சுகாய் போர் விமானங்கள் பறப்பதற்கு திடீர் தடை

ராஜஸ்தானில் சுகாய் ரக போர் விமானங்கள் விழுந்து நொறுங்கியதை தொடர்ந்து விமானப்படையில் உள்ள 100 சுகாய் விமானங்கள் பறக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவிடம் இருந்து சுகாய்&30 ரக போர் விமானங்களை இந்திய விமானப்படை வாங்கியது. கடந்த 8 மாதங்களில் 2 சுகாய் போர் விமானங்கள் ராஜஸ்தானில் விழுந்து நொறுங்கியது.

கடந்த ஏப்ரல் 30ம் தேதி நடந்த விபத்தில் விமானத்தை இயக்கிய விமானி பலியானார். மற்றொருவர் காயத்துடன் தப்பினார். கடந்த ஞாயிறன்று நடந்த விபத்தில் விமானம் தரையில் விழுவதற்கு முன்பே அதில் இருந்த 2 விமானிகளும் பாராசூட் உதவியுடன் குதித்து உயிர் தப்பினர்.

1996ம் ஆண்டு முதல் சுகாய் ரக போர் விமானங்களை இந்திய விமானப்படை பயன்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டு வரை சுகாய் ரக விமானங்கள் விபத்தில் சிக்கியதில்லை. இப்போது 8 மாதத்துக்குள் 2 சுகாய் விமானங்கள் விழுந்து நொறுங்கியது விமானப்படை அதிகாரிகளை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

இதையடுத்து, விமானப்படையிடம் உள்ள 100 சுகாய் ரக போர் விமானங்கள் பறக்க நேற்று திடீரென தடை விதிக்கப்பட்டது. எல்லா விமானங் களிலும் சோதனை நடத்த விமானப்படை முடிவு செய்துள்ளது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

0 comments: