பஸ்களில் 'சீட்' நீளம் குறைப்பு சரி செய்ய 15ம் தேதி வரை கெடு

கோவையில் இயங்கும் தனியார் பஸ்களில், பயணிகள் அமரும் இருக்கையின் நீளம் விதிமீறி குறைக்கப்பட்டுள்ளது. இதை சரி செய்ய, வரும் 15ம் தேதி வரை கெடு விதிக்கப்பட் டுள்ளது.கோவை, திருப்பூர் மாவட் டங்களில் 2,000 க்கும் மேற் பட்ட தனியார் மற்றும் அரசு பஸ்கள் இயங்கி வருகின்றன. பல தனியார் பஸ் உரிமையாளர்கள் பயணிகளை கவரவும், பராமரிப்புச் செலவை குறைக்கவும், நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை பழைய பஸ்களை மாற்றிவிட்டு புதிய பஸ்களை இயக்குகின்றனர்.இந்த புதிய பஸ்களில் நவீன ஆடியோ, வீடியோ வசதி செய்து இயக்குகின்றனர். ஆனால், இந்த பஸ்களில் பயணிகள் உட்காரும் சீட்டின் நீளம் குறைக்கப்பட்டுள்ளது. பஸ்சின் நடுவே அதிக பயணிகளை நிறுத்தி கூடுதல் கலெக்ஷன் பார்ப்பதற்காக, சீட்டின் நீளத்தை குறைத்துள்ளனர்.இதனால், இரண்டு பேருக்கான சீட்டில் ஜன்னலை ஒட்டிய சீட்டில் ஒருவர் நன்கு உட்கார முடிகிறது; அடுத்த பயணி பாதி சீட்டில் தொங்கியபடி பயணம் செய்ய வேண்டி உள்ளது. இதே போன்று, மூன்று பேர் சீட்டில் இருவர் சரியாக உட்கார்ந்து கொள்ள ஒருவர் பாதி சீட்டில் தொங்கியபடி பயணம் செய்ய வேண்டி உள்ளது.இப்பிரச்னை குறித்து பல அமைப்புகள் மோட்டார் போக்குவரத்து அலுவலகத்தில் புகார் செய்தன. கடந்த மாதம், இது குறித்து "தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது.இதையடுத்து, மேட்டுப்பாளையம் வட்டார போக்குவரத்து அலுவலர் (பொறுப்பு) ரஜினி காந்த், மோட்டார் வாகன ஆய்வாளர் உலகநாதன் ஆகியோர், கோவை- அவினாசி ரோட்டில் இயங்கும் தனியார் பஸ்களில் ஆய்வு செய்தனர். அதன் பின், வட்டார போக்குவரத்து அலுவலர் (பொறுப்பு) ரஜினிகாந்த் கூறியதாவது:தனியார் பஸ் உரிமையாளர்கள் சிலர் தங்களுடைய பஸ் சீட்டின் நீளத்தை சரி செய்து கொள்ள அவகாசம் அளிக்க கோரினர். இதை தொடர்ந்து, வருகிற 15ம் தேதி வரை தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னும் பயணிகள் பிரச்னையில்லாமல் பயணம் செய்ய வசதியாக சீட்டின் நீளம் சரி செய்யாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, ரஜினிகாந்த் தெரிவித்தார்.

0 comments: