மெரீனா கடற்கரையில் கிரிக்கெட் விளையாட தடை

தமிழக தலைமைச் செயலர் தலைமையில் நேற்று மாலை நடந்த கூட்டத்தில், மெரீனா கடற்கரையில் கிரிக்கெட் விளையாட தடைவிதிக்கப்பட்டது. இதுகுறித்து சென்னை மாநகர கமிஷனர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை: மெரீனா கடற்கரையின் உட்புறச்சாலை பகுதியில், இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடி வருவது பொதுமக்களுக்கும், வாகன போக்குவரத்திற்கும் இடையூறாக இருந்து வருகிறது என்று, பல தரப்பிலிருந்தும் புகார்கள் வந்தன. இந்த புகார் சம்பந்தமாக, தமிழக அரசின் தலைமைச் செயலர் தலைமையில்,சென்னை மாநகர கமிஷனர், மாநகராட்சி கமிஷனர் மற்றும் அதிகாரிகள் பங்குபெற்ற கூட்டம் நேற்று மாலை நடந்தது. இக்கூட்டத்தில், மெரீனா கடற்கரையில் கிரிக்கெட் விளையாடுவதால், பொதுமக்களுக் கும், வாகன போக்குவரத்திற்கும் பெரும் இடையூறுகள் ஏற்பட்டு வருவதும், பல கோடி ரூபாய் செலவில் அழகுபடுத்தப்பட்டுள்ள மெரீனா கடற்கரைக்கு சேதம் ஏற்படும் என்று அறியப்பட்டதன் அடிப்படையில், உடனடியாக கிரிக்கெட் விளையாட தடை விதிப்பதென முடிவெடுக்கப்பட்டது. கிரிக்கெட் விளையாடுவோர், சென்னை நகரிலுள்ள அனைத்து மாநகராட்சி விளையாட்டு மைதானங்களில் விளையாடிக் கொள்ளலாம். சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான பத்து மண்டலங்களில் அமைந்துள்ள 228 மாநகராட்சி விளையாட்டு மைதானங்களை கிரிக்கெட் விளையாட பயன்படுத்தவும், இளைஞர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

0 comments: