மழை குறைய வாய்ப்பு

கன்னியாகுமரி கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காலை 8.30 மணியளவில் மேற்கு நோக்கி நகர்ந்து லட்சத்தீவுகளுக்கு அருகில் மையம் கொண்டிருப்பதால் தமிழகத்தில் படிப்படியாக மழை குறைய வாய்ப்பிருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த காற்றத்தழுத்த நிலையால் நேற்று தமிழகத்தில் 98% இடங்களில் பலத்த மழை பெய்ததாக அறிவித்த வானிலை ஆய்வு மையம், தற்போது குமரிக்கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு நோக்கி நகர்ந்து லட்சத்தீவுகளுக்கு அருகில் மையம் கொன்டுள்ளது என்று அறிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் கூறியதாவது:- குமரி கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி நகர்ந்து இன்று காலை 8.30 மணி அளவில் அரபிக் கடலில் உள்ள லட்சத்தீவு பகுதிகளில் தீவிர காற்றழுத்த தாழ்வு நிலையாக நீடிக்கிறது.

இதனால் தமிழ்நாட்டில் மழை குறைய வாய்ப்பு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு முழுவதும் நல்லமழை பெய்துள்ளது. வரும் 24 மணி நேரத்தில் தமிழ்நாடு புதுச்சேரியில் அனேக இடங்களில் மழை பெய்யும். ஓரிரு இடங்களில் கன மழை இருக்கும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் மழை இருக்கும்.

தமிழகத்தில் அதிக அளவாக சீர்காழி, சிவகிரியில் 24 செ.மீட்டர் மழை பெய்துள்ளது. நீலகிரியில் 21 செ.மீ., பரங்கிபேட்டையில் 18 செ.மீ., குன்னூரில் 19 செ.மீ. சிதம்பரத்தில் 17 செ.மீ., சென்னை, செம்பரம்பாக்கத்தில் 15 செ.மீ., நுங்கம்பாக்கத்தில் 12 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

0 comments: