WDநந்தனம் என்.ஏ.பி.சி. பிராப்பர்ட்டீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் வருண் மணியன் என்பவர் நடிகர் ரஜினிகாந்த்தின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்திற்கு எதிராக தன்னுடைய சார்பிலும், தன்னுடைய நிறுவனத்தின் சார்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், அபிராமபுரத்தில் உள்ள ஆக்கர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சௌந்தர்யா ரஜினிகாந்த், 2007ஆம் ஆண்டு என்னை சந்தித்து 'கோவா' படம் தயாரிப்பதற்கு நிதியுதவி அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து, என்னுடைய நிறுவனத்தின் சார்பில் அவருக்கு 2007ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 50 லட்ச ரூபாயும், 2008ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 60 லட்ச ரூபாயும் கடனாக கொடுத்தேன்.இந்த கடனை 24 சதவிகித ஆண்டு வட்டியில் திருப்பி கொடுப்பதாக அவர் எனக்கு பிராமிசரி நோட் எழுதி தந்தார். 'கோவா' படத்தை வெளியிடுவதற்கு முன்பு இந்த கடனை திரும்ப செலுத்தி விடுவதாகவும் அவர் கூறியிருந்தார்.
இது தவிர, என்னுடைய சொந்த பணத்திலிருந்தும் அவருக்கு 50 லட்ச ரூபாய் தந்தேன். ஆனால் இதுநாள் வரை இந்த கடனை அவர் திரும்ப தரவில்லை.எனவே, கடனை திரும்பக் கேட்டு சௌந்தர்யா ரஜினிகாந்திற்கு கடிதம் எழுதினேன். இதற்கு பதில் அளித்த ஆக்கர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் இயக்குனர் லதா ரஜினிகாந்த், இந்த பணத்தை நவம்பர் 30ஆம் தேதிக்குள் திரும்பத் தந்துவிடுவதாக கூறியிருந்தார். ஆனால், அவர்கள் தெரிவித்திருந்தபடி பணத்தை எனக்கு திரும்பத் தரவில்லை.
இந்த நிலையில், அந்த நிறுவனம் தயாரித்த 'கோவா' படம் வெளியிடப் படவிருப்பதாக கூறப்படுகிறது.அந்த படம் வெளியானால் நான் கொடுத்த கடன் தொகையை திரும்ப வாங்க முடியாமல் நான் பெரிதும் பாதிக்கப்படுவேன். எனவே, என்னுடைய கடன் தொகை திரும்ப செலுத்தப்படும் வரை 'கோவா' படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும். ரூ.1.60 கோடி அசல் தொகையை 24 சதவிகித ஆண்டு வட்டியில் திரும்ப வழங்கவும் உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளார்.இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி ஜி.ராஜசூர்யா, 'கோவா' படத்தை டிசம்பர் 11ஆம் தேதி வரை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். அத்துடன் இந்த மனுவுக்கு அன்றைய தினத்திற்குள் சௌந்தர்யா ரஜினிகாந்த் பதில் அளிக்க தாக்கீது அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டார்.
0 comments:
Post a Comment