தங்களது சம்பள பாக்கியைத் தரக்கோரி வரும் 24-ம் தேதி முதல் ஏர் இந்தியா விமானிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். இதற்கான அறிவிக்கையையும் விடுத்துள்ளனர்.
ஏற்கெனவே தங்களின் சம்பளம் மற்றும் இதர படிகளில் எந்த வெட்டும் இருக்கக்கூடாது எனக் கோரி மூத்த விமானிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் 5 நாட்கள் நீடித்தன. இதனால் ஏர் இந்தியாவுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. நிர்வாகம் அனைத்துக் கோரிக்கைகளையும் வேறு வழியின்றி ஏற்றது.
இப்போது சம்பளம் தருவதில் நிர்வாகம் காட்டும் தாமதத்தைக் கண்டித்து ஸ்ட்ரைக் நடத்தப் போவதாக விமானிகள் அறிவித்துள்ளனர்.
கடந்த 2 மாதங்களாக விமானிகளுக்கு வழங்கப்படாமல் உள்ள சம்பளம் மற்றும் இதர சலுகைகளுக்கான தொகைகளை வரும் நவம்பர் 11-ம் தேதிக்குள் வழங்க வேண்டும் என்றும் இல்லையேல் போராட்டம் நடக்கும் என்றும் அறிவித்துள்ளனர்.
சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையத்தில் ஏர்-இந்தியா அலுவலக வளாகத்தில் விமானிகள் சங்க நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இதில் விமான நிறுவன விமானிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் தென்பிராந்திய விமானிகள் சங்க செயலாளர் (வர்த்தகம்) ஷாபு நிருபர்களிடம் கூறுகையில், "எங்களுக்கு கடந்த 2 மாதமாக சம்பள பாக்கி உள்ளது. மேலும் வெளிநாடுகளுக்கு செல்லும் விமானிகளுக்கு சிறப்பு பயணப்படி வழங்கப்படவில்லை.
இதுதொடர்பாக நிர்வாகத்திடம் கேட்டபோது நிதி நெருக்கடி என கூறுகின்றனர். ஆனால் வெளிநாட்டை சேர்ந்த விமானிகளுக்கு 30 சதவீதம் கூடுதலாக சம்பளம் வழங்கப்படுகிறது, சம்பள பாக்கிகளை விரைந்து வழங்க வேண்டும்.
இல்லையென்றால் விமானிகள் வருகிற 24-ந் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவார்கள். கடந்த முறை மூத்த விமானிகள் மட்டும் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். இந்த முறை அனைத்து விமானிகளும் போராட்டத்தில் கலந்துக் கொள்வர்கள்..." என்றார்.
இதனால் ஏர் இந்தியாவின் டிக்கெட் முன்பதிவு பாதிக்கத் துவங்கியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment