தாமதத்தை நோக்கி சேது சமுத்திர திட்டம்

மாற்றுப் பாதையில் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவதற்கான ஆய்வுப் பணியால், அத்திட்டம் மேலும் தாமதமாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்திய கடற்போக்குவரத்தை மேம்படுத்தும் விதமாக, சேது சமுத்திர திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது.

பல்வேறு எதிர்ப்புகளைத் தொடர்ந்து, இத்திட்டம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்காக முடங்கியது. யார் மனதையும் புண்படுத்தாமல், மாற்றுப் பாதையில் இத்திட்டத்தை நிறைவேற்ற முன்வருமாறு, மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியது. இதைத் தொடர்ந்து, இத்திட்டம் தொடர்பாக பச்சேரி தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது.

ஆண்டுகள் பல கடந்த நிலையில், மாற்றுப் பாதை ஆய்வுகள் நடக்கவில்லை. இது குறித்து, 'தினமலர்' நாளிதழ் தொடர்ந்து செய்தி வெளியிட்டதன் விளைவாக, தேசிய கடல் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் தற்போது, தென்மாநில கடல் எல்லையில் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர். தற்போது தான் நீரின் ஓட்டம், அலையின் வேகம் போன்றவை கணக்கிடப்பட்டு வருகிறது.

இவை நிறைவு பெறவே சில ஆண்டுகள் ஆகும் என தெரிகிறது. அதன் பின், மாற்றுப் பாதை பணிகள் துவங்கி, திட்டம் நடைமுறைக்கு வருவது என்பது நீண்ட இடைவெளிக்கு பின்னரே நடக்க வாய்ப்புள்ளது. ஆய்வுப் பணியை குறிப்பிட்ட சில மாதங்களிலேயே முடிக்கும் வாய்ப்புகள் இருந்தும், பணியை தாமதப்படுத்தும் நோக்கிலேயே ஆய்வுகள் நடந்து வருகின்றன.

நடந்து வரும் பணிகள் குறித்து, மாவட்ட நிர்வாகத்துக்கு எந்த தகவலும் அளிக்கப்படவில்லை. பச்சேரி கமிட்டியின் உறுப்பினராக ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஹரிஹரன் இருந்தும், அந்த வகையிலும் அவருக்கு தகவல்கள் வரவில்லை.

0 comments: