கமல்ஹாசனுக்கு இன்று 55-வது பிறந்தநாள்

இந்திய சினிமாவின் பெருமைக்குரிய கலைஞர்களுள் ஒருவரான கலைஞானி கமல்ஹாசனுக்கு இன்று 55-வது பிறந்தநாள்.

1954-ம் ஆண்டு இதே நாளில் பரமக்குடியில் பிறந்த கமல்ஹாசன் தனது 5-வது வயதில் களத்தூர் கண்ணம்மா மூலம் கலைப்பயணத்தைத் துவங்கினார்.

இந்த ஆண்டு அவரது கலைவாழ்வின் பொன்விழா ஆண்டு.

நல்ல படங்களைத் தர வேண்டும், உலகத் தரம் உள்ளூர் சினிமாவிலும் வியாபிக்க வேண்டும், நவீனத் தொழிட்நுட்பங்களை ஆரத் தழுவிக் கொள்ள வேண்டும், உருப்படியான சினிமாவுக்காக கடுமையாக உழைக்க வேண்டும் என்று தீவிரமாக பாடுபடும் மிக மிக அரிதான தமிழ் சினிமாக்காரர் கமல்.

இது கமல்ஹாசனின் திரையுலக பொன்விழா. வயதிலோ 55, செயலிலோ 25 அளவில் அசுர வேகத்தில் இருக்கும் கமல்ஹாசன், சினிமாவை மட்டுமே நேசிப்பவர், சுவாசிப்பவர்.

தனது பிறந்த நாளை பெரிய ஆர்ப்பாட்டமெல்லாம் இல்லாமல், ரசிகர்கள் செய்யும் சில நற்பணிகளுடன் கொண்டாடுவது கமல்ஹாஸன் வழக்கம். ரத்ததானம், ஊனமுற்றோருக்கு உபகரணங்கள், மாணவர்களுக்கு கல்வி உதவிகள் இப்படித்தான் பெரும்பாலும் அவரது உதவிகள் அமையும். இந்த ஆண்டும் அப்படியே.

இந்தப் பொன் விழா பிறந்த நாளில் அவருக்கு மகிழ்ச்சி அளிக்கும் விஷயம், அவரது உன்னைப்போல் ஒருவன் படத்தின் வெற்றி இந்தியிலிருந்து ரீமேக் செய்யப்பட்ட, படம்தான் என்றாலும், இந்த ஒன்றரை மணிநேர படத்தை மக்கள் ஏகோபித்த ஆதரவுடன் ஏற்றுக் கொண்டது, மேலும் சில புதிய முயற்சிகளில் கமல் உற்சாகமாக ஈடுபட உதவியிருக்கிறது.

அடுத்து கேஎஸ் ரவிக்குமார் மற்றும் மிஷ்கின் இயக்கத்தில் படங்களில் நடிக்கத் தயாராகி வருகிறார் கமல்.

இதுவரை சாதித்தவை ஒன்றுமே இல்லை என்றும், இனி சாதிக்கப் போகிறவைதான் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்றும் அடக்கமாக கூறி அடுத்தடுத்து சாதனைகளுக்கு தன்னைத் தயார்படுத்திக் கொள்ளும் இந்த உதாரணக் கலைஞனை வாழ்த்துவோம்.

0 comments: