தலித் இளைஞரை மலம் திண்ண வைத்த ஜாதி வெறியர்கள்!

தலித் இளைஞரின் வாயில் மனித மலத்தை வைத்து திணித்ததாக தேவர் கிறிஸ்தவ சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மீது புகார் கூறப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் மேலக்கோயில்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தலித் இளைஞர் சடையாண்டி (24) போலீசில் அளித்துள்ள புகாரில், 'கடந்த 7ம் தேதியன்று மேலக்கோயில்பட்டி கிராமத்தில் சென்று கொண்டிருந்தேன். அப்போது சாதி கிறிஸ்தவர்கள் நான்கைந்து பேர் ஒன்றாக சேர்ந்துகொண்டு என்னை வழிமறித்தனர்.

இந்த தெருவில் செருப்பு போட்டுக்கொண்டு போகக்கூடாது என சொல்லியும் திமிறாக செருப்புக்காலுடன் நடக்கிறாயா எனக் கேட்டனர். நான் அவர்களுக்கு பதில் சொல்லாமல் சென்றதால் ஆத்திரப்பட்டு ஜாதிப்பேர் சொல்லி திட்டி என்னை மடக்கினர். அந்த கும்பலில் இருந்த ஆரோக்கியசாமி, டேவிட், செல்வேந்திரன், கென்னடி, கண்ணதாசன், பீட்டர், அன்பு ஆகியோர் என்னை அடித்தனர்.

இரண்டுபேர் என்னை வலுக்கட்டாயமாக பிடித்துக்கொண்டு, வாயைத் திறந்து மனித மலத்தை திணித்தனர். என் முகத்திலும் அசிங்கப்படுத்தினர்' என்று குறிப்பிட்டுள்ளார்.

சம்பவத்தின் போது அங்கிருந்த சிலர் தன்னை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்ததாகவும், பயம் காரணமாக போலீசில் உடனடியாக புகார் தெரிவிக்கவில்லை என்றும் சடையாண்டி கூறினார்.

இதையடுத்து நேற்று போலீசார் இப்புகாரின் பேரில் ஆரோக்கியசாமி உட்பட 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். யாரும் உடனடியாக கைது செய்யப்படவில்லை. இதற்கிடையே, சடையாண்டியை அடித்ததாகக் கூறப்படும் இளைஞர் தரப்பிலும் போலீசில் புகார் தரப்பட்டுள்ளது. அதில், 'சடையாண்டி குடித்துவிட்டு வந்து எங்களிடம் தகராறு செய்தார்' என்று கூறப்பட்டுள்ளது.

0 comments: