தன்னைத் தானே பெல்ட்டால் அடித்துக் கொண்ட போப்

போப்பாண்டவர் 2ம் ஜான் பால், போப்பாக இருந்தபோது தன்னைத் தானே பெல்ட்டால் அடித்துக் கொள்ளும் பழக்கம் கொண்டிருந்ததாக ஒரு புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.

பிஷப்பாக இருந்தபோதிலிருந்தே இந்தப் பழக்கம் அவரிடம் இருந்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"Why He's a Saint" என்ற பெயரில் வெளியாகியுள்ள புத்தகத்தில்தான் இந்த தகவல் இடம் பெற்றுள்ளது. உண்மையான கிறிஸ்துவராக தான் இருக்க வேண்டும் என்பதற்காகவும், உலக பாவங்களுக்காக தன்னை வருத்திக் கொள்ளும் வகையிலும் இவ்வாறு அவர் செய்து வந்ததாக இந்த நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மான்சிக்னர் ஸ்லவோமிர் ஓடர் என்பவர் இந்த புத்தகத்தை எழுதியுள்ளார். போப்பாண்டவருக்கு புனிதர் பட்டம் கொடுப்பது தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவில் முக்கியப் பொறுப்பு வகித்தவர் இவர்.

இந்தக் குழுவின் முன்பு ஆஜராகி போப்பாண்டவர் 2ம் ஜான் பால் நிகழ்த்திய அற்புதங்கள் குறித்து 114 பேர் அளித்த சாட்சியங்கள் மற்றும் போப்பாண்டவர் குறித்த ஆவணப்படம் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து இந்த நூலை மான்சிக்னர் எழுதியுள்ளாராம்.

இந்தப் புத்தகத்தை வாடிகன் சிட்டியில் வைத்து வெளியிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் மான்சிக்னர் கூறுகையில், தன்னைத் தானே வருத்திக் கொண்ட போப்பாண்டவரின் செயலில் எந்தத் தவறும் இல்லை. உலக பாவங்களுக்காக தன்னைத் தானே வருத்திக் கொண்ட செயல் இது. மேலும் இயேசுநாததர் சிலுவையில் அறைந்தபோது பட்ட துன்பத்தை நினைவு கூரும் விதமாகவும் இவ்வாறு கிறிஸ்தவர்கள் செய்வது இயல்புதான்.

முழுமையான கிறிஸ்துவராக தாங்கள் இருப்பதை உறுதி செய்து கொள்ள இது ஒரு கருவியாகும். அந்த வகையில்தான் போப்பாண்டவரும் தன்னைத் தானே துன்புறுத்திக் கொண்டுள்ளார்.

இது மட்டுமல்லாமல் பலமுறை உணவு சாப்பிடாமல் வெறும் வயிற்றோடு இருப்பார் போப்பாண்டவர் 2ம் ஜான் பால். மேலும், வெறும் தரையிலும் படுத்துத் தூங்குவதை வழக்கமாக வைத்திருந்தார். ஆனால் மற்றவர்களுக்கு அது தெரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக தனது படுக்கையை தானே கலைத்து விட்டு அதில் படுத்துத் தூங்கியது போல காட்டிக் கொள்வார்.

போப்பாண்டவர் தன்னைத் தானே வருத்திக் கொள்வதை தங்கள் காதுகளால் கேட்டதாக போலந்திலும் (அவர் பிஷப்பாக இருந்தபோது), வாடிகன் சிட்டியிலும் பணியாற்றிய ஊழியர்கள் தெரிவித்துள்ளனர் என்றார் மான்சிக்னர்.

இந்த நூலில், கடந்த 1989ம் ஆண்டு, தனக்கு உடல் நலம் சரியில்லாவிட்டால் போப்பாண்டவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்து விடுவேன் என்று போப்பாண்டவர் 2ம் ஜான் தனது கைப்பட எழுதிய கடிதத்தையும் இணைத்துள்ளார் மான்சிக்னர்.

0 comments: