தஞ்சாவூர் அருகே மகளிடம் தவறாக நடந்து கொண்டவரை தட்டிக் கேட்ட தாய் அடித்து கொலை செய்யப்பட்டார். தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அடுத்த வளப்பக்குடியை சேர்ந்தவர் ரத்தினம் மனைவி பழனியம்மாள் (55). கணவரை இழந்தவர். இவரது மகள் திருமானூர் சின்னய்யன் மனைவி தனலட்சுமி (27). கடந்த ஐந்து ஆண்டுக்கு முன் சின்னய்யன் மற்றொரு பெண்னை திருமணம் செய்து கொண்டு, தனலட்சுமியை பிரிந்து வாழ்கிறார். தனலட்சுமி இரு மகன் மற்றும் ஒரு மகளுடன், தனது தாயார் பழனியம்மாளுடன் வசித்து வருகிறார்.
வளப்பக்குடி நடுத்தெருவை சேர்ந்தவர் மூக்கன் மகன் சேகர் (40). இவர் அடிக்கடி தனலட்சுமியிடம் தவறாக நடக்க முயன்றார். நேற்று முன்தினம் இரவு பழனியம்மாளும், தனலட்சுமியும் திருக்காட்டுப்பள்ளியில் இருந்து வளப்பக்குடிக்கு பஸ்ஸில் வந்தனர். அதே பஸ்ஸில் வந்த சேகர், தனலட்சுமியை உல்லாசமாக இருக்க அழைத்தார். இதையறிந்த பழனியம்மாள் வளப்பக்குடி வந்ததும் சேகரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் கோபமடைந்த சேகர், தனது துண்டில் கருங்கல்லை கட்டி பழனியம்மாளை தாக்கினார். இதில், பலத்த காயமடைந்த பழனியம்மாள் அதே இடத்தில் இறந்தார். இதுகுறித்து தனலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் மரூர் போலீஸ் எஸ்.ஐ., பாலதண்டாயுதபாணி வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள சேகரை தேடி வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
0 comments:
Post a Comment