திருட்டு பாஸ்போர்ட்டில் திருச்சி வந்த உஸ்பெஸ்கிஸ்தான் நாட்டு தம்பதிகள் மற்றும் இரண்டு குழந்தைகள் உட்பட ஆறு பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்க கொண்டு செல்லப்பட்டனர்.
உஸ்பெஸ்கிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் ஜேக்கப் (38), இவருடைய மனைவி டாண்ணிலா (30) ஆகியோர் கடந்த மாதம் ஐந்தாம் தேதி டென்மார்க்கிலிருந்து மும்பை வழியாக இந்தியா வந்தனர். இதேபோல், இவர்களுடைய நண்பர்கள் உஸ்பெஸ்கிஸ்தான் சேர்ந்தவர் பர்ஜா(34), இவருடைய மனைவி டென்னிஸ்(33). இவர்களுடைய மகள் தீனா (14), மகன் அரஸ்(5) இவர்கள் நான்கு பேரும் கடந்த மாதம் மூன்றாம் தேதி கோவா வழியாக இந்தியா வந்தனர்.
ஒரு மாதம் இந்தியாவில் சுற்றுலா இடங்களை பார்வையிட்டனர். பின்னர் திருச்சியிலிருந்து இலங்கை தலைநகர் கொழும்பு வழியாக லண்டனுக்கு கடந்த மூன்றாம் தேதி புறப்பட்டு சென்றனர். திருச்சியிலிருந்து கொழும்பு சென்ற இவர்களுடைய பாஸ்போர்ட் அங்கு சோதிக்கப்பட்டது. அப்போது ஆறு பேரும் திருட்டு போன பாஸ்போர்ட்டில் இந்தியாவிலிருந்து கொழும்பு வந்தது தெரியவந்தது.
கொழும்பு இமிகிரேஷன் அதிகாரிகள் உடனடியாக ஆறு பேரையும் ஸ்ரீலங்கன் விமானம் மூலம் மீண்டும் திருச்சிக்கு அனுப்பிவைத்தனர். திருச்சி விமான நிலையத்தில் நேற்று முன்தினம் இமிகிரேஷன் அதிகாரி ஸ்ரீதர் மற்றும் அதிகாரிகள், பாஸ்போர்ட்டை சோதித்து பார்த்ததில் டென்மார்க்கில் குடியேறி அங்கு திருட்டு தனமாக பாஸ்போர்ட் பெற்றிருப்பது தெரியவந்தது. பின் டில்லியிலுள்ள தூதரக அலுவலகத்துக்கு தகவல் அளித்தனர். திருச்சி விமான நிலைய போலீஸார் ஆறு பேரையும் கைது செய்தனர்.
நேற்று திருச்சி ஆறாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆறு பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது தீனாவுக்கு 14வயது என போலீஸார் குறிப்பிட்டனர். இதை ஏற்க மறுத்த மாஜிஸ்திரேட் சுஜாதா, மேற்கண்ட பெண்ணுக்கு கூடுதல் வயது இருக்கும் என்பதால், மருத்துவ பரிசோதனை நடத்தி விபரத்தை தெரிவிக்குமாறு போலீஸாருக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு பரிசோதனை செய்ததில் தீனா மேஜர் என்பது தெரியவந்தது. இதைதொடர்ந்து ஆறு பேரையும் சென்னை புழல் சிறையில் வரும் 19ம் தேதி வரை அடைக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் சென்னை அழைத்துச் செல்லப்பட்டனர்.
0 comments:
Post a Comment