பழம்பெரும் கம்யூ. தலைவர் ஜோதிபாசு மரணம்

பழம்பெரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் ஜோதிபாசு இன்று பிற்பகல் கொல்கத்தா மருத்துவமனையில் மரணமடைந்தார்.

அவருக்கு வயது 95. ஜனவரி 1ம் தேதி கொல்கத்தாவில் உள்ள ஏ.எம்.ஆர்.ஐ. மருத்துவமனையில் நிமோனியா காரணமாக அனுமதிக்கப்பட்டார் ஜோதிபாசு. அங்கு தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

சில நாட்களுக்கு முன்பு அவரது இதயம், சிறுநீரகம், நுரையீரல் ஆகியவற்றின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டன. முதலில் சிறுநீரகம் செயலிழந்தது. பின்னர் நுரையீரல், இதயம் ஆகியவற்றின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டன.

நேற்று இரவு அவரது உடல் நிலை மேலும் மோசமடைந்தது. அவரது நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் இன்று பிற்பகல் ஜோதிபாசு மரணமடைந்தார். இதுகுறித்து இடதுசாரி கூட்டணி கமிட்டியின் தலைவர் பிமன் போஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஜோதிபாசு நம்மை விட்டுப் பிரிந்து விட்டார் என்ற சோகச் செய்தியை உங்களிடம் பெருத்த வருத்தத்துடன், கனத்த இதயத்துடன் கூறிக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

ஜோதிபாசுவின் தனி மருத்துவர் டாக்டர் அஜீத் குமார் மைத்தி கூறுகையில், 11.47 மணிக்கு ஜோதிபாசு மரணமடைந்தார் என்றார்.

ஜோதிபாசுவுக்கு சந்தன் என்ற மகன் உள்ளார். அவருடைய மனைவி கமலா நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மரணமடைந்தார்.

மேற்கு வங்க மாநிலத்தின் முதல்வராக தொடர்ந்து 23 ஆண்டுகள் இருந்து பெரும் சாதனை படைத்தவர் ஜோதிபாசு என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments: