டென்மார்க்-பர்தாவுக்கு இடமில்லை

முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தா மற்றும் ஹிஜாப் போன்ற அங்கிகளுக்கு டென்மார்க் சமுதாயத்தில் இடமில்லை என பிரதமர் லார்ஸ் லோக்கி ரஸ்முசென் கூறியுள்ளார்.

டென்மார்க் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 2 சதவீதம் பேர் முஸ்லிம்கள் ஆவர்.

இந்நிலையில், டென்மார்க் பிரதமர் ரஸ்முசென் செய்தியாளர்களிடம் கூறுகையில், டென்மார்க் சமுதாயத்தில் பர்தா மற்றும் ஹிஜாப் போன்றவற்றுக்கு சுத்தமாக இடமில்லை. இதுபோன்ற அங்கிகள், பெண்மையை தனிப்படுத்திக் காட்டும் அடையாளமாக கருதப்படுவதால் இதை நாம் முற்றிலும் எதிர்க்கிறோம்.

டென்மார்க் ஒரு வெளிப்படையான மற்றும் ஜனநாயக நாடு. ஒருவரிடம் பேசும்போது, அந்த நபரை எவ்வித பாகுபாடும் இன்றி வெளிப்படையாக எதிர்கொள்ள வேண்டும் என விரும்புகிறோம்.

ஒருவரை மதரீதியாகவோ, பாலினரீதியாகவோ தனிமைப்படுத்தி அடையாளம் காணுவதை நாங்கள் விரும்பவில்லை. பள்ளிக் கூடமானாலும், பணியிடமானாலும் இதை கடைப்பிடிக்க நினைக்கிறோம்.

எனவே தான் இந்த அங்கிகளை டென்மார்க் சமுதாயத்தில் அனுமதிக்கக் கூடாது என்கிறோம்.

ஜனநாயக சட்ட திட்டங்களை மீறாமல் இந்த அங்கிகளை மேலும் கட்டுப்படுத்துவது குறித்து ஆராய்ந்து வருகிறோம் என்றார்.

0 comments: