இந்திய பெண் கொடூர கொலை-கணவர் கைது

கைகளைத் துண்டித்து தனது மனைவியைக் கொலை செய்த இந்தியரை லண்டன் போலீஸார் கைது செய்துள்ளனர்.கொல்லப்பட்ட 28 வயதான அந்த இளம் பெண்ணின் பெயர் கீதா அலாக். லண்டனில் உள்ள மிகப் பெரிய ஆசிய ரேடியோ நிறுவனமான சன்ரைஸ் ரேடியோவில் வரவேற்பாளராக பணியாற்றி வந்தார்.திங்கள்கிழமை மாலை இவர் லண்டனுக்கு வெளியே கைகள் துண்டிக்கப்பட்ட நிலையில் மிகக் கொடூரமான நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்.

மேற்கு லண்டன் புறநகரான கிரீன்போர்ட் என்ற இடத்தில் அவர் கிடந்தார். கைகள் துண்டிக்கப்பட்டது போக தலையிலும் காயம் காணப்பட்டது. இதையடுத்து அவரை மருத்துவமனைக்குக் கொண்டு போய் சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.திங்கள்கிழமை மாலை பணி முடிந்து தனது இரு குழந்தைகளை பள்ளியிலிருந்து அழைத்து வருவதற்காக கிளம்பிச் சென்றபோது கீதா தாக்கப்பட்டிருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்தக் கொலையைச் செய்ததாக சந்தேகத்தின்பேரில் கீதாவின் கணவர் உள்ளிட்ட 6 பேரை போலீஸார் கைது செய்துள்ளதாக தெரிகிறது. இருப்பினும் அதுகுறித்து போலீஸார் இதுவரை முறைப்படி அறிவிக்கவில்லை.கீதாவும், அவரது கணவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த சம்பவம் லண்டன் நகரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கிரீன்போர்ட் மற்றும் அதற்கு அருகில் உள்ள செளத்ஹால் பகுதிகளில் பஞ்சாபி மக்கள் அதிகம் பேர் வசிக்கின்றனர். கீதாவும் பஞ்சாபிதான். லண்டனிலேயே அதிக அளவில் பஞ்சாபிகள் வசிக்கும் பகுதி செளத்ஹால் மற்றும் கிரீன்போர்ட் என்பது குறிப்பிடத்தக்து. செளத்ஹாலில் கீதாவின் வீடு உள்ளது.கீதா இங்கிலாந்திலேயே பிறந்து வளர்ந்தவர். அவரது கணவர் பஞ்சாபில் பிறந்தவர் ஆவார்.

ஒரு ஆண்டுக்கு முன்பு இருவரும் பிரிந்து விட்டனர். அவர்களின் இரு குழந்தைகளையும் பராமரிக்கும் உரிமை கீதாவுக்குக் கிடைத்தது. இந்த நிலையில் அவர் கொல்லப்பட்டுள்ளார்.கீதா கைகள் துண்டிக்கப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தபோது அவரை வேடிக்கை பார்க்க நிறையப் பேர் கூடியுள்ளனர். ஆனால் யாருமே அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முயலவில்லையாம். அவரை விரைவாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருந்தால் ஒரு வேளை உயிர் பிழைக்க வைத்திருக்கலாம் என போலீஸார் வேதனையுடன் கூறினர்.

0 comments: