மொபைல் போனில் ரயில் டிக்கெட் அமலாவதில் சிக்கல்

மொபைல் போனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி, நடைமுறைக்கு வர தாமதம் ஆகும் என்று தெரிகிறது. ரயிலில் பயணம் செய்ய டிக்கெட் எடுக்க மக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டியிருந்தது. இதை போக்க ரயில்வேத் துறை, இன்டர்நெட் மூலம் இ-டிக்கெட் முறையில் டிக்கெட் பெறும் வசதியை அறிமுகப்படுத்தியது.

மொபைல் போன் மூலம் டிக்கெட் பதிவு செய்யும் முறையை அறிமுகம் செய்ய திட்டம் தீட்டியது. இதன்படி, ரயில் டிக்கெட் பெற நினைப்போர் மொபைல் போனில் எஸ்.எம்.எஸ்., செய்து, வேண்டிய டிக்கெட்டை பதிவு செய்து கொள்ளலாம். இந்த திட்டத்திற்கு, ரயில்வே போர்டு கடந்த டிசம்பர் மாதம் ஒப்புதல் அளித்திருந்தது. மும்பையை சேர்ந்த ஆக்சிஜன் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்திடம் பணியை ஒப்படைத்திருந்தது. இந்நிறுவனம் மேற்கு ரயில்வே மண்டலத்தில் முதன் முறையாக இந்த மாதம் துவக்க திட்டமிட்டிருந்தது.



ஆனால், இதற்கான ஏற்பாடுகள் இன்னும் பூர்த்தி அடையாததால், இந்த திட்டம் அமலாக இன்னும் சில மாதம் ஆகும் என்று தெரிகிறது. ரிசர்வ் வங்கி வகுத்த விதிமுறைகளுக்கு இந்நிறுவனம் கொள்கை அளவில் ஒத்துபோகவில்லை. ஆதலால், ரிசர்வ் வங்கி திட்டம் துவக்க உத்தரவு வழங்கவில்லை. மேலும், சாப்ட்வேர் தொழில்நுட்பத்தில் சில இயந்திரக் குறைபாடுகளும் உள்ளன என்றும் தெரிகிறது.

0 comments: