சவூதியில் காத்திருக்கும் தமிழர்கள்

தங்களை மீண்டும் நாட்டுக்கு அனுப்பக் கோரி 2000க்கும் மேற்பட்ட இந்தியத் தொழிலாளர்கள், ஜெட்டாவில் உள்ள இந்திய தூதரகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 2 நாட்களாக இந்தப் போராட்டம் நடந்து வருகிறது.

இந்தத் தொழிலாளர்கள் அனைவரும் தமிழ்நாடு, கேரளா, ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் ஆவர். ஜெட்டாவில் உள்ள ஷாராபியாவில் உள்ள மேம்பாலத்திற்கு கீழே கடந்த 3 மாதங்களாக வசித்து வருகின்றனர்.

மீண்டும் நாடு திரும்ப பெரும் கவலையுடன் காத்துள்ளனர். இவர்களில் பலர் விசா காலம் முடிந்த பின்னரும் தங்கியதால் நாடு கடத்தப்படும் நிலையில் உள்ளனர். சிலருக்கு முறையான பாஸ்போர்ட் இருந்தும், ஸ்பான்சர்களின் அனுமதி இல்லாமல் உள்ளது.

கடந்த 2 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இந்தியர்களை நேற்று சவூதி போலீஸார் அங்கிருந்து அப்புறப்படுத்தி, மதினத் அல் ஹுஜ்ஜாஜ் என்ற நாடு கடத்தும் மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

கடந்த ஆஸ்ட் மாதம், நூற்றுக்கும் மேற்பட்ட தமிழக தொழிலாளர்கள், இதே ஷாராபியா மேம்பாலத்திற்குக் கீழ் மோசமான நிலையில் வசித்து வந்தனர். இவர்களை சென்னைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யுமாறு மத்திய வெளிநாடு வாழ் இந்தியர் நலத்துறை அமைச்சர் வயலார் ரவிக்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ ரவிக்குமார் கேட்டுக் கொண்டார். இதையடுத்து அவர்கள் சவூதியிலிருந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர்.

இந்த நிலையில் தற்போதைய நிலவரம் குறித்து ஜெட்டாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரி பி.எஸ்.முபாரக் கூறுகையில், கிட்டத்தட்ட 1000க்கும் மேற்பட்ட இந்தியத் தொழிலாளர்கள் நாடு திரும்புவதற்காக ஜெட்டாவில் தவித்து வருகின்றனர்.

சட்டவிரோதமாக வந்தவர்கள் நாடு திரும்புவதற்குத் தேவைப்படும் அவசர சான்றிதழைப் பெறுவதற்கான விண்ணப்பங்களை இவர்களுக்கு வழங்கியுள்ளோம். ஆனால் ஸ்பான்சர்களின் அனுமதி கிடைக்க தாமதம் ஆவதால் இவர்கள் நாடு திரும்புவதும் கால தாமதமாகிறது. விரைவில் அனைவரும் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என்றார்.

ரியாத்தில் உள்ள இந்தியத் தூதரக துணைத் தூதர் ராஜீவ் சஹாரே கூறுகையில், கடந்த எட்டு மாதங்களில் 3977 அவசர சான்றிதழ்களை இந்தியத் தூதரகம், இந்தியத் தொழிலாளர்களுக்கு வழங்கியுள்ளது என்றார்.

ஜெட்டாவில் தவித்துக் கொண்டிருக்கும் பாளையங்கோட்டையைச் சேர்ந்த கருப்பையா என்ற தொழிலாளர் கூறுகையில், கடந்த 3 மாதங்களாக எங்களைத் திருப்பி அனுப்புமாறு கோரி ஜெட்டாவில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் முறையிட்டு வருகிறோம்.

நான் தூதரக அதிகாரிகளிடம் கண்ணீர் விட்டுக் கதறி எப்படியாவது என்னை அனுப்பி வைத்து விடுங்கள் என்று கோரினேன். ஆனால் என்னைக் காத்திருக்குமாறு கூறி விட்டனர்.

எனக்கு சரியான சம்பளம் தரவில்லை, என்னை மோசமாக நடத்தினார்கள். இதனால் எனது முதலாளியிடமிருந்து நான் ஓடி வந்து விட்டேன்.

ஊரில் எனது குடும்பத்தினர் பெரும் கஷ்டத்தில் உள்ளனர். இதனால் உடனே நாடு திரும்ப விரும்புகிறேன். ஆனால் இங்கு அரசியல் செல்வாக்கு உள்ளவர்களுக்கு மட்டுமே உடனடியாக நாடு திரும்ப வாய்ப்பு கிடைக்கிறது.

ஆனால் என்னைப் போன்றவர்கள் இந்த பாலத்திற்குக் கீழே பிச்சைக்காரர்களைப் போல விழுந்து கிடக்கிறோம் என்று கூறி அழுதார்.

தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த அப்பாவித் தமிழர்களை சவூதியிலிருந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 comments: