10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு ஒரே நேரத்தில் பொதுத்தேர்வு நட‌த்த அரசு முடிவு

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு ஒரே நேரத்தில் பொதுத் தேர்வுகளை நடத்த அரசுத் தேர்வுத்துறை பரிசீலித்து வருகிறது. இதனால், தேர்வு முடிவுகளும் ஒரே நேரத்தில் வெளியாகும். பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகளை அரசு தேர்வுத்துறை த‌னி‌த்த‌னியாக நடத்துகிறது. பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் முதல் வாரத்தில் தொடங்கி, ஏப்ரல் முதல் வாரத்தில் முடியும்.
பத்தாம் வகுப்பு தேர்வுகள் ஏப்ரல் 2வது வாரத்தில் தொடங்கி, அந்தமாத இறுதியில் முடியும். பின்னர் விடைத்தாள் திருத்தும் பணிகள் தனித்தனியே தொடங்கும். விடைத்தாள் திருத்தும் பணியில் அதிக அளவில் ஆசிரியர்கள் ஈடுபடுகின்றனர். மே முதல் வாரம் அல்லது இரண்டாவது வாரத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். அதற்கு பிறகு 2 வாரம் கழித்து பத்தாம் வகுப்பு தேர்வு முடிகள் வெளியாகும்.
பின்னர் விடைத்தாள் நகல் வழங்குதல், மறு மதிப்பீடு செய்தல் போன்ற பணிகளில் மீண்டும் ஆசிரியர்கள் ஈடுபடுகிறார்கள். இதனால் ஆசிரியர்கள் கோடை விடுமுறையை அனுபவிக்க முடியாமல் போகிறது. மேலும், கோடை விடுமுறைக்காக, அவசரம் அவசரமாக விடைத்தாள்களை திருத்துகின்றனர். இதனால் பிழை ஏற்படுகிறது. இதை தவிர்ப்பது குறித்து, அதிகாரிகள், ஆசிரியர்கள் கூட்டத்தை அரசு தேர்வுத்துறை கடந்த மாதம் நடத்தியது.
பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வுகளை ஒரே நேரத்தில் நடத்தினால் இந்தப் பிரச்சனைகள் எழாது; ஆசிரியர்கள் நிதானமாக விடைத்தாள்களை திருத்த முடியும் கோடை விடுமுறையும் அதிகம் கெடாது என்று, கூட்டத்தில் யோசனை கூறப்பட்டது. இதை அரசு தேர்வுத்துறை தீவிரமாக பரிசீலித்தது. இதையடுத்து, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு ஒரே நேரத்தில் பொதுத் தேர்வை நடத்த தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து, விரைவில் இறுதிமுடிவு எடுத்து அறிவிக்க அரசு முடிவு செய்துள்ளது. பிளஸ் 2 தேர்வுடன் பத்தாம் வகுப்பு தேர்வை நடத்த வசதியாக தேர்வுப் பணிகள் இப்போதே தொடங்கிவிட்டன. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவியரின் பட்டியலை அரசு தேர்வுத் துறை வழக்கமாக ஜனவரி மாதத்தில் கேட்டு வாங்கும். ஆனால், இந்த ஆண்டு அக்டோபர் மாதத்திலேயே மாணவ, மாணவியர் பட்டியலை தேர்வுத்துறை கேட்டு வாங்கியுள்ளது.
இந்த பட்டியல் ஆய்வு செய்யப்பட்டு திரும்பவும் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். அதற்கு பிறகு முழுமையான பட்டியல், தேர்வு துறைக்கு அனுப்பி வைக்கப்படும். பின்னர், தேர்வு பதிவு எண்கள் வழங்கப்படும். இப்படி பெயர் பட்டியல் மூன்று முறை ஆய்வு செய்யப்படும். இதில் இப்போது முதல்கட்ட பணி தொடங்கியுள்ளது.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுகளை ஒரே நேரத்தில் நடத்த வசதியாகவே, தேர்வு எழுது உள்ள மாணவர்கள் பட்டியலை முன்கூட்டியே வாங்கியுள்ளதாக தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரவித்தன. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுகள் ஒரே நடத்தி, விடைத்தாள் திருத்தும் பணியையும் ஒரே நேரத்தில் தொடங்கி, மே மாதத்துக்குள் தேர்வு முடிகளை வெளியிட திட்டமிட்டுள்ளது. இதற்கு ஆசிரியர்களின் ஒத்துழைப்பு அவசியம். எனவே, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டம் இம்மாதம் 5, 6ஆம் தேதிகளில் நடக்கிறது.

0 comments: