விலைவாசி உயர்வை கண்டித்து நவ., 17ல் 14 இடங்களில் மறியல்

விலைவாசி உயர்வை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தஞ்சை மாவட்டத்தில் 14 இடங்களில் மறியல் போராட்டம் நடத்துவது என முடிவு செய்தனர். தஞ்சையில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டுக்கூட்டம் இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் திருஞானம் தலைமையில் நடந்தது.
நவம்பர் 17ம் தேதி தேசிய அளவில் விலைவாசி உயர்வு எதிர்ப்பு, உணவு பாதுகாப்பை வலியுறுத்தி இடது சாரிகள் சார்பில் நடக்க உள்ள மறியல் போராட்டத்தை தஞ்சை மாவட்டத்தில் 14 இடங்களில் நடத்துவது. மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் முன் நடக்கும் மறியல் போராட்டத்தை விளக்கி அனைத்து யூனியன்களிலும் கோரிக்கை விளக்க பிரச்சார இயக்கங்களை நடத்துவது. தஞ்சை மாவட்டத்தில் நடக்கும் மறியல் போராட்டத்தில் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்பது. மக்கள் கோரிக்கைக்காக நடக்கும் இப்போராட்டத்தில் அனைத்து தரப்பினரும் பங்கேற்க அழைப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் நீலமேகம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மனோகரன், சிவகுரு, முருகேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் கிருஷ்ணன், ராஜேந்திரன், சுப்பிரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர்.

0 comments: