சென்னை ஓபன் இன்று தொடக்கம்

பலத்த எதிர்பார்பிற்கிடையே 15வது சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி இன்று மாலை 5 மணிக்கு தொடங்குகிறது.உலகின் முன்னணி வீரர்கள் மோதும் இப்போட்டி நுங்கம்பாக்கம் எஸ்டிஏடி டென்னிஸ் அரங்கில் இன்று (ஜன.4-10) தொடங்குகிறது. ஆண்டின் முதல் சர்வதேச போட்டி என்பதால் நட்சத்திர வீரர்கள் சென்னை வருவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ரபேல் நடால், போரிஸ் பெக்கர், ராப்தர், கார்லஸ் மோயா, கபெல் நிகோவ், மார்க் உட்பிரிட்ஜ், டாட் உட்பிரிட்ஜ், உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் சென்னை போட்டியில் பங்கேற்றுள்ளனர். தெற்காசியாவில் நடக்கும் ஒரே ஏடிபி டென்னிஸ் போட்டி என்பதால் ரசிகர்கள் மத்தியில் இந்த போட்டி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதோடு, இந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவிற்கு உலக தரவரிசையில் 100 இடத்திற்குள் உள்ள 16 வீரர்கள் போட்டியில் பங்கேற்றுள்ளனர்.
நடப்பு சாம்பியன் மரின் சிலிக், 2வது இடத்தைப் பிடித்த இந்தியாவின் சோம்தேவ் தேவ்வர்மன், 2 முறை பட்டம் வென்றுள்ள கார்லஸ் மோயா, முதல் நிலை அந்துஸ்து பெற்றுள்ள ராபின் சோடர்லிங், வாவ்ரின்கா, ரெய்னர் ஷட்லர், ராஜீவ் ராம் உட்பட 32 வீரர்கள் களம் இறங்குகின்றனர்.
இந்தியாவின் டாப் 2 வீரர்களான லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி பங்கேற்காதது ஏமாற்றமளித்தாலும், இளம் வீரர்கள் சோம்தேவ், போபன்னா களம் இறங்குவதால் உள்ளூர் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.இந்திய வீரர்களுக்கு சவால்: இந்தியாவின் நம்பர் 1 வீரர் சோம்தேவ் தேவ்வர்மன் (126வது ரேங்க்) தனது முதல் சுற்றில் ஜெர்மனியின் ரெய்னர் ஷட்டரை (85வது ரேங்க்) எதிர்கொள்கிறார். கடந்த ஆண்டு சென்னை ஓபன் அரைஇறுதியில் இந்த இரு வீரர்களும் மோத இருந்தனர்.
காயம் காரணமாக ஷெல்டர் விலக இறுதிப் போட்டிக்கு சோம்தேவ் முன்னேறினார். கடந்த 2 ஆண்டுகளாக சோம்தேவ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ஆனந்த் அமிர்தராஜ் பெருமையோடு கூறுகிறார்.
எனினும் தொடக்க சுற்றில் அனுபவ வீரரும், உள்ளூர் ரசிகர்கள் ஆதரவு பெற்ற வீரரும் மோதுவதால் சென்னை ஓபன் தொடக்கமே பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மற்றொரு முதல் சுற்று போட்டியில் இந்தியாவின் ரோகன் போபன்னா ஸ்விட்சர்லாந்தின் வாவ்ரின்காவை (21வது ரேங்க்) சந்திக்கிறார்.
இந்த போட்டியில் ரோகன் அதிசயம் நிகழ்த்தினாலே 2வது சுற்றுக்கு முன்னேற முடியும்.

0 comments: