தோற்றது இந்தியா

ஹைதராபாத்தில் நேற்று நடந்த 5வது ஒரு நாள் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் தன் மீதான விமர்சனங்களை புயலாக தகர்த்து தவிடுபொடியாக்கினார். இருப்பினும் அவரது அதிரடி ஆட்டம் இந்திய அணிக்குக் கை கொடுக்கவில்லை. மற்ற வீரர்கள் பெரிய அளவில் சோபிக்காததால், 3 ரன்களில் ஆஸ்திரேலியாவிடம் பரிதோபமாக வெற்றியை நழுவ விட்டது இந்தியா

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவும், அடுத்த இரு போட்டிகளில் இந்தியாவும், 4வது போட்டியில் மீண்டும் ஆஸ்திரேலியாவும் வென்றுள்ளன. இதனால் 2-2 என்ற கணக்கில் தொடர் சமநிலையை எட்டியது.

இந்த நிலையில் நேற்று ஹைதராபாத்தில் பகலிரவுப் போட்டியாக 5வது போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் பான்டிங் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

சிறப்பாக ஆடிய ஆஸ்திரேலிய அணியினர் படு வேகமாக ரன் குவிப்பில் ஈடுபட்டனர். முதல் விக்கெட்டே 145 ரன்கள் இருந்தபோதுதான் வீழ்ந்தது.

வாட்சன், மார்ஷ் படு அபாரமாக ஆடி ரன்களைக் குவித்து இந்திய பந்து வீச்சாளர்களை நையப்புடைத்தனர். 89 பந்துகளைச் சந்தித்து 93 ரன்களை குவித்து விட்டு வாட்சன் ஆட்டமிழந்தார். ஸ்கோர் 236 ஆக இருந்தபோது மார்ஷ் ஆட்டமிழந்தார்.

காமரூன் ஒயிட் 33 பந்துகளை மட்டுமே சந்தித்து 57 ரன்களைக் குவித்து பிரவீன் குமார் பந்தில் வெளியேறினார்.
கேப்டன் பான்டிங் 45 பந்துகளில் 45 ரன்களைச் சேர்த்தார். மைக் ஹஸ்ஸி 22 பந்துகளில் 31 ரன்களைக் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இறுதியில், 50 ஓவர்களில் 4 விக்கெட்களை மட்டுமே இழந்த ஆஸ்திரேலியா 350 ரன்களைக் குவித்தது.

பின்னர் ஆடத் தொடங்கியது இந்தியா. ஷேவாக் வழக்கம் போல வேகமாக ஆடி வேகமாக அவுட் ஆனார். 30 பந்துகளில் 38 ரன்களைச் சேர்த்தார் ஷேவாக். ஆனால் மறு முனையில் இருந்த சச்சின் தீபாவளிப் பட்டாசாக பொறிந்து தள்ளிவிட்டார்.

சுயநலனுக்காக ஆடுகிறார், சரிவர ஆடுவதில்லை என்ற அவப் பெயரை நீக்கும் வகையில் பழைய சச்சினாக மாறி வெளுத்துக் கட்டினார். எத்தனை காலமாச்சு இப்படி ஒரு சச்சினைப் பார்த்து என்று ரசிகர்கள் குதூகலித்துப் போகும் வகையில் இருந்தது சச்சினின் அபார ஆட்டம்.

பழைய ஸ்டைலில் படு கேஷுவலாக அவர் காட்டிய பேட்டிங் ரசிகர்களை உற்சாகத்தில் மூழ்கடித்தது. வந்த பந்துகளையெல்லாம் பவுண்டரிகளுக்கு விரட்டி வேகமாக ரன்களைக் குவித்தார் சச்சின்.

ஆனால் மறு முனையில் வீரர்கள் வருவதும், போவதுமாக இருந்தனர். கம்பீர் 8, யுவராஜ் 9, டோணி 6 என பொறுப்பே இல்லாமல் அவுட் ஆகிச் சென்றனர். ஆனாலும் சச்சினின் அதிரடி குறையவில்லை. தொடர்ந்து நொறுக்கித் தள்ளிய சச்சின் இந்திய அணியை வெற்றிக்குத் தேவையான இலக்குக்கு அருகில் கொண்டு வந்து நிறுத்தினார்.

அவருக்குத் துணையாக நின்ற ஒரே பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா மட்டுமே. அவரும் சிறப்பாக ஆடினார் 3 சிக்சர்கள், 3 பவுண்டரிகளுடன் 59 பந்துகளில் 59 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார் ரெய்னா.

சச்சின் 141 பந்துகளை மட்டுமே சந்தித்து 175 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தபோது இந்தியாவின் வெற்றி நம்பிக்கை சரிந்தது.

பின்னர் வந்தவர்களில் ஜடேஜா சற்று வேகமாக ஆடி 23 ரன்களைக் குவித்தார்.

கடைசி ஓவரில் 8 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற திரில்லான நிலை ஏற்பட்டது. எப்படியாவது எடுத்து விடுவார்கள் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் இருந்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஜடேஜா ரன் அவுட் ஆக இந்தியாவின் நம்பிக்கை தகர்ந்து போனது.

இறுதியில், 49.4 ஓவர்களில் இந்தியா அனைத்து விக்கெட்களையும் இழந்து 347 ரன்களில் ஆட்டமிழந்து வெறும் 3 ரன்களில் தோல்வியைத் தழுவியது.

இந்தியா தோல்வியைத் தழுவினாலும், சச்சின் தனது அபாரமான ஆட்டத்துக்காக ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார்.

புதிய சாதனை...

நேற்றைய ஆட்டத்தில் 17,000 ரன்களைக் கடந்து புதிய உலக சாதனையை நிகழ்த்தினார் சச்சின் .

0 comments: