நம்பர் 1 வாய்ப்பு நழுவியது

மொஹாலி ஒரு நாள் போட்டியில் இந்தியா 24 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தது. இதன் மூலம் நம்பர் ஒன் இடத்திற்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.

இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான 4வது ஒரு நாள் போட்டி மொஹாலியில் நடந்தது.

டாஸ் வென்ற டோணி, முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தார். இதையடுத்து ஆடிய ஆஸ்திரேலிய அணி ஏகப்பட்ட ரன் அவுட்களுக்கு மத்தியில் தட்டுத் தடுமாறி ஆடி 250 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தது.

வாட்சன் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் பான்டிங் 52 ரன்களில் வீழ்ந்தார். ஒயிட் 62 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மைக் ஹஸ்ஸி சிறப்பாக ஆடி துரிதமாக 40 ரன்களைச் சேர்த்துக் கொடுத்தார்.

இறுதியில், 49.2 ஓவர்களிலேயே ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சரியாக 250 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

கேப்டன் பான்டிங், ஒயிட், மனோ, போலிங்கர் ஆகியோர் ரன் அவுட் ஆனார்கள். இல்லாவிட்டால் ஆஸ்திரேலியா பெரிய ஸ்கோரை எட்டியிருக்கும்.

இந்தியத் தரப்பில் ஆஷிஷ் நெஹ்ரா 3 விக்கெட்களை வீழ்த்தினார். ஹர்பஜன் 2 விக்கெட்களையும், யுவராஜ் சிங் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் களம் இறங்கிய இந்தியா எளிதில் ஸ்கோரை எட்டி விடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்தியாவின் வழக்கமான சொதப்பல் ஆட்டம் வெளிப்பட்டது.

ஷேவாக் அதிரடியாக ஆடி 30 ரன்கள் கொடுத்து விட்டு வேகமாகப் போய் விட்டார். ஏன் இப்படி வேகம் வேகமாக ஆடி விரைவிலேயே இவர் ஆட்டமிழக்கிறார் என்று தெரியவில்லை.

டெண்டுல்கர் வழக்கம் போல நிதானமாக ஆடி 40 ரன்கள் சேர்த்தார். பின்னர் வந்த அத்தனை பேரும் சொதப்பினார்கள். விராத் கோலி 10, யுவராஜ் சிங் 12, டோணி 26 என சரிந்தனர்.

சுரேஷ் ரெய்னா 17 ரன்கள் எடுத்தார். பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் சற்று பொறுப்புடன் ஆடி ஏதாவது செய்யலாம் என்று பார்த்தார். ஆனாலும், அவராலும் 31 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது.

இப்படியாக சொதப்பிய இந்தியா 46.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்களையும் இழந்து 226 ரன்களில் சுருண்டது.

மொஹாலி மைதானத்தில் மிகவும் குறைவான ஸ்கோர் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

பேட்டிங்கில் அசத்திய ஷான் வாட்சன் பவுலிங்கிலும் பிரமிக்க வைத்தார். 3 விக்கெட்களை வீழ்த்தி, 49 ரன்களையும் எடுத்த இவரே ஆட்ட நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா 2-2 என்ற கணக்கில் தொடரை சமன் செய்துள்ளது.

நேற்றைய போட்டியில் இந்தியா வென்றால் ஒரு நாள் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்திருக்கும். ஆனால் அது நழுவிப் போய் விட்டது.

0 comments: