தமிழகம் முழுவதும் பலத்த மழை,பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழகம் முழுவதும் கடலோர மாவட்டங்களில் விடிய விடிய மழை பெய்ததது. இன்னும் தொடர்ந்து நிற்காமல் மழை பெய்து வருவதால் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை மேலும் வலுவடைந்திருப்பதால், தமிழக கடலோர மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் மேலும் 2 நாட்களுக்கு மழை கொட்டித் தீர்க்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுவரை மழைக்கு தமிழகத்தில் 14 பேர் பலியாகியுள்ளனர். தமிழக கடலோர மாவட்டங்களிலும், சென்னை நகரிலும், புதுச்சேரியிலும் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

மன்னார் குடாவில் ...

மன்னார் வளைகுடாப் பகுதியில் தற்போது காற்றழுத்தத் தாழ்வு நிலை மையம் கொண்டுள்ளது. தமிழகத்தையொட்டி தென் மேற்கு வங்கக் கடல் வழியாக இது நிலை கொண்டுள்ளது.

மன்னார் வளைகுடாப் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ஏற்பட்ட காலங்களில் தமிழகத்தில் பலத்த மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் [^] எஸ்.ஆர்.ரமணன் தெரிவித்துள்ளார். எனவே இந்த முறையும் பலத்த மழையை தமிழகம் சந்திக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் கண்டிப்பாக மழை பெய்யும். ஒருசில இடங்களில் மிக பலத்த மழை பெய்யும். உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் மழை பெய்யும். சில இடங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.

மிதக்கும் சென்னை புறநகர்கள்..

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக புறநகர்ப் பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் விடாமல் மழை பெய்தது. இன்று காலையும் மழை நிற்காமல் வெளுத்துக் கட்டி வருகிறது.

தொடர் மழை காரணமாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

சென்னையில் நேற்றே பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஆனால் மிகவும் கால தாமதமாக விடுமுறை அறிவிக்கப்பட்டதால் பல பள்ளிகள் விடுமுறை விடப்படாமல் இயங்கின. அரசுப் பள்ளிகளுக்கு சென்ற மாணவர்கள் [^], விடுமுறை குறித்த தகவலை அறிந்து கொட்டும் மழையில் மீண்டும் வீடு திரும்பினர்.

சென்னைப் புறநகர்ப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பல பகுதிகள் நீரில் மிதக்கின்றன. பல பகுதிகளில் வீடுகளில் நீர் புகுந்துள்ளது. சில பகுதிகளில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் மரங்கள் சாய்ந்துள்ளன.

நேற்று அதிகாலை முதல் சென்னையில் விட்டு விட்டு மழை பெய்தது. இதனால் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதன்காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தொடர்மழையின் காரணமாக சென்னையில் மாநகராட்சி, அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.

வட சென்னை கணேசபுரம் ரயில்வே சுரங்கப்பாதையில் வழக்கம் போல் மழைநீர் குளம் போல் தேங்கி காணப்படுகிறது. இதனால் வியாசர்பாடி பகுதி உள்பட வடசென்னையே துண்டிக்கப்பட்ட பகுதியாக மாறியுள்ளது.

பெரம்பூரில் மழையின் காரணமாக நேற்று காலையில் கடும் போக்குவரத்து [^] நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் தண்ணீரில் மிதந்தபடியே வந்தன. சென்னை நகர் முழுவதும் மேடு பள்ள சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்து காணப்பட்டதால் வாகன ஓட்டிகளுக்கு மிகப்பெரிய சிரமம் ஏற்பட்டது.

கண்ணதாசன் நகர் பஸ் நிலையம் முழுவதும் வெள்ளநீரால் சூழப்பட்டு குளம் போல் காட்சியளித்தது. இது தவிர வட சென்னையில் உள்ள மாநகராட்சி பூங்காக்கள், மாநகராட்சிகள் அனைத்தும் மழைநீரால் சூழப்பட்டு இருந்தது.

விருகம்பாக்கம் காந்திநகர், கொளத்தூர், வில்லிவாக்கம், அயனாவரம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழைநீர் தேக்கம் காணப்பட்டது. குடிசைப்பகுதிகளிலும் மழைநீர் சூழ்ந்ததால் பலர் வீட்டை விட்டு வெளியேறி பிளாட்பாரங்களில் தஞ்சம் அடைந்த காட்சிகளை பார்க்க முடிந்தது.

விருகம்பாக்கம் சின்மயாநகரில் கார் ஒன்றின் மீது மரக்கிளை விழுந்தது.

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் மழைநீர் ஆங்காங்கே தேங்கி, சேறும், சகதியுமாக காணப்பட்டது. கோடம்பாக்கம், தியாகராயநகர், வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலைகளிலும், தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது.

சென்னை எழும்பூர் காந்தி இர்வின் சாலை, மிïசியம் சாலை, புரசைவாக்கம், மோட்சம் தியேட்டர் அருகே உள்ள சாலை, ஓட்டேரி, பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலை வீனஸ் பகுதி ஆகிய இடங்களில் மழைநீர் தேக்கம் காணப்பட்டது.

சென்னை மெரினா கடற்கரையில் மழைநீர் ஆங்காங்கே தேங்கி குட்டி குளம் போல் காணப்பட்டது. இதில் சிறுவர்கள் குதித்து குதித்து விளையாடிய காட்சிகளை பார்க்க முடிந்தது. மழையின் காரணமாக மெரினா கடற்கரைக்கு பொது மக்கள் வரத்து குறைந்திருந்த போதிலும் காதலர்களின் வருகை அதிகமாகவே இருந்தது.

மெரினா கடற்கரையில் தேங்கியிருந்த மழைநீரில் பலர் தங்களது இரு சக்கர வாகனங்களை கழுவிய காட்சிகளை காண முடிந்தது.

மிதக்கும் வேளச்சேரி பகுதிகள்...

அடையார், திருவான்மிïர், பெசன்ட்நகர், வேளச்சேரி, தரமணி ஆகிய பகுதிகளிலும் மழைநீர் ஆங்காங்கே தேங்கி நின்றது.

வேளச்சேரி ரயில்நிலையம், அதனையொட்டிய பகுதிகள், இணைப்பு சாலை பகுதிகள் ஆகிய இடங்களில் மழைநீர் தேங்கிக் கிடக்கிறது. அவற்றை அகற்றும் பணியில், மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

ராமேஸ்வரம், புதுச்சேரியில் கடல் கொந்தளிப்பு...

புதுச்சேரியில் விடாமல் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. அத்தோடு கடல் கொந்தளிப்பும் காணப்படுகிறது. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல ராமேஸ்வரத்திலும் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்குப் போகவில்லை.

ராமேஸ்வரம் கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் பாம்பன் ரயில் பாலத்தில் செல்லும் ரயில்கள் மிக மிக மெதுவாக ஊர்ந்து செல்கின்றன.

டெல்டா மாவட்டங்கள் ..

காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் மனம் குளிர்ந்துள்ளனர்.

நாகை மாவட்டத்தில் ஒரு இடங்களில் வாய்க்கால்களில் கரைபுரண்டு ஓடும் வெள்ளநீர் கரைகளை உடைத்து கொண்டு சம்பா சாகுபடி செய்துள்ள வயல்களுக்குள் புகுந்துள்ளது.

கடைமடை பகுதியான தலைஞாயிறு மற்றும் கீழையூர் ஒன்றிய பகுதியில் அரிச்சந்திரா ஆறு, வெள்ளையாறு, அடப்பாறு, நல்லாறு ஆகியவற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

நேற்று முன்தினம் இரவு முதல் நாகை மீனவர்கள் [^] கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் நாகை துறைமுகத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் 500-க்கும் மேற்பட்ட விசைபடகுகள், பைபர் படகுகள் துறைமுகம் மற்றும் கடற்கரையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களும், மீன்பிடி தொழில் சார்ந்த தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். சில சுனாமி குடியிருப்பு பகுதிகள் மழை நீரால் சூழப்பட்டுள்ளன.

உலர் மீன் தொழிலாளர்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளனர். கருவாடு உற்பத்தி பாதிக்கப்பட்டு நாமக்கல் உள்ளிட்ட வெளிமாவட்டங்களுக்கு செய்யப்படும் ஏற்றுமதி முற்றிலும் பாதிக்கப்பட்டு ரூ.1 கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

ராமநாதபுரத்தில் ...

நேற்று முன்தினம் இரவு முதல் விடிய, விடிய 12 சென்டி மீட்டர் அளவுக்கு மழை கொட்டியது. பாம்பன், மண்டபம், பரமக்குடி உள்பட மாவட்டம் முழுவதும் கனமழை பெய்தது. ராமநாதபுரத்தில் நேற்று காலையும் அடைமழை தொடர்ந்தது.

ராமநாதபுரம் சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளி அருகே நேற்று காலை சாலையோரம் உள்ள வேப்பமரம் அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார் மீது சாய்ந்தது. காரில் ஆட்கள் யாரும் இல்லாததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. தொடரும் மழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

மதுரை நகரில் நேற்று முன்தினம் இரவு மழை கொட்டியது. சிவகங்கை மாவட்டத்திலும் நேற்று காலை 6 மணி வரை லேசான மழை பெய்தது. பகலில் மேகமூட்டமாக காணப்பட்டது.

சேலம் மாவட்டத்தில் நேற்று பரவலாக லேசான மழை பெய்தது. வேலூர் மாவட்டத்தில் வேலூர், ஆம்பூர், அரக்கோணத்தில் விட்டு, விட்டு மழை பெய்தது.

கோவை, நீலகிரி மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது.

இப்படி தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் நல்ல மழை பெய்து வரும் நிலையில், சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மழை இல்லை.

0 comments: