கடலில் எண்ணைக் கசிவு - குவியல், குவியலாக செத்து மிதக்கும் மீன்கள்

சென்னை கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டியுள்ள கடலோர பகுதியில், கடலலைகள் கறுப்பு நிற எண்ணை கழிவுகளுடன் காணப்படுவதாலும், குவியல், குவியலாக மீன்கள் செத்துக்கிடப்பதாலும் மீனவர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டு்ள்ளது.
சென்னை, பாலவாக்கத்தை அடுத்த நீலாங்கரை அருகே உள்ள உத்தண்டியில் இருந்து முட்டுக்காடு வரை உள்ள கடலோர பகுதிகளில், கடந்த 2 நாட்களாக கறுப்பு நிறத்தில் எண்ணை கழிவுகள் கரையோரம் காணப்படுகிறது. கடலுக்குள்ளும் பல கிலோ மீட்டர் தூரம் வரை இந்த எண்ணை கழிவுகள் பரவியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர். மேலும் ஆங்காங்கே மீன்களும் செத்து மிதப்பதாக கரை திரும்பிய மீனவர்கள் கூறினர்.
பல்வேறு இடங்களில் கரையோரத்திலும் மீன்கள் செத்துமிதக்கின்றன.இதுகுறித்து மீனவர் ஒருவர் கூறுகையில், '2 நாட்களாக கடல் அலைகளுடன் இதுபோல் எண்ணை கழிவுகள் வருகிறது. கெட்டுப்போன எண்ணை கழிவுகள் கப்பல்களில் இருந்து கொட்டப்பட்டு இருந்தால் இதுபோன்ற அலைகள் ஏற்படும்.
இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து விட்டோம்.புத்தாண்டு விடுமுறை நாட்கள் என்பதால் என்னவோ எந்த அதிகாரியும் இதுவரை வந்து பார்க்கவில்லை. சுற்றுப்புற சூழலை மாசுபடுத்தும் இந்த எண்ணை படிவங்களை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் கடல்வாழ் உயிரினங்களுக்கு பெரும் ஆபத்து ஏற்படும்' என்றார்.

0 comments: