எகிப்து தலைவருடன் ராகுல் ஆலோசனை

எகிப்து பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல், அங்கு அரபு லீக் தலைவர் அமர் முசாவை சந்தித்துப் பேசினார். இந்திய - பாகிஸ்தான் உறவுகள் உட்பட மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்து விவாதித்தார். கெய்ரோவில் நேற்று முன்தினம் நிகழ்ந்த இச்சந்திப்பின் போது, வறுமை ஒழிப்பு, கல்வியை பரப்புதல், சுகாதார சேவைகளை மேம்படுத்துதல் போன்றவற்றில் இந்தியா கொண்டுள்ள நிபுணத்துவம் குறித்து முசாவிடம் ராகுல் விவரித்தார்.


பின்னர் கெய்ரோ பல்கலைக் கழகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று மாணவர்களுடன் கலந்துரையாடினார். "கல்வி மற்றும் மாணவர்கள் பரிமாற்றத் திட்டம் போன்ற துறைகளில் இந்தியா - எகிப்து இடையே உறவுகளை மேம்படுத்த வேண்டியது அவசியம்' என, வலியுறுத்தினார்.


தேசிய மற்றும் சர்வதேச பாதுகாப்புக்கு பயங்கரவாதம் ஒரு பெரிய அச்சுறுத்தலாக உள்ளதால், அதை ஒழித்துக் கட்ட உலக சமுதாயம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். வளர்ச்சி நடவடிக்கைகளில் இளைஞர்கள் அதிகளவில் பங்கேற்க வேண்டும். இந்திய பொருளாதாரம் மாறுபட்டதாக, சமச்சீரானதாக மற்றும் நெகிழ்வுத் தன்மை கொண்டதாக இருப்பதால், உலக அளவில் நிலவிய பொருளாதார நெருக்கடியால் அதிகளவில் பாதிக்கப்படவில்லை. உலக அளவில் சமூக நீதியை உருவாக்கவும், வறுமையை ஒழிக்கவும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் ராகுல் பேசினார்.

0 comments: