காஸ் சிலிண்டருக்கு ரூ.30 சலுகை ரத்து


ஒரு காஸ் சிலிண்டர் உபயோகப்படுத்தும் நுகர்வோருக்கு, மாநில அரசு வழங்கி வந்த 30 ரூபாய் மானியம் இன்று முதல் நிறுத்தப்படுகிறது. இனிமேல் சிங்கிள் சிலிண்டரை 316 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேல்தட்டு மக்கள் வீடுகள் முதல் அடித்தட்டு மக்கள் வீடுகள் வரை, காஸ் சிலிண்டர் உபயோகம் அத்தியாவசியமாகி விட்டது.



விறகு, மண்ணெண்ணெய் அடுப்பு பயன்படுத்துவது நகரங்களில் மட்டுமல்ல; கிராமங்களிலும் தவிர்க்கப்பட்டு வருகிறது. பெட்ரோல், டீசல் விலை ஏறும் போது காஸ் சிலிண்டர்களின் விலை ஏறுவதும் சகஜம். கடந்த 2004ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு அமைந்த பின், கடந்த 2008ம் ஆண்டு ஜூன் 5ம் தேதி காஸ் விலை உயர்த்தப்பட்டது. அதாவது, ஒரு சிலிண்டர் விலை 288 ரூபாயிலிருந்து 339 ரூபாயாக உயர்த்தப்பட்டது. உலகச் சந்தையில் கச்சா பொருள் விலை ஏற்றத்தினால் விலை உயர்வு தவிர்க்க முடியவில்லையென மத்திய அரசு அறிவித்தது. இருப்பினும் காங்கிரஸ் கட்சி ஆளுகிற டில்லி, ஆந்திர மாநிலங்களில் காஸ் உயர்வுக்கு 50 ரூபாய் மானியம் அளிக்க முன்வந்தது. உடனே, தமிழக அரசும் கடந்த ஆண்டு ஜூலை 1ம் தேதி முதல், ஒரு சிலிண்டர் உபயோகிப்பவர்களுக்கு 30 ரூபாய் மானியம் வழங்கப்படும் என அறிவித்தது.



காஸ் விலை உயர்வுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியதால், 339 ரூபாயாக உயர்த்தப்பட்ட காஸ் சிலிண்டர் விலை 314 ஆக குறைக்கப் பட்டது. ஆனால், காஸ் விலை குறைந்த பின்னும் மானியத்தை நிறுத்த மாநில அரசு விரும்பவில்லை. இதனால், ஒரு சிலிண்டர் விலை மற்றும் ஏஜன்ட் கமிஷன் சேர்த்து 286 ரூபாய்க்கு காஸ் ஏஜன்சிகள் கொடுத்து வந்தன. இதற்கு லோக்சபா தேர்தலும் ஒரு காரணமாக அமைந்தது. இந்நிலையில், ஒரு சிலிண்டருக்கு மாநில அரசு வழங்கி வந்த மானியம் 30 ரூபாய், இன்று முதல் நிறுத்தப்படுகிறது.



இது குறித்த வாய்மொழி உத்தரவை உணவு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் அதிகாரிகள், சம்பந்தப்பட்ட காஸ் ஏஜன்சி உரிமையாளர்களிடம் தொலைபேசி மூலம் நேற்று பிறப்பித்துள்ளனர். இதனால், நாளை முதல் ஒரு சிலிண்டரை உபயோகிக்கும் நுகர்வோர், 316 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

0 comments: