சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து விடிய விடிய மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மழைக்கு இதுவரை 14 பேர் பலியாகியுள்ளனர்.
சென்னையில் நேற்று முதல் விடிய, விடிய பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் நகரின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடிகிறது.
வேளச்சேரி, விஜயநகரம், திருவான்மியூர், வில்லிவாக்கம், கொளத்தூர், வியாசர்பாடி உள்ளிட்ட இடங்களில் சாலைகள் மற்றும் சுரங்கப் பாதைகளில் மழை நீர் தேங்கியுள்ளது.
இதனால் சாலைகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆமைபோல் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. 20 நிமிடங்களில் வர வேண்டிய இடத்துக்கு குறைந்தது ஒரு மணி நேரத்திற்கும் கூடுதலாக ஆகி விடுகிறது.
நேற்றிரவு பெய்த தொடர் மழையால் வட சென்னையில் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி உள்ளது.திருவொற்றியூரில் கார்கில் நகர், ராஜாஜி நகர், வடிவாம்பிகை நகர், பிருந்தாவன் நகர் ஆகிய பகுதிகளில் மழை நீர் தேங்கி உள்ளது.
கூவம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் இப்பகுதிகளில் உள்ள மழை நீர் வழிந்தோட வழியில்லாமல் தேங்கி கிடக்கின்றன.
கொருக்குப்பேட்டை, எழில்நகர், சிகரஞ்சி பாளையம், எம்ஜிஆர் நகர் ஆகிய பகுதிகளிலும், வியாசர்பாடி, கணேசபுரம் மேம்பாலத்தின் அடியில் மழைநீர் தேங்கி கிடக்கின்றன. இப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
வியாசர்பாடி இரயில்வே மேம்பாலம் கீழே மழைநீர் தேங்கி கிடப்பதால் அப்பகுதியில் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்கின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இங்குள்ள வெள்ள நீரை சென்னை மாநகராட்சி மோட்டார் மூலம் வெளியேற்றி வருகிறது.
வெள்ளச் சேதம், இழப்பு குறித்து தகவல் அளிக்க சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகத்தில் 24 மணி நேரம் செயல்படக் கூடிய கட்டுப்பாடு அறையில் இலவச தொலைபேசி எண் 1070 இயங்கி வருகிறது.
மாவட்டங்களின் தலைமையிடத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறையின் இலவச தொலைபேசி எண் 1077 மூலம் அந்தந்த மாவட்டங்களின் நிலவரம் குறித்து அறிந்து கொள்ள முடியும் என்று வருவாய்த் துறைச் செயலாளர் பழனியப்பன் கூறினார்.
இந்த இலவச தொலைபேசி எண்கள் மூலமாக மழை, வெள்ளம் குறித்த தகவல்களைக் கேட்டுப் பெறலாம். பொது மக்களும் தங்களிடம் உள்ள தகவல்களைத் தெரிவிக்கலாம் என்றும் பழனியப்பன் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment