கருணாநிதி அழைப்பு

கோவையில் நடைபெறும் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் கலந்துகொள்ள குடியரசு‌த் தலைவ‌ர், பிரதமர், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அழைக்க உள்ளோம் என்று முதலமைச்சர் கருணாநிதி கூறினார்.

உலகத்தமிழ் செம்மொழி மாநாடு கோவையில் ஜூன் 24ஆ‌ம் தேதி முதல் 4 நாட்கள் நடக்க உள்ளது. இந்த நிலையில் முதலமைச்சர் கருணாநிதி நேற்று கோவை சென்றார். கோவையில் நேற்று தொடங்கிய வேளாண் அறிவியல் நிலையங்களின் தேசிய மாநாட்டில் கலந்துகொண்ட அவர் மாலையில் ச‌ெ‌ய்‌தியாள‌ர்களு‌க்கு பே‌ட்டி அ‌ளி‌த்தா‌ர்.

அ‌ப்போது செ‌ய்‌தியாள‌ர்க‌ள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:

உலகத்தமிழ் செம்மொழி மாநாடு, கோவையில் நடைபெறவிருப்பதையொட்டி?

தொடக்க கட்ட வேலைகள் எல்லாம் ஆரம்பிக்கப்பட்டு உலகம் எங்கும் பல்வேறு நாடுகளில் உள்ள அறிஞர்களோடு தொடர்பு கொண்டு மாநாட்டில் அவர்கள் எல்லாம் பங்குபெற வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பல அறிஞர்கள் நம்முடைய அழைப்பை ஏற்று ஒப்புதல் தெரிவித்து இருக்கிறார்கள். மாநாடு நடைபெறும் இடமான கோவையில் உள்ள மாவட்ட ஆட்சி தலைவருடைய மேற்பார்வையிலும், மற்ற பகுதிகளில் ஆங்காங்கு இருக்கின்ற மாவட்ட ஆட்சியர்களுடைய மேற்பார்வையிலும் மாநாட்டு பணிகள் நடைபெறுவதற்கான ஆயத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

இந்த மாநாட்டிற்கு தமிழகம் முழுவதும் குறிப்பாக மாநாடு நடைபெறுகின்ற கோவை அருகில் உள்ள நீலகிரி, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்ட மக்கள், விவசாயிகள், வணிகர்கள், தொழிலாளத் தோழர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் என அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று உங்கள் மூலமாக இன்று நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

கோவையில் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு நடைபெறுவதால், கோவைக்கு சிறப்பு கட்டமைப்பு பணிகள் ஏதாவது செய்யப்படுமா?

நிச்சயமாக கோவை மாநகரிலும், இதனையொட்டிய பகுதிகளிலும் புதிய திட்டங்கள் உருவாக்கப்படும். ஏற்கனவே கழக ஆட்சி ஏற்பட்ட பிறகுதான் டைட்டல் பூங்கா, கூட்டுக்குடிநீர் திட்டங்கள், பாதாள சாக்கடை திட்டம் போன்ற பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த செம்மொழி மாநாட்டையொட்டியும் பல உள் கட்டமைப்பு பணிகள் நிச்சயமாக மேற்கொள்ளப்படும்.

செம்மொழி மாநாட்டிற்கு மத்திய அரசின் நிதி வருமா?

இப்போது மத்திய அரசு கொடுக்கின்ற நிதியாக கருணா'நிதி'தான் இருக்கிறேன்.

மாநாட்டிற்கு பிரதமரை அழைப்பீர்களா?

ஏற்கனவே நடைபெற்ற மாநாடுகளிலே அறிஞர் அண்ணா முதலமைச்சராக இருந்தபோது நடைபெற்ற மாநாட்டிற்கு அப்போது குடியரசு தலைவராக இருந்தவர் அழைக்கப்பட்டு கலந்துகொண்டார். அதுபோல இந்த மாநாட்டிற்கும் குடியரசு தலைவர், பிரதமர், காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி ஆகியோரை அழைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

நீங்கள் ஆட்சி பொறுப்பேற்ற பிறகுதான் அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள் எல்லாம் முழுச்சம்பளம் பெற்று வருகிறார்கள். அதைப்போல ஓய்வூதியத்தில் அவர்களுக்கு சில பிரச்சனை இருப்பதாக சொல்கிறார்களே? அதையும் நீங்கள் களைவீர்களா?

மத்திய அரசின் செயல்பாட்டிற்கு உரியது அது.

‌நியாய‌விலை கடைகளில் பருப்பு விலை அதிகமாயிருக்கிறதே?

அதை நான் மறுக்கவில்லை. ஆனால் நம்முடைய தமிழக அரசை பொறுத்தவரையில் எந்த அளவிற்கு வாங்கக்கூடிய மக்களுக்கு அவர்களுடைய சுமையை குறைக்க முடியுமோ, அந்த அளவிற்கு உணவு தானிய பொருட்களுக்கு மானியம் வழங்கி, பொது விநியோகத்தில் விலைவாசியை குறைக்கும் முயற்சியிலே ஈடுபட்டிருக்கின்றது என்பதை நீங்கள் அறிவீர்கள்.

மத்திய வேளாண் மற்றும் உணவுத்துறை அமைச்சரை சந்தித்தது பற்றி?

ஒரு ஆண்டுக்கு 2 ஆயிரத்து 900 கோடி ரூபாய் உணவு மானியமாக வழங்கப்பட்டு தமிழகம் முழுவதும் பொது வினியோகத்திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்துக்கு தேவையான 1 லட்சத்து 80 ஆயிரம் டன் அரிசியை குறைந்தபட்ச ஆதரவு விலையின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட தொகைக்கு தமிழகத்துக்கு வழங்க வேண்டும் என்று மத்திய அரசை தமிழக அரசின் சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டது. மாநில அரசின் இந்த கோரிக்கையை பரிவுடன் பரிசீலனை செய்ய வேண்டும் என்று இந்த மாநாட்டு நிகழ்ச்சி முடிந்து மத்திய அமை‌ச்சரோடு பேசும்போது வலியுறுத்தி கேட்டுக்கொண்டேன்.

அவினாசி, அத்திக்கடவு திட்டம் குறித்து நியமிக்கப்பட்ட மோகன கிருஷ்ணன் குழு அறிக்கை கொடுத்து விட்டதே? என்ன பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது?

அதில் அந்த திட்டத்துக்கு எதிர்ப்பான கருத்து எதுவும் இல்லை. அதை நடைமுறைப்படுத்தலாம் என்ற நல்ல கருத்து தான் சொல்லப்பட்டு இருக்கின்றது. அந்த அறிக்கை ஆய்விலே உள்ளது.

கரும்பு கொள்முதல் விலையை அதிகப்படுத்தி தர வேண்டும் என்ற கோரிக்கை பற்றி?

மத்திய அரசு ஏற்கனவே ஒரு டன் கரும்புக்கு நிர்ணயித்த விலை ரூ.1,077.60. இப்போது அதிகப்படுத்தியிருப்பது ரூ.220.80, இரண்டையும் சேர்த்தால் ரூ.1.298.40. மத்திய அரசின் இந்த விலையை விட தமிழக அரசில் அதிகமாகத்தான் இப்போது கொடுத்து கொண்டு இருக்கிறோம்.

தமிழக அரசு ஏற்கனவே நிர்ணயித்துள்ள விலை ரூ.1,437.40. இது தவிர வண்டி வாடகை பிழி திறன் ரூ.112.60. ஆகவே தமிழக அரசின் விலை இப்போது கொடுப்பது ரூ.1550. இது தற்போது அரசு நிர்ணயித்து உள்ள விலையை விட அதிகம் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் எ‌ன்று கருணாநிதி கூறினார்.

0 comments: