஏற்படுத்த வேண்டும். அரசிக்கு மானியம் வழங்குவதை போல், கள்ளுக்கும் மான்யம் வழங்கம் வேண்டும்.
தமிழக அரசு கள் மீதான தடையை நீக்கி கள் இறக்க அனுமதிக்க வேண்டும். அரசு சாதகமான முடிவு எடுக்கவில்லை என்றால், வரும் ஜனவரி 21ம் தேதி மாநிலம் தழுவிய அளவில் கள் இறக்கும் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு நல்லசாமி தெரிவித்தார்.



இந்திய விவசாயிகள் சங்க தலைவர் குருசாமி, ஐக்கிய விவசாயிகள் சங்க தலைவர் வையாபுரி, அமராவதி ஆறு பாசன விசாயிகள் சங்கம் செல்லமுத்து, தூத்துக்குடி ராயப்பன், திருவண்ணாமலை புருஷோத்தமன், கள் இயக்க அமைப்பாளர் கதிரேசன், விருதுநகர் மாவட்ட பனை தொழிலாளர் சங்க தலைவர் பாலசுப்பிரமணியன், கொங்கு மண்டல ஆய்வு மன்ற தலைவர் உடுமலை ரவிக்குமார், பனைத் தென்னை தொழிலாளர் நல மாநில துணைத்தலைவர் பொள்ளாச்சி முருகன், கீழ்பவானி பாசன விவசாயிகள் சங்க பொறுப்பாளர் தங்கராசு உட்பட பலர் பங்கேற்றனர்.

0 comments: