மெரீனா‌வி‌ல் தடையை மீறி கிரிக்கெட் விளையாடினால் கைது

மெரீனா கடற்கரையில் தடையை மீறி கிரிக்கெட் விளையாடினால் கைது செய்யப்படுவார்கள் என்று சென்னை மாநகர காவல்துறை எச்சரித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மெரீனா கடற்கரை பகுதியில் ஆயுதபடை‌யின‌ர் குவிக்கப்பட்டு‌‌ள்ளன‌ர்.

சென்னை மெரீனா கடற்கரையின் உள்ளே வாகனங்கள் செல்வதற்காக போடப்பட்டிருந்த சாலையில் மாணவர்களும், இளைஞர்களும் விடுமுறை தினங்களில் கிரிக்கெட் விளையாடி வந்தார்கள். இதற்கு வாகன ஓட்டிகளும், நடந்து செல்பவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து மெரீனா கடற்கரையில் கிரிக்கெட் விளையாட தடை விதித்து காவ‌ல்துறை ஆணைய‌ர் ராஜேந்திரன் உத்தரவிட்டிருந்தார்.

இன்று ‌விடுமுறை நா‌ள் என்பதால் மாணவர்களும், வாலிபர்களும் கிரிக்கெட் விளையாட வருவார்கள் என எதிர்ப்பார்த்து ஆயுதப்படை காவல‌ர்க‌ள் குவிக்கப்ப‌ட்டு‌ள்ளன‌ர். ஆனால் பலத்த மழை பெ‌ய்து வரும் கிரிக்கெட் விளையாட யாரு‌ம் வரவில்லை.

இது குறித்து சென்னை மாநகர காவல்துறை துணை ஆணையர் மவுரியா கூறுகை‌யி‌ல், ''சென்னை மெரீனா கடற்கரை பகுதியில் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி கிரிக்கெட் விளையாடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மெரீனா கடற்கரை பகுதியில் காவல‌ர்க‌ள் குவிக்கப்பட்டுள்ளன‌ர். ஆனால் இன்று மழை காரணமாக யாரும் கிரிக்கெட் விளையாட வரவில்லை'' எ‌ன்றா‌ர் மவுரியா.

0 comments: