இன்று மாட்டுப் பொங்கல்-நாளை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

அறுவடைத் திருநாளான பொங்கல் திருநாள் நேற்று தமிழகம் முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

தமிழகத்தின் கிராமப்புறங்களில் வழக்கம் போல பொங்கல் கொண்டாட்டங்கள் களை கட்டியிருந்தன. சர்க்கரைப் பொங்கல் வைத்து சூரியனுக்குப் படைத்து குடும்பத்தினர் அதை சுவைத்தும், கரும்புகளைக் கடித்து ருசித்தும் பொங்கலைக் கொண்டாடினர்.

தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டாகவும் மக்களால் கொண்டாடப்பட்டது. கோவில்களில் கூட்டம் அலை மோதியது. தை முதல் நாள் மிகவும் விசேஷமான தினம் என்பதால் கல்யாண நிச்சயதார்த்தங்கள் உள்ளிட்ட மங்கள காரியங்கலும் நேற்று முதல் தமிழகம் முழுவதும் களை கட்டியுள்ளன.

இன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மாடுகள், ஆடுகள் உள்ளிட்ட வீட்டு விலங்குகளை அலங்கரித்து, கொம்புகளில் வர்ணம் தீட்டி பொங்கலிட்டு அவற்றுக்கு படையல் இட்டு கிராமங்களில் வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.

மதுரை அலங்காநல்லூர் அருகே உள்ள பாலமேட்டில் இன்று ஜல்லிக்கட்டு நடக்கிறது. நாளை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ளது.

0 comments: