கேப்டன் டிவி துவக்கம்...

தேமுதிகவின் அதிகாரப்பூர்வமான தொலைக்காட்சியான கேப்டன் டிவியை இன்று காலை துவக்கி வைத்தார் அதன் நிறுவனரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த்.

கேப்டன் டிவிக்கு தனது வாழ்த்துக்களை போன் மூலம் தெரிவித்தார் நடிகர் ரஜினிகாந்த்.

பொழுது போக்கு மற்றும் கட்சிப் பிரச்சாரம் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு கேப்டன் டிவி சேனல் துவங்கப்பட்டுள்ளது. மே 1ம் தேதி முதல் இந்த சேனலில் தினமும் 4 முறை செய்திகள் ஒளிபரப்பாக உள்ளது.

விஜயகாந்த் சம்பந்தப்பட்ட அரசியல் செய்திகள் பிரதானமாக இடம்பெறும்.

சித்திரை முதல் நாளான இன்று முறைப்படி கேப்டன் டி.வி. துவங்கப்பட்டது. இன்று காலை 5.59 மணிக்கு வானகரத்தில் உள்ள கேப்டன் டி.வி. அலுவலகத்தை விஜயகாந்த் ரிப்பன் வெட்டிதிறந்து வைத்தார். அவரைத் தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்த் குத்துவிளக்கு ஏற்றினார்.

சரியாக 6 மணிக்கு ரிமோட் பட்டனை இயக்கி ஒளிபரப்பை தொடங்கி வைத்தார். முதலில் கேப்டன் டி.வி. லோகோவும் அதைத் தொடர்ந்து பக்திப் பாடல்களும் ஒளிபரப்பாகின.

அதற்கடுத்த நிகழ்ச்சியாக 'கேப்டனின் லட்சிய பயணம்' என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பானது. அப்போது விஜயகாந்த் மனைவி பிரேமலதா, தேமுதிக இளைஞர் அணி செயலாளர் எல்.கே.சுதீஷ், அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

கேப்டன் டி.வி. தொடங்கப்பட்டதற்கு ரஜினிகாந்த் டெலிபோனில் விஜயகாந்திடம் வாழ்த்து தெரிவித்தார்.

மத்திய அமைச்சர்கள் ஜி.கே.வாசன், நாராயணசாமி, காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, நடிகர்கள் விஜய், விவேக் ஓப்ராய், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சாமிநாதன், புதுச்சேரி முதல்வர் வைத்திலிங்கம், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாநிலச் செயலாளர் ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில் ஜே.எம்.ஆரூண் எம்.பி., நடிகர்கள் முரளி, மன்சூர்அலிகான், ராமேஷ்கன்னா, பொன்னம்பலம், படத் தயாரிப்பாளர்கள் சிவா, மைக்கேல் ராயப்பன், இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி உள்பட பலர் பங்கேற்றனர்

0 comments: