வியட்நாமில் சூறாவளி 90 பேர் பலி


வியட்நாம் நாட்டின் மத்திய பகுதியில், இவ்வாரம் பலத்த சூறாவளி காற்று வீசியது. இதில் சிக்கி, 90 பேர் பலியாயினர்; பலரை காணவில்லை என, அந்நாட்டு பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து, "வியட்நாம் நியூஸ்' என்ற பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தி விவரம்: வியட்நாம் நாட்டின் மத்திய பகுதியில், இவ்வார துவக்கத்தில், சூறாவளி வீசியது. இந்த சூறாவளிக்கு, "மிரினே' என, பெயரிடப்பட்டது. இங்கு வீசிய சூறாவளி மற்றும் மழையால், காபி பயிரிடப்பட்டுள்ள பகுதிகளில், காபி அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அப்பகுதியைச் சேர்ந்தவர்கள், தற்போது இயல்பு நிலை திரும்பி உள்ளதாக நேற்று முன்தினம் தெரிவித்தனர். இந்த சூறாவளியில் சிக்கி 90 பேர் பலியாகி உள்ளனர். 154 வீடுகள் அழிந்துவிட்டன. 2,500 வீடுகள் சேதமடைந்துள்ளன. 4,450 ஏக்கர் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இவ்வாறு பத்திரிகை செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில், நேற்று முன்தினம் வரை எட்டு பேரை காணவில்லை என, அந்நாட்டு வெள்ளத் தடுப்பு அலுவலகம் தகவல் தெரிவித்தது. ஆனால், 21 பேரை காணவில்லை என, "வியட்நாம் நியூஸ்' பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பூயென் மற்றும் பின்தின் பகுதிகளில் வீட்டின் கதவுகள் வரை வெள்ள நீர் ஓடுவதும், ஒரு வீட்டின் கூரையை பிரித்து பெண் ஒருவரை மக்கள் மேலே தூக்குவது போன்ற படங்களும், அந்நாட்டு பத்திரிகையில் வெளியாகியுள்ளன. இந்த சூறாவளியால், பின்தின் மாகாணத்தில் மட்டும் இரண்டு லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, "விடிவி' சேனலில் செய்தி வெளியாகி உள்ளது.



இதுபற்றி தேசிய பேரிடர் குழுவினர் கூறுகையில், "பூயென் பகுதியில், கடந்த 30 ஆண்டுகளில், தற்போது தான் மிக மோசமான சூறாவளி வீசியுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதியில், இரண்டாயிரம் ராணுவ வீரர்கள், மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்' என்றனர்.

0 comments: