சர்வதேசியமாகிறது இன்டர்நெட்- இனி எந்த மொழியிலும் டொமைன்!

இணையதள பயன்பாட்டாளர்களின் ஆன்லைன் முகவரிகளை ஒதுக்கும் பணியைச் செய்து வரும் பெயர்கள் மற்றும் எண்களுக்கான இன்டர்நெட் கழகம் (ஐசிஏஎன்என்), இனி அனைத்து மொழிகளிலும் டொமைன் பெயர்களைப் பெறலாம் என்ற முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மேலும், டொமைன் பெயர்களில், உலகின் எந்த மொழியையும் பயன்படுத்தவும் அது அனுமதி அளித்துள்ளது.

இதுகுறித்த முடிவு சியோலில் நடந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இதுகுறித்து ஐசிஏஎன்என் தலைவர் ராட் பெக்ஸ்டிரோம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இது இன்டர்நெட் பயன்பாட்டாளர்களிடையே மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

இது முதல் படி மட்டுமே. ஆனால் இது மிகப் பெரிய வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த முடிவாகும். இனிமேல் இன்டர்நெட், சர்வதேசியமாகிறது.

ஆசியா, மத்திய கிழக்கு, ரஷ்யா போன்ற நாடுகளைச் சேர்ந்த கோடிக்கணக்கான மக்கள் இனிமேல் இன்டர்நெட்டை மிக எளிதாக கையாள முடியும் என்றார்.

நவம்பர் 16ம் தேதி முதல் இந்தத் திட்டம் படிப்படியாக அமலுக்கு வருகிறது.

தொடக்கத்தில், சைனீஸ், கொரியன், அரபி ஆகிய மொழிகளில் அமைந்த சர்வதேச டொமைன் பெயர்களை இந்த அமைப்பு ஒதுக்கும். அதன் பிறகு உலகின் அனைத்து மொழிகளிலும் டொமைன் பெயர்கள் வழங்கப்படும்.

1998ம் ஆண்டு ஐசிஏஎன்என் தொடங்கப்பட்டது. அமெரிக்க அரசின் வர்த்தகத்துறையின் கீழ் இது செயல்பட்டு வருகிறது.

.com போன்ற டொமைன் பெயர்களை இந்த அமைப்புதான் முடிவு செய்கிறது.

கடந்த மாதம், இந்த அமைப்பு அமெரிக்காவுக்கு மட்டும் உரியதாக இல்லாமல், சர்வதேச அளவிலான அமைப்பாக மாற வேண்டும் என்று அமெரிக்க அரசு முடிவு செய்து அதற்கான அனுமதியையும் வழங்கியது.

இதன் மூலம் தற்போது முதல் அதிரடி மாற்றத்தை ஐசிஏஎன்என் அறிவித்துள்ளது.

0 comments: