ஆசிய விளையாட்டுப் போட்டி


சீனாவில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணி சார்பில் பங்கேற்க புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரி மாணவி சூரியா தகுதி பெற்றுள்ளார். புதுக்கோட்டை வருமான வரித்துறை அலுவலகத்தில் பணியாற்றி வருபவர் லோகநாதன். இவர் மாணவ, மாணவிகளுக்கு தடகள விளையாட்டுப் போட்டிகளில் பயிற்சி அளித்துவருகிறார். இவரது மகள் சூரியா(19). இவர் புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் பி.காம்., இரண்டாவது ஆண்டு படிக்கிறார். புதுக்கோட்டை அடுத்த கவிநாடு இளைஞர் விளையாட்டு மன்றத்தில் உறுப்பினராக சேர்ந்து பயிற்சி பெற்றுவரும் மாணவி சூரியா மாநில மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு சாதனைகள் நிகழ்த்திவருகிறார்.
கடந்தாண்டு புனேயில் நடைபெற்ற யூத் காமன்வெல்த் போட்டிகளில் கலந்துகொண்டு மாவட்டத்துக்கு பெருமை சேர்த்துள்ளார். தென்கொரியாவில் நடைபெற்ற பெண்களுக்கான உலக சமாதான விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு வெள்ளி பதக்கம் வென்றதன் மூலம் இந்தியாவுக்கும், புதுக்கோட்டை மாவட்டத்துக்கும் பெருமை சேர்த்தார். சென்னையில் செப்டம்பர் 27ம் தேதி நடந்த கிவ் லைஃப் மாரத்தான் போட்டியில் முதல் பரிசு வென்றார். இதுபோன்று சென்னையில் நடந்த தேசிய அளவிலான சீனியர் பிரிவு தடகளப் போட்டியில் பங்கேற்று இரண்டாவது பரிசு வென்றார். இதன் தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவில் வரும் நவம்பர் 10ம் தேதி ஆரம்பமாகிறது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். 10 ஆயிரம் மீட்டர் தூர ஓட்டப் போட்டியில் இந்திய அணி சார்பில் பங்கேற்க புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரி மாணவி சூரியா தகுதி பெற்றுள்ளார். இதற்காக தீவிர ஓட்டப் பயிற்சியில் ஈடுபட்டுவரும் மாணவி சூரியா நவம்பர் முதல் வாரத்தில் சீனா செல்ல உள்ளார்.

0 comments: