இன்றைய மொஹாலி போட்டியில் இந்தியா வென்றால் முதலிடம் கிடைக்கும்

மொஹாலியில் இன்று நடைபெறும் 4வது ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தினால், ஒரு நாள் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம் கிடைக்கும்.

இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான 7 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் இதுவரை 3 போட்டிகள் முடிந்துள்ளன. முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவும், கடைசி இரு போட்டிகளில் இந்தியாவும் வென்றுள்ளன.

4வது ஒரு நாள் போட்டி இன்று மொஹாலியில் நடைபெறுகிறது. இதிலும் வெற்றி பெற்று விட வேண்டும் என்ற வேகத்துடன் இந்திய அணி உள்ளது.

இன்றைய போட்டியில் இந்தியா வென்றால் ஒரு நாள் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்கும்.

தற்போது முதலிடத்தில் ஆஸ்திரேலியா (127 புள்ளிகள்) உள்ளது. அடுத்த இடத்தில் இந்தியா 126 புள்ளிகளுடன் உள்ளது. எனவே இன்றைய போட்டியில் இந்தியா வென்றால் முதலிடத்தைப் பிடிக்கும்.

போட்டித் தொடர் தொடங்குவதற்கு முன்பு இந்தியாவுக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான புள்ளிகள் வித்தியாசம் 4 ஆக இருந்தது. ஆனால் 2 மற்றும் 3வது ஒரு நாள் போட்டிகளில் இந்தியா அபாரமாக வென்றதன் மூலம் ஒரு புள்ளி வித்தியாசமாக குறைந்து விட்டது.

தென் ஆப்பிரிக்கா 121 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது.

0 comments: