சீக்கியர்களுக்கு எதிரான கலவரம்:

ஜலந்தர்: பிரதமராக இருந்த இந்திராகாந்தி 1984-ஆம் ஆண்டு சீக்கிய பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, தலைநகர் டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிராக கலவரம் வெடித்தது. அந்த கலவரம் நடந்து 25 ஆண்டுகள் ஆன நிலையிலும், கலவரக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து பஞ்சாப் மாநிலத்தில் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு தல்கல்சா என்ற சீக்கிய அமைப்பு அழைப்பு விடுத்திருந்தது. இந்த அமைப்பினர் இன்று முழு அடைப்பில் ஈடுபட்டனர். இதையொட்டி மாநிலத்தின் பல இடங்களில் அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் ரயில் மறியலில் ஈடுபட்டனர். அமிர்தரஸில் இருந்து டெல்லி சென்ற சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலை அவர்கள் சிறை பிடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தவிர சச்காண்ட் எக்ஸ்பிரஸ், பச்மி எக்ஸ்பிரஸ், சூப்பார் பாஸ்ட், தாதர், கதியார் எக்ஸ்பிரஸ், டாடா மொரி ஆகிய ரயிலகளியும் போராட்டக்காரர்கள் மறித்ததால், ஆயிரக்கணக்க்கான பயணிகள் தவித்தனர். அனைத்து ரயில்களின் புறப்படும் நேரமும் ஒத்திவைக்கப்பட்டு, காலை 11 மணிக்கு மேல் மாற்றியமைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பேருந்துகளையும் மறித்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், சாலை போக்குவரத்தும் பாதிப்புக்குள்ளானது. சண்டிகர் - ரோபார் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்துகள் நின்று கொண்டிருந்ததாக தகவல்கள் கூறுகின்றன. பெரும்பாலான பகுதிகளில் சந்தைகள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன.

0 comments: