டாஸ்மாக்கில் 'களைகட்டிய' புத்தாண்டு

சென்னையிலும் தமிழகத்திலும் குடிப்பிரியர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. அதன் விளைவாக கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு புத்தாண்டின்போது மதுவிற்பனை 10 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இந்தப் புத்தாண்டே கிட்டத்தட்ட மதுவின் துணையுடன்தான் பெரும்பாலானோருக்கு விடிந்திருக்கிறது எனும் அளவுக்கு புத்தாண்டு அன்று மட்டும் ரூ 47 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.

இதுவரை தமிழகம் காணாத புதிய 'சாதனை' இது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் மொத்தம் 6,694 டாஸ்மாக் மது கடைகள் உள்ளன. சென்னையில் மட்டும் சுமார் 400-க்கும் அதிகமான டாஸ்மாக் கடைகள் உள்ளன.


புத்தாண்டு தினத்தில், தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் கூட்டம் நிரம்பிவழிந்தது. பல இடங்களில் குடிமகன்கள் வரிசையில் நின்று மது பாட்டில்களை வாங்க போலீசார் உதவினர்! டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1-ம் தேதி மட்டும் அனைத்து பார்களும் கிட்டத்தட்ட ஹவுஸ்ஃபுல். சாலையோர சால்னா கடைகளில் கூட்டம் மொய்த்தது.

பல இளைஞர்கள் தங்கள் வாகனங்களில் அமர்ந்து, நின்று அல்லது படுத்த வண்ணம் குடித்துக் கொண்டிருந்தது இந்த இரு தினங்களிலும் சகஜமான காட்சியாக இருந்தது. பெரும்பாலும் இந்த குடிமகன்களை போலீசார் கண்டு கொள்ளவில்லை.

சென்னையில் மட்டும் புத்தாண்டு தினத்தில் ரூ.7 கோடிக்கு மது பாட்டில் விற்பனை ஆகியுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 4 சதவீதம் அதிகமாகும். தமிழகம் முழுவதும் ரூ.47 கோடிக்கு மது விற்பனை ஆகியுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 10 சதவீதம் கூடுதல் ஆகும்.பிரபல சரக்குகள் 'நோ ஸ்டாக்'!மது விற்பனை படுஜோராக நடைபெற்றதால் பிரபலமான 'சரக்கு'களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால், கேட்ட சரக்கு கிடைக்காததால், கிடைத்த சரக்கை மதுப் பிரியர்கள் வாங்கி திருப்தியடைந்தனர். பல இடங்களில் பீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால், பீர் பிரியர்களும் விஸ்கி, பிராந்தி என வாங்கி குடித்து தங்கள் புத்தாண்டு கடைமையை நிறைவேற்றினர்.


கூடுதல் விலைக்கு...இரவு 10 மணிக்குள் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டாலும், பார்களிலும், வெளியிடங்களிலும் வைத்து கூடுதல் விலைக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டன. பல டாஸ்மாக் கடைகளை இரவு 10 மணிக்கு ஊழியர்கள் அடைக்க முயன்றபோது, குடிமகன்கள் பிடிவாதமாக தடுத்தனர்.
போலீஸ் துணையுடன்தான் இந்தக் கடைகளை அடைக்க முடிந்தது.

0 comments: